உலகின் முன்னணி செய்யறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிநவீன ஏஐ மாடல்களை வெளிநாட்டினர் பயன்படுத்த அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.
ஆந்த்ரோபிக் நிறுவனம் ‘கிளாட் ஃபேபிள் 5’ (Claude Fable 5) மற்றும் ’மித்தோஸ் 5’ (Mythos 5) என்ற அதிநவீன ஏஐ மாடல்களை அறிமுகம் செய்தது.
இந்த ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி கணினி மென்பொருள்கள், நெட்வொர்க் கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றில் உள்ள பலவீனங்களைக் கண்டறியும் அதிநவீன திறன்கொண்டவை என்று தொழில்நுட்ப நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பயன்படுத்தும் பழைய வெர்சன் மென்பொருள்களில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகளை இந்த ஏஐ மாடல்கள் எளிதில் கண்டுபிடித்துவிடும் எனக் கூறப்படுகிறது.
இது தவறானவர்களின் கைகளுக்கு கிடைத்தால் மிகப் பெரிய சைபர் தாக்குதல்கள் நடத்தவும், மோசடியில் ஈடுபடவும் வாய்ப்பு இருப்பதாக கவலைகள் எழுப்பப்பட்டன.
இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த இரண்டு மாடல்களையும் பிற நாட்டினர் பயன்படுத்த அமெரிக்க வர்த்தகத் துறை தடை விதித்துள்ளது.
அமெரிக்கர்களைத் தவிர, அமெரிக்காவில் பணிபுரியும் பிற நாட்டு ஊழியர்களும், அமெரிக்கக் குடியுரிமை இல்லாத எவரும் இந்த மாடல்களைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிற நாடுகளில் கிளாட் ஃபேபிள் 5 மற்றும் மித்தோஸ் 5 ஏஐ மாடல்கள் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.
இதுவரை, ஏஐ மாடல்களை உருவாக்கவும் இயக்கவும் பயன்படும் சிப்புகள் மற்றும் ஹார்டுவேர் பொருள்கள் மீதே பெரும்பாலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. ஆனால், ஒரு ஏஐ மாடலுக்கே கட்டுப்பாடு விதிப்பது இதுவே முதல்முறை.
அமெரிக்க அரசு பிறப்பித்த உத்தரவு என்ன?
கிளாட் ஃபேபிள் 5 மற்றும் மித்தோஸ் 5 ஏஐ மாடல்களுக்கு கட்டுப்பாடு விதித்து, அமெரிக்க வர்த்தக அமைச்சகம் ஜூன் 12 ஆம் தேதி உத்தரவு ஒன்றை பிறப்பித்ததாக ஆந்த்ரோபிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டது.
அதில், “கிளாட் ஃபேபிள் 5 மற்றும் மித்தோஸ் 5 ஏஐ மாடல்களை வெளிநாட்டினர் பயன்படுத்துவதை நிறுத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையானது வெளிநாடுகள், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் உள்பட அனைவருக்கும் பொருந்தும். ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் பணிபுரியும் வெளிநாட்டினருக்கும் இது பொருந்தும்.
இதன் விளைவாக, இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர் அல்லாத பிற நாட்டினரால் இனி இந்த இரண்டு மாடல்களையும் பயன்படுத்த முடியாது. அமெரிக்க அரசு அதிகாரிகளுடன் இணைந்து இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகிறோம். தற்போதைக்கு இந்த மாடல்களை முடக்குவதைத் தவிர, வேறு வழியில்லை.
பிற நாட்டு வாடிக்கையாளர்கள் கிளாட் ஃபேபிள் 5 மற்றும் மித்தோஸ் 5 ஏஐ மாடல்களை அணுகுவதை உடனடியாக நிறுத்துகிறோம். மற்ற மாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தப் பாதிப்பும் இருக்காது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டினருக்கு தடை விதிக்க காரணம் என்ன?
ஃபேபிள் 5 மாடலில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மீறவோ, அவற்றை முறியடிக்கவோ முடியும் என்று அமெரிக்க அரசு கருதுகின்றது. இந்த பாதுகாப்பு அம்சங்கள், சக்திவாய்ந்த இணையப் பாதுகாப்புத் திறன்களைப் பயனர்கள் அணுகுவதைத் தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டவை என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த மேம்பட்ட செய்யறிவு அமைப்புகள் தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், அவர்கள் அமெரிக்க நிறுவனங்களின் மென்பொருள் குறைபாடுகளைக் கண்டறியவோ அல்லது இணையத் தாக்குதல்களை நடத்தவோ பயன்படுத்தப்படலாம் என்று அரசுத் தரப்பில் கவலை எழுப்பப்பட்டுள்ளது.
’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ இதழ் வெளியிட்ட தகவலின்படி, “குறிப்பிட்ட இரு ஆந்த்ரோபிக் மாடலைக் கொண்டு அமேசான் நிறுவனம் சில மென்பொருள்களின் குறைபாடுகளை ஆராய்ந்ததாகவும், அந்த முடிவுகளை அமெரிக்க வர்த்தகத் துறையுடன் பகிரப்பட்டதன் விளைவாகவே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது” எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஆந்த்ரோபிக் நிறுவனம், ஏற்கெனவே அறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு வரும் சிறிய குறைபாடுகள்தான், இதுபோன்ற குறைபாடுகளை மற்ற ஏஐ மாடல்களிலும் கண்டறிய முடியும். ஆனால் இதற்காக முழுமையாக முடக்குவது நியாயமற்றது என்று விளக்கம் தெரிவித்துள்ளது.
ஆனால், சக்திவாய்ந்த ஏஐ மாடல்களை வெறும் தொழில்நுட்ப தயாரிப்புகளாக மட்டும் பார்க்காமல், தேசிய பாதுகாப்பு சார்ந்த விஷயமாக கருதுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும், பிற நாடுகளுக்கும் என்ன பாதிப்பு?
இதுவரை செய்யறிவு மாடல்களுக்குப் பயன்படுத்தப்படும் சிப்புகள் மற்றும் ஹார்டுவேர்களுக்கு மட்டுமே கட்டுப்பாடு விதித்து வந்த அமெரிக்கா, தங்கள் நாட்டு நிறுவனத்தின் செய்யறிவை யாரெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கத் தொடங்கியுள்ளது.
ஏஐ மாடலை தேசிய பாதுகாப்பு பிரச்னையாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கா, இனிவரும் காலங்களில் அனைத்து செய்யறிவு மாடல்களையும் இதே கண்ணோட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தும்.
ஒரு நாட்டின் தொழில்நுட்பத்தை சார்ந்து இருக்கும் பிற நாடுகளுக்கு இதுவொரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
இதுகுறித்து ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருப்பதாவது:
”உலகமயமாக்கல் இறந்துவிட்டது. உலகின் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அணுகல் தங்களுக்கு எப்போதும் இருக்கும் என்று எந்தவொரு நாடும் இனிக் கருத முடியாது.
வெளிநாட்டு செய்யறிவு நிறுவனங்களை முழுமையாகச் சார்ந்திருப்பதை விடுத்து, இந்தியா உள்நாட்டுச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். இந்தியா தனது சொந்த இறையாண்மை கொண்ட செய்யறிவை விரைவாக உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் Vs ஆந்த்ரோபிக்
டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுக்கும், ஆந்த்ரோபிக் நிறுவனத்துக்கும் கடந்த சில மாதங்களாக பிரச்னை நீடித்து வரும் சூழலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில், உள்நாட்டு கண்காணிப்பு மற்றும் ராணுவ பயன்பாட்டுக்காக ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் செய்யறிவை பயன்படுத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்க அரசு முன்வைத்தது.
ஆனால், ராணுவத்தின் அழிவு வேலைகளுக்காக தங்களின் தொழில்நுட்பத்தை பயன்படுட்த அனுமதிக்க முடியாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் மறுத்துவிட்டது.
இதனிடையே, அமெரிக்க அரசு கவலைத் தெரிவிக்கும் இரு ஏஐ மாடல்களைப் பயன்படுத்தி அந்நாட்டில் உள்ள மோசமானவர்கள் அமெரிக்காவின் மீதோ, பிற நாட்டினரின் மீதோ தாக்குதல் நடத்த மாட்டார்களா? என்று இணையத்தில் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
Summary
Anthropic AI models banned by the US government! Why? For what reason? What is the danger?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
செய்யறிவு, உங்கள் வேலையைப் பறிக்கும் என்று நம்பமாட்டேன்! அண்ணாமலை பேச்சு

அமெரிக்கா - ஈரான் போா் : ஜெனீவாவில் நாளை அமைதி ஒப்பந்தம்? டிரம்ப் நம்பிக்கை

அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்

செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!
விடியோக்கள்

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


