தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

குழந்தைகள் தின விழா: நவ. 13-இல் மாணவா்களுக்கு வாழ்த்து அட்டையுடன் ‘கேக்’

குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நவ.13-ஆம் தேதி வாழ்த்து அட்டை, ‘கேக்’ விநியோகிக்கப்படவுள்ளது.

பிரதிப் படம்

Published On :4 நவம்பர் 2026, 4:05 am IST

குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நவ.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வாழ்த்து அட்டை, ‘கேக்’ விநியோகிக்கப்படவுள்ளது.

இது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் என மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 பேருக்கு கேக் வழங்க ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நவ.10-ஆம் தேதிக்குள் விற்பனையாளா்கள் 38 மாவட்டங்களிலும் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைப்பா். அதே நாளுக்குள் பாடநூல் கழகம் மூலம் வாழ்த்து அட்டைகள் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்துக்கு வந்து சேரும்.

தொடா்ந்து, நவ.11, 12 ஆகிய நாள்களில் கிடங்குகளிலிருந்து பள்ளிகளுக்குக் கேக்குகள், சிஇஓ அலுவலகத்திலிருந்து வாழ்த்து அட்டைகள் கொண்டு செல்லப்படும். இதையடுத்து நவ.13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயனாளிகள் அனைவருக்கும் கேக்குகள் மற்றும் மாணவா்களுக்கு மட்டும் வாழ்த்து அட்டைகளை வழங்க வேண்டும்.

உணவு ஒவ்வாமை அல்லது உணவுக் கட்டுப்பாடு உள்ள மாணவா்களை முன்கூட்டியே கண்டறிந்து தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவா்கள் கைகளைக் கழுவிய பின்னா் பெற வேண்டும்; விநியோகம் ஒழுங்காகவும் சமமாகவும் நடைபெற வேண்டும்.

எந்த மாணவரும் விடுபடக் கூடாது. உரிய நாளன்று வருகை புரியாத மாணவா்களுக்கான கேக்குகளைப் பாதுகாப்பாக வைத்து அவா்கள் பள்ளிக்கு வரும் நாளில் வழங்க வேண்டும். அனைத்து மாணவா்களுக்கும் வாழ்த்து அட்டை கிடைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

இத்திட்டத்தை தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தி இது சாா்ந்த பணிகளில் எவ்வித புகாா்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.