முதல்வர் விஜய்யின் தனிச் செயலர்கள் நியமனம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலர்கள் கூட்டம்முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்தற்காலிக அவைத்தலைவராக கருப்பையா நியமனம்!அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே கடன் அளவு: முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பதில் தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!
/

நெஞ்சில் குடியிருக்கும்... முதல்வர் விஜய்யின் முதல் உரை!

முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரை

News image

முதல்வர் விஜய்யின் முதல் உரை

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

முதல்வராகப் பதவியேற்ற விஜய்யின் முதல் உரையில் அவர் பேசியதாவது, "என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றியடைய வேண்டும் என்றிருந்த ஒரு சாதாரணமான உதவி இயக்குநருக்குப் பிறந்த ஒரு பிள்ளையாக, எனக்கும் வாழ்க்கையில் வறுமையில் என்னவென்பது தெரியும், பசி என்றால் என்னவென்பதும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையிலிருந்து வரவில்லை.

உங்களை மாதிரிதான், உங்கள் குடும்பத்தில் ஒருவன் மாதிரிதான், உங்கள் பிள்ளை மாதிரிதான், உங்கள் அண்ணன் - தம்பி மாதிரிதான் நான் உணர்கிறேன்.

நீங்களும் என்னை அப்படி நினைத்ததால்தான், சினிமாவில் மிகப்பெரிய இடத்தை எனக்குக் கொடுத்தீர்கள். இப்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு, உங்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அரசியலுக்கு வந்த உங்கள் விஜய்யை 'நீ வா விஜய் பார்த்துக் கொள்வோம்' என்று சொல்லி, அவ்வளவு அன்பாகவும் அவ்வளவு உறவாகவும் என்னை ஏற்றுக்கொண்டீர்கள்.

இந்த நேரத்தில் இதனை நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பயணத்தில் எவ்வளவோ கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தாலும், என்னுடன் இருந்த உங்களுக்கும் ஏற்பட்ட கஷ்டங்களும் அவமானங்களையும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், என்னுடைய வலிகளையும் வேதனைகளையும் உங்களுடையதாக நினைத்துக் கொண்டு, என் கூடவே நின்று, இன்று 'சி. ஜோசப் விஜய் எனும் நான்' என்பதை உண்மையாக்கியிருக்கிறீர்கள்.

என்னுடைய உறவுகளே என்னுடைய சொந்தங்களே, நான் ஒன்றும் தேவதூதன் கிடையாது. நானும் ஓர் இயல்பான சாதாரண வாழ்க்கை வாழுகிற மனிதன்தான். நான் முன்னரே சொன்னபடி, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, உங்களை ஏமாற்ற மாட்டேன். எது சாத்தியமோ அதை மட்டும்தான் செய்வேன்.

அப்படியெனில், சாத்தியமற்றதைச் செய்ய மாட்டார்களா என்ற கேள்வியும் உங்களுக்கு எழும். இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், என்ன வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை என்னிடம் இருக்கிறது.

இன்றைக்கு நம் தமிழக அரசு இருக்கும் நிலைமையைப் பற்றியும் நான் சொல்ல வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 10 லட்சம் கோடி கடன் வாங்கி வைத்துவிட்டு, கஜானாவை வழித்து வைத்துவிட்டு, தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு போயிருக்கும் நிலையில்தான் இந்தப் பொறுப்பை நாம் கைகளில் எடுத்திருக்கிறோம்.

உள்ளே போய்ப் பார்த்தால்தான் தெரியும், எது எந்த நிலைமையில் உள்ளது என்று. என்ன இருக்கிறது, என்ன இல்லை என்பது தெரியும். அதையெல்லாம் பார்த்துவிட்டு, ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று விரும்புகிறேன்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், யாரையேனும் சந்திக்க வேண்டுமென்றால், முகத்தை மூடிக்கொண்டு சந்திக்கிறதோ உங்களுக்குத் தெரியாமல் மறைமுகமாகச் சந்திக்கிறதையோ நான் செய்ய மாட்டேன். எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக ஒளிவு - மறைவின்றி செய்வேன்.

இவ்வளவு பெரிய ஒரு பொறுப்பை என் கைகளில் கொடுத்துள்ளீர்கள். அதே நேரத்தில் எனக்கு கொஞ்சம் அவகாசமும் நீங்கள் கொடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

நான் சொன்னதையெல்லாம் படிப்படியாக நிறைவேற்ற நான் முயற்சிப்பேன். அதே நேரத்தில் எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுத்தால், உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் இருக்கும்.

இது உங்களுடைய ஆட்சி. பெண்கள் பாதுகாப்பில் சமரசமின்றி மிகவும் கண்டிப்பாக வைத்திருப்பேன். போதைப்பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகளை இன்றிலிருந்தே நான் எடுப்பேன். அதிலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது நம் அரசின் பொறுப்பு.

சட்டம் - ஒழுங்கில் எல்லோருக்குமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன்.

என்னை அவமானப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், என்னை கஷ்டப்படுத்தியவர்களாகவே இருந்தாலும், அவர்களும் என் மக்கள்தானே. நண்பர்களாக இருந்தாலும் எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள்தானே.

அடிப்படை விஷயங்களான கல்வி, ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்டவற்றில்தான் என்னுடைய முழுமுதல் கவனமும் செலுத்தத் தோன்றுகிறது.

மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாகூட நான் தொட மாட்டேன். எனக்கு அது அவசியமும் இல்லை. அது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இந்த விஜய் தவறு செய்ய மாட்டான். தவறு செய்யவும் விட மாட்டான் - அது யாராக இருந்தாலும்சரி. என்னுடைய அரசில் என் கூடவே இருப்பவர்களேயானாலும் விட மாட்டேன்.

ஒருவேளை அப்படிப்பட்ட எண்ணம் ஏதுமிருந்தால், 'நாம் ஜெயித்து விட்டோம், ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்கலாம்' என்ற எண்ணம் இருந்தால், இப்போதே இந்த நிமிடத்திலேயே அதனை அழித்து விடுங்கள்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், உழைக்கிற மக்கள் என எல்லோரும் நம் அரசில் நன்றாக இருப்பார்கள்.

'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதுதான் நமது சமரசமில்லாத அடிப்படைக் கோட்பாடு. சிறுபான்மைச் சகோதரர்களுடன் நமது அரசு கூடவே நிற்கும். இதில் எந்தவிதச் சந்தேகமும் வேண்டாம்.

Summary

Chief Minister Vijay's First Speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.