உணவுப் பொருள்களின் பெயர்கள், ஹெல்த்தி, நேச்சுரல் போன்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டிருந்தால் அவற்றைக் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது என்பதைத்தான் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுப்பியிருக்கும் நோட்டீஸ் வெளிப்படுத்தியிருக்கிறது.
அப்படியென்றால், உணவுப் பொருள்களின் லேபிள்களை நம்பித்தான் மக்கள் அவற்றை வாங்குகிறார்களா? உணவுப் பொருள்களின் உண்மைத் தன்மையை எவ்வாறு உறுதி செய்துகொள்வது என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.
ஆரோக்கியமானது (ஹெல்த்தி), இயற்கையானது (நேச்சுரல்) பல்வகை தானியங்கள் (மல்டி-கிரெய்ன்), தோட்டத்திலிருந்து நேரடியாகப் பெறப்பட்டது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்த உணவுப் பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள் இருப்பதாகக் குற்றம்சாட்டி எஃப்எஸ்எஸ்ஏஐ (FSSAI) நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அதாவது, உணவு பாக்கெட்டுகளில் இருக்கும் லேபிள்களில், இதுபோன்ற சொற்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஆனால், இதனை உறுதி செய்யும் வகையில் உணவுப் பொருள்கள் இல்லாமல், ஆரோக்கியமான, தரமான பொருள்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும் வகையில் மட்டுமே இந்த லேபிள்கள் இருக்கின்றன என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிலும் சில பிராண்ட் பெயர்களே ஹெல்த்தி, நேச்சுரல் என்று இருப்பது மக்களை நிச்சயம் திசைதிருப்பும். அதனால்தான், உணவுப் பாக்கெட்டுகளில் மக்களை ஏமாற்றும் வகையில் தவறான பிராண்ட் பெயா்கள், லேபிள்களை பயன்படுத்தும் 15 நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
எந்தெந்த நிறுவனங்கள்?
நாட்டில் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்யும், 'உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிா்ணயச் சட்டம், 2006'-ஐ மீறியதாக இமாமி ஹெல்த்தி மற்றும் டேஸ்டி, ஹெல்த்தி எயிட், தி ஹெல்த்தி ஃபேக்டரி, ஹெல்த்தி மாஸ்டா், ஹெல்த்தி சாய்ஸ், பிளான் பி மற்றும் நியூஹொ்ப்ஸ், ட்ரூவி உள்ளிட்ட 15 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் நோட்டீஸ் பிறப்பித்ததற்கான காரணத்தையும் அது வெளிப்படுத்தியிருக்கிறது.
கொல்கத்தாவைச் சோ்ந்த இமாமி குழுமத்தின் இமாமி ஹெல்த்தி மற்றும் டேஸ்டி என்ற பெயா் நுகா்வோரை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.
பிளான் பி நிறுவனம் தனது பொருள்களை தாவரங்கள் அடிப்படையிலான வீகன் (தீவிர சைவம்) என விளம்பரம் செய்கிறது. ஆனால், இவ்வாறு விளம்பரம் செய்வதற்கான எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமத்தை முன்கூட்டியே அந்த நிறுவனம் பெறவில்லை.
ஹெல்த்தி ஃபேக்டரியின் ‘பூஜ்ஜிய மைதா முழுமையான கோதுமை பிரட்’, உண்மையில் சக்கி ஆட்டா மாவு மற்றும் கோதுமை குளூட்டன் (கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்களில் இருக்கும் குளூட்டன் எனும் புரதம்) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவு.
இதேபோன்று, 'மைதா இல்லாத பீட்சா பேஸ்' என்ற தயாரிப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது; ஆய்வில், மைதா இல்லாத என்ற கூற்று விதிமுறைகளை மீறுவதாகத் தெரிவதாக எஃப்எஸ்எஸ்ஏஐ குறிப்பிட்டுள்ளது.
நியூஹொ்ப்ஸின் ‘உண்மையான வைட்டமின்’ - இதன் வணிகப் பெயர் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது மற்றும் உணவுத் தரக்கட்டுப்பாட்டின் விதிகளுக்கு பொருந்தக்கூடிய வகையில் இல்லை; ஏனெனில், உண்மையான சத்துகள் (ட்ரூ வைட்டமின்) என்ற சொல் அந்த விதிமுறைகளின் கீழ் வரையறுக்கப்படவோ அல்லது அங்கீகரிக்கப்படவோ இல்லை.
ஹெல்த்தி மாஸ்டர் மற்றும் விஷன் டு சேர்வ் ஹெல்த்தி - ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதே இலக்கு என்பதை அர்த்தமாக்கும் இப்பெயர்கள் உண்மையில் உணவுப் பொருள் தயாரிப்பின் தன்மை குறித்து நுகர்வோரைத் தவறாக வழிநடத்தக்கூடும்.
ட்ரூவி நிறுவனத்தின் ‘ஹெல்த்தி மிக்ஸ் சைவ சிப்ஸ்’, ‘ஹெல்த்தி ராகி சிப்ஸ்’, ஹெல்த்தி மாஸ்டா் நிறுவனத்தின் ‘ஆரோக்கியமான உணவை வழங்கும் தொலைநோக்குத் திட்டம்’, ஹெல்த்தி சாய்ஸ் நிறுவனத்தின் ‘ஆரோக்கியமான வாழ்வுக்கு ஆரோக்கியமான உணவு’ போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றில் ஏராளமான உள்பொருள்களால் சேர்த்து தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதால் எஃப்எஸ்எஸ்ஏஐ விதிகளை மீறும் வகையில் உள்ளது.
ஸ்டோரியா மாதுளை பழச்சாறு என்ற லேபிளைப் பார்த்ததும் வெறும் மாதுளை பழச்சாறு என்று மக்கள் தவறாகக் கருதலாம். ஆனால் அதில் வெறும் 4 சதவிகித மாதுளை பழச்சாறு மட்டுமே இருக்கிறது என்பதுதான் உண்மையாம்.
இதையடுத்துதான் மேற்கண்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை கேட்கும் எவருக்கும் உண்மையில் மக்கள் இந்த லேபிள்களைப் பார்த்து ஏமாந்துதான் பொருள்களை வாங்குகிறார்களா என்ற கேள்வி எழலாம்.
கடந்த 2023ஆம் ஆண்டு 'சயின்ஸ்டேரக்ட்' (ScienceDirect) என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் இதற்கான பதில் வெளியாகியிருக்கிறது.
நேச்சுரல் என்ற வார்த்தை, நாட்டில் விற்பனையாகும் பெரும்பாலான உணவுப் பொருள்களின் லேபிள்களில் இடம்பெற்றுள்ளன. நுகர்வோர்களும் இந்த லேபிள்களில் இருக்கும் சொற்களை உண்மை என நினைத்து, மிக மகிழ்ச்சியோடு, ஆரோக்கியமான உணவை வாங்குவதாகக் கருதுகிறார்கள்.
'சத்தான', 'சத்துகள் சேர்க்கப்பட்ட' என்ற வார்த்தைகளை சந்தைப்படுத்துதலின்போது நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்துகின்றன. அதாவது உணவுப் பொருள்களின் சந்தைப்படுத்துதல் அல்லது விளம்பரப்படுத்துதல் பணிகளில் சத்தான, ஆரோக்கியமான, வைட்டமின் நிறைந்த, இயற்கையான என்ற சொற்கள் உண்மைக்கு மாறாக இணைக்கப்படுகின்றன. இதுதான் உண்மை.
அதாவது, உண்மையில் உடலுக்கு தீங்கிழைக்கும், ஒவ்வாத உணவுப் பொருள்களுக்கும், லேபிளில் கொழுப்பு இல்லாத, சத்துகள் நிறைந்த என்ற வாசகங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தால் போதுமானது. மக்கள் அதனை உடலுக்கு நல்லது என வாங்கிவிடுவார்கள். ஆனால், உணவு பொட்டலத்தின் பின் பக்கம் இருக்கும் உள்பொருள்களின் பட்டியலை சரிபார்க்க மறந்துவிடுகிறார்கள் என்கின்றது அந்த ஆய்வுக் கட்டுரை.
எப்படி சரிபார்ப்பது?
பொட்டலத்தின் முன் பகுதியின் பெயர் பொருட்டே அல்ல, பின்பகுதியில்தான் உண்மை நிலவரம் இருக்கிறது. எனவே எந்த உணவை வாங்கினாலும் அதன் பின்பகுதியில் இருக்கும் உள்பொருள்களின் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
உள்பொருள்கள் அனைத்தும் எடையின்படி பட்டியலிடப்பட்டிருக்கும். ஒரு உணவின் பட்டியலில் மூன்று இடங்களுக்குள் சர்க்கரை இருந்தால் அந்த உணவில் சர்க்கரை அதிகம் இருக்கிறது என்பது அர்த்தம்.
'நோ ஆடட் சுகர்' என்பது சர்க்கரை இல்லை என்று அர்த்தமல்ல
சர்க்கரை என்பதன் ஆங்கிலப் பெயர் சுகர். முன்பக்கம் நோ ஆடட் சுகர் என்று போட்டிருந்தால், சர்க்கரை சேர்க்காத உணவு என்பது உறுதியல்ல. அந்த பட்டியலில் சுகர் என்பதை குறிக்கும் வேறு சொல் இடம்பெற்றிருக்கலாம்.
மால்டோஸ், டெக்ஸ்ட்ரோஸ், கார்ன் சிரப், ஜாகரி, ஹனி போன்ற வார்த்தைகளும் சர்க்கரையைத்தான் குறிக்கும்.
எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம்
லேபிளில் இருக்கும் அனைத்துக்கும் இந்திய உணவுத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு சான்றளித்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ உரிமம் எண் இடம் பெற்றிருக்கும்.
சான்றிதழ் என்ற இடத்தில் உண்மையில் கலப்படம் இல்லாதது அல்லது இயற்கையானது என்று சான்றிதழ் பெற்றவை என இடம்பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம். அதுவும் பெயரளவில் அச்சிடப்பட்டிருந்தால்(?)
கையில் செல்போனை வைத்திருப்பது வெறும் ரீல்ஸ் பார்ப்பதற்கு அல்ல என்பதை உணர்ந்து, அதிகம் வாங்கும் பொருள்களின் உள்பொருள் பட்டியலைப் பார்த்து அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்துக் கொள்வது எப்போதுமே மக்களின் கடமையாகிறது.
லேபிளைப் பார்த்து வாங்குவதைக் கைவிட்டு, இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே சுகாதார நிபுணர்களின் அறிவுறுத்தல்! அதாவது சர்டிபிகேட் எல்லாமும் சர்டிபிகேட் அல்லவாம்.
ஆக, இனி கடைகளுக்குச் சென்று என்ன வாங்கினாலும் சரி, அப்படியே நம்பிவிட வேண்டாம்; ஒரு முறைக்கு இரு முறை எல்லாவற்றையும் உறுதி செய்துகொள்ளுங்கள்!
Summary
On how to verify whether the terms "healthy" and "natural" actually appear on a food product...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலா்கள் ஆய்வு
உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

சில்லறை பணவீக்கம் 3.93%! 5-ஆவது மாதமாக ஏற்றம்

ஏப்ரலில் சில்லறை பணவீக்கம் 3.48%
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu
இணையதளச் செய்திப் பிரிவு


