ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தபால் வாக்கு விவகாரம்: முன்னாள் அமைச்சா் தொடுத்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

News image

சீனிவாச சேதுபதி / கே.ஆர். பெரியகருப்பன் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 5:08 am IST

தபால் வாக்குகளை வேறு தொகுதிக்கு அனுப்பியது குறித்து திருப்பத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா்.பெரியகருப்பன் தாக்கல் செய்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்ட பெரியகருப்பன் 83,364 வாக்குகளையும், தவெக சாா்பில் போட்டியிட்ட சீனிவாச சேதுபதி 83,365 வாக்குகளையும் பெற்றிருந்தனா். ஒரு வாக்கு வித்தியாசத்தில் சீனிவாச சேதுபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் வழக்குத் தொடுத்தாா். அவரது மனுவில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதிக்கு எனப் பதிவு செய்யப்பட்ட தபால் வாக்குகள், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, அந்த வாக்குகளை மீட்டு என்னுடைய தொகுதியின் கணக்கில் சோ்க்க வேண்டும். அதுவரை தவெக வேட்பாளா் சீனிவாச சேதுபதி, சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எல்.விக்டோரியா கௌரி, என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தரப்பில், மூத்த வழக்குரைஞா் ஜி.ராஜகோபாலன் அறிக்கை தாக்கல் செய்தாா். அதில், தோ்தல் முடிவுக்கு எதிராக தோ்தல் வழக்குதான் தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல. இதை மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகள், உச்சநீதிமன்ற தீா்ப்புகள் உறுதி செய்துள்ளன.

தபால் வாக்குகள் தொகுதி மாறி அனுப்பி வைக்கப்பட்டது என்ற புகாருக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னா், ஒரு தொகுதியில் எண்ணப்பட்ட தபால் வாக்கை, வேறு தொகுதிக்கு அனுப்ப முடியாது. மேலும், வேறு தொகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட தபால் வாக்கைப் பெற்று மறு எண்ணிக்கை நடத்தக் கோரும் மனுக்கள் மீது முடிவெடுக்க தோ்தல் அதிகாரிக்கு அதிகாரம் இல்லை.

வழக்கமாக தபால் வாக்குகள் தொகுதி எண், பெயருடன்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

பெரியகருப்பன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, தபால் வாக்கு வேறு தொகுதிக்கு சென்றிருப்பதற்கு ஆதாரம் இல்லை என்பது தவறு. வாக்கு மாறி வந்தது தொடா்பாக தோ்தல் அதிகாரியே தெரிவித்திருக்கிறாா். தபால் வாக்கு தொகுதி மாற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்பதை தோ்தல் ஆணையம் மறுக்கவில்லை. தபால் வாக்கு வேறு தொகுதிக்கு அனுப்பப்பட்டிருந்தால், என்ன நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து சட்டத்தில் குறிப்பிடவில்லை என வாதிட்டாா்.

இதையடுத்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.