மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அசோகன் - நான் சந்தித்த பிரபலங்கள் - 51

அசோகன் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

News image
Updated On :29 மார்ச் 2026, 4:04 am IST

ஆண்டனி என்ற இயற்பெயரைக் கொண்ட எஸ். ஏ. அசோகன் திருச்சியில் 1931-ஆம் ஆண்டு, மே 20-இல் பிறந்தார். அங்குள்ள புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சென்னை வந்து 'ஒளவையார்' படத்தில் முதன் முதலில் நடித்தார்.

ஆண்டனி என்ற பெயரை டி. ஆர். ராமண்ணாதான் அசோகன் என்று மாற்றினார். 'கார்த்திகை தீபம்', 'இது சத்தியம்', 'மணப் பந்தல்' ஆகியவை இவர் நடித்த மறக்க முடியாத படங்கள். 'உயர்ந்த மனிதன்' படத்தில் இவர் நடித்த காட்சியை அவருடன் நடித்த சிவாஜி மிகவும் பாராட்டினார். சரஸ்வதி என்ற மேரிஞானம் என்பவர் மனைவியானார். ஒரு மகன் வின்சென்ட் வில்லனாக நடித்துவருகிறார்.

சொந்தக் குரலில் அசோகன் அருமையாகப் பாடுவார் என்பதற்கு 'இறந்தவனைச் சுமந்தவனும் இறந்திட்டான். இதை இருப்பவனோ எண்ணிப்பார்க்க மறந்திட்டான்...' என்ற பாடல் ஓர் உதாரணம்.

படப்பிடிப்புக்கு வருவோர்க்கெல்லாம் எம். ஜி.ஆர். சாப்பாடு போடுவார். அவரைப் பின்பற்றி எனக்குத் தெரிய இருவர் படப்பிடிப்புக்கு வந்தால், பத்துப்பேராவது சாப்பிடலாம் என்ற அளவில் காரியரில் அசைவம் கொண்டு வருபவர் அசோகன்; சைவம் கொண்டு வருபவர் மேஜர் சுந்தர்ராஜன்.

இவரை, ஜாவர் சீதாராமன் எழுதிய கதைக்கு நான் வசனம் எழுதிய 'தூண்டில் மீன்' படப்பிடிப்பில் 1974-இல் சந்தித்தேன். அவரிடம் வசனத்தைப் படித்து விட்டு, 'இது ஒரு காவல் அதிகாரியின் வேடம். தயவு செய்து அதிகமான கோணங்கிச் சேட்டைகள் பண்ணாமல் கௌரவமாக நடியுங்கள்' என்று கூறினேன்.

அவர் சிறிதும் கோபப்படாமல் என்னிடம், 'அண்ணே, நான் கௌரவமாகத்தான் நடிச்சுக்கிட்டு இருந்தேன். டி.ஆர்.ராமண்ணாவின் 'நான்' படத்தை மக்கள் மிகவும் விரும்பியதால் எல்லாப் படங்களிலும் அப்படியே நடிக்க ஆரம்பித்து விட்டேன்' என்று கூறினார்.

இதற்குப் பிறகு என் இயக்கத்தில் 'அச்சாணி', 'அன்பே சங்கீதா' ஆகிய படங்களில் நடித்தார். நான் 'அச்சாணியில் ஒரு கௌரவ வேடம்தான். மூன்று நாள்கள் வந்தால் போதும், உங்கள் சம்பளம் எவ்வளவு?' என்று கேட்டேன்.

அவர் உடனே, 'எம். ஜி.ஆர். சம்பளம் ஒரு நாள் ஆனாலும் ரூ. ஒரு லட்சம். கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் உள்ள இடம், கட்டடமெல்லாம் அவர் வாங்கிக் கொடுத்ததுதான்' என்று சொல்லி, என்னை காரில் கூட்டிக் கொண்டு போய்க் காட்டினார்.

எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்து தேர்தல் வந்ததால் அவரது 'நேற்று இன்று நாளை' படம் வெளியாகத் தாமதமானாலும் லாபம் கிடைத்தது என்று கூறினார். அதை எல்லாம் பார்த்து விட்டு அவருக்கு என்ன சம்பளம் கொடுப்பது என்று யோசித்தேன். அதை அவர் புரிந்துகொண்டு என்னிடம், 'எவ்வளவு தருவீர்கள்?' என்று கேட்டார்.

'நாள் ஒன்றுக்கு என்னால் 500 ரூபாய் தர முடியும். மூன்று நாள்களுக்கு 1500 ரூபாய்' என்றேன்.

உடனே சிறிதும் தாமதிக்காமல் சம்மதித்து விட்டு, 'இந்த மூணு நாள் நான் ஷூட்டிங்குக்குப் போனால் என் மனைவி சரசு கோழி சூப் தருவா... இல்லைன்னா கூப்பிட்டாக் கூட ஏன்னு கேக்க மாட்டா!' என்று கூறி விட்டு மாடியிலிருந்து 'சரசு, அண்ணனுக்கு சூப் கொடுத்து விடு!' என்றார். இதை எம். ஆர். ராதா பாணியில் செய்து விட்டு, 'எனக்கு ராதா அண்ணனை ரொம்பப் பிடிக்கும்' என்றார்.

என் 'மீனாட்சி குங்குமம்' வெளிப்புறப் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்தபோது அதில் ஸ்ரீப்ரியாவின் அப்பாவாக நடிக்கச் சம்மதித்து விட்டு என்னை அவர் வீட்டுக்குக் கூப்பிட்டார்.

அப்போது என் பால்ய நண்பர் பழ. கருப்பையாவையும் பாரதிராஜாவின் தம்பி ஜெயராஜையும் என்னுடன் கூட்டிச் சென்றேன். அவர்களுடன் சிறிது நேரம் மனம் விட்டுப் பேசி விட்டு என்னிடம், 'இந்தக் கோடை அக்னி வெயில் எனக்குத் தாங்காது. எனக்குப் பதிலாக எல். வி. ராமதாஸை நடிக்கச் சொல்லுங்கள்' என்று கூறிவிட்டு அவருக்கு இவரே போன் செய்து, என் படத்தில் நடிக்க வைத்தார்.

அவர் வீட்டிலிருந்து எங்களை வழியனுப்ப வந்தவர், அங்கு ஹாலில் ஒரு பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்திருந்த மன வளர்ச்சி இல்லாத அவரது மகனிடம், 'அங்கிளுக்கு கைக் காட்டு' என்றார். இன்னும் அந்த நினைவு என்னை விட்டுப் போகவில்லை.

1978-இல் என் மகள் பிறந்த போது நான் வெளிப்புறப் படப்பிடிப்பில் இருந்தேன். என் வீட்டுக்கு வந்து என் மகளுக்குக் கொலுசு, வளையல் போட்டு, ' அண்ணனிடம் நான் வந்ததாகச் சொல்லுங்கள்' என்று என் மனைவியிடம் சொல்லிச் சென்றிருக்கிறார்.

கடைசியாக இவரை நான் விஜயா மருத்துவமனையில் பார்க்கச் சென்ற போது, அப்போதும் எனக்கு அவர் மனைவியிடம் 'சூப் கொடு' என்றார். அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மா வந்து ஒரு பேப்பரில் சுற்றி இருந்த பணக்கட்டைக் கொடுத்துவிட்டு, ' சி.எம். பார்த்துவிட்டு வரச்சொன்னார்' என்று சொல்லிச் சென்றார். பிறகு யாரும் அவரைப் பார்க்க முடியாத நிலையில் 1982-ஆம் ஆண்டு நவம்பர் 19-இல் காலமானார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.