இரா. முருகனை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை: எழுத்தாளர் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

மறைந்த எழுத்தாளர் இரா. முருகனுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மறைந்த எழுத்தாளர் இரா. முருகன் / நடிகர் கமல்ஹாசன் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 8:19 pm IST

மறைந்த எழுத்தாளர் இரா. முருகனுக்கு நடிகரும் எம்பியுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புனைவு, அபுனைவு நூல்களை எழுதி வந்தவர் எழுத்தாளர் இரா. முருகன் (74). நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல வகை எழுத்திலும் தொடர்சியாக பங்களிப்பைச் செய்தவர்.

தினமணியில் தியூப்ளே வீதி என்கிற தலைப்பில் தன் வரலாற்றையும் எழுதி வரவேற்பைப் பெற்றார். உன்னைப் போல் ஒருவன், பில்லா - 2 ஆகிய திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவர்.

10க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், மேடை நாடகங்கள், ஏராளமான கட்டுரைகளை எழுதிய இரா. முருகன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார்.

இவரது மறைவுக்கு எழுத்தாளர்கள், வாசகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இரா. முருகன் மறைவுக்கு நடிகரும் மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’.

அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன்.

அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் இராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன்.

‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான்.

நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ இரா முருகன்”

சுஜாதா புகழ்ந்த அந்த இரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை.

சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். இரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல.

அன்புடன், முருகனின் நண்பன், தமிழின் காதலன் கமல்ஹாசன்” எனத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரபலமான தமிழக வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Kamal Haasan has expressed his condolences on the passing of writer Ra. Murugan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.