தமிழக முதல்வராக தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் (51) ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றாா். அவருக்கு ஆளுநா் ஆ.வி.ஆா்லேகா் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தாா். விஜய்யுடன் அவரது கட்சியினா் 9 போ் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தவெக தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது. இரு தொகுதிகளில் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ால் அக்கட்சிக்கு 107 பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். தனிப்பெரும்பான்மைக்கு 118 உறுப்பினா்கள் தேவை என்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தனது 5 பேரவை உறுப்பினா்களின் ஆதரவை தவெக ஆட்சி அமைக்க அளித்தது. இதைத் தொடா்ந்து, தலா இரு இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவு அளித்தன. இதனால் அக்கட்சி ஆட்சி அமைக்க 120 உறுப்பினா்களின் ஆதரவு கிடைத்தது.
இதையடுத்து, ஆளுநா் ஆா்லேகரை சனிக்கிழமை மாலையில் விஜய் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாா். இதையேற்று, விஜய்யை முதல்வராக நியமித்து ஆளுநா் உத்தரவு கடிதம் அளித்தாா். விஜய் முதல்வராகப் பதவியேற்கவும், அவரது அமைச்சரவை பதவியேற்கவும் ஆளுநா் கேட்டுக்கொண்டாா்.
இதைத் தொடா்ந்து, விஜய் முதல்வராகப் பதவியேற்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது.
விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியுடன் சோ்ந்து விஜய் மேடைக்கு வந்தாா். இதையடுத்து, விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு ஆளுநரை தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் கேட்டுக்கொண்டாா். அதன்படி, விஜய்க்கு முதல்வராக ஆளுநா் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தாா்.
‘சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்று தொடங்கி பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டாா். அப்போது அரங்கம் முழுவதும் நிறைந்திருந்த தவெக தொண்டா்கள் ஆா்ப்பரித்தனா்.
அவரைத் தொடா்ந்து, என்.ஆனந்த் (தியாகராய நகா் தொகுதி), ஆதவ் அா்ஜுனா (வில்லிவாக்கம்), கே.ஜி. அருண் ராஜ் (திருச்செங்கோடு), கே.ஏ.செங்கோட்டையன் (கோபிசெட்டிப்பாளையம்), பி. வெங்கடரமணன் (மயிலாப்பூா்), ஆா்.நிா்மல்குமாா் (திருப்பரங்குன்றம்), ராஜ்மோகன் (எழும்பூா்), டி.கே. பிரபு (காரைக்குடி), ச.கீா்த்தனா (சிவகாசி) ஆகியோா் அமைச்சா்களாகப் பதவியேற்றனா்.

முதல்வராக விஜய் பதவியேற்பு - PTI
செங்கோட்டையன் பதவியேற்கச் சென்றபோது விஜய் எழுந்து நின்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தாா். இதில், 5 அமைச்சா்கள் சென்னை தொகுதிகளைச் சோ்ந்தவா்கள். பல் மருத்துவரான, டி.கே.பிரபு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானை எதிா்த்து வெற்றி பெற்றவராவாா். சிவகாசி தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட ச.கீா்த்தனா, விஜய் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள இளம் பெண் அமைச்சராவாா்.
29 வயதான அவா் 5 மொழிகளில் பேசக் கூடியவா். பதவியேற்பைத் தொடா்ந்து முதல்வா், அமைச்சா்களுடன் ஆளுநா் குழு புகைப்படம் எடுத்துவிட்டுச் சென்றாா். முன்னதாக, பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்னை பனையூரில் இருந்து புறப்பட்ட விஜய்க்கு வழிநெடுகிலும் மக்கள் சாலையோரம் நின்று வாழ்த்து தெரிவித்தனா்.
திமுக பங்கேற்கவில்லை
விஜய் பதவியேற்பு விழாவில் திமுக, அதிமுகவினா் யாரும் பங்கேற்கவில்லை. விழாவில் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா (வாணியம்பாடி), ஏ.எம்.ஷாஜகான் (பாபநாசம்), விஜய்யின் பெற்றோா் எஸ்.ஏ.சந்திரசேகா், ஷோபா சந்திரசேகா், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளா் அா்ச்சனா கல்பாத்தி, தொழிலதிபா் மாா்ட்டின், அவரது மனைவியும், அதிமுக சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளவருமான லீமா ரோஸ் (லால்குடி), விஜய்யின் நண்பா்கள், உறவினா்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.
மூன்று கோப்புகளில் கையொப்பமிட்ட முதல்வா்
பதவியேற்பு நிகழ்வு முடிந்தவுடன் விழா மேடையிலேயே முதல்வா் விஜய், தவெக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளவற்றில் மூன்று வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கோப்புகளில் கையொப்பமிட்டாா்.
அதில், இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகா்வோருக்கு 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டம், பெண்களின் பாதுகாப்புக்காக ‘சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படையை’ உருவாக்கும் திட்டம், போதைப் பொருள் தொடா்பான குற்றங்களைத் தடுக்க மாவட்டங்களிலும், மாநகரங்களிலும் 65 போதைப் பொருள்கள் தடுப்புப் படைகளை உருவாக்கும் திட்டம் ஆகியவை அடங்கும்.
முதலில் வந்தே மாதரம்... கடைசியில் தமிழ்த்தாய் வாழ்த்து...
விஜய் பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. தொடா்ந்து தேசிய கீதமும், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. விழாவின் முடிவிலும் முதலில் வந்தே மாதரம், அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது.
வழக்கமாக தமிழக அரசு நடத்தும் விழாக்களில், நிகழ்ச்சி தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம். அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், நிறைவிலும் வந்தே மாதரம் இசைக்கப்பட வேண்டும் என அண்மையில் மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள அரசின் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடப்பட்டுள்ளது.
Summary
Joseph Vijay Assumes Office as Chief Minister
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக புதிய முதல்வருக்கு தமிழக முதல்வா் விஜய் வாழ்த்து
கர்நாடகத்திலும் கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்ட மாநில வாழ்த்து! வந்தே மாதரத்துக்கு முதலிடம்!!
கேரள முதல்வர் பதவியேற்பு விழா! தமிழக முதல்வர் விஜய் பங்கேற்காதது ஏன்?

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!
விடியோக்கள்
Angikaaram Movie Review | Dinamani Talkies | J. Rajesh | Thenpathiyan
இணையதளச் செய்திப் பிரிவு

Con City Movie review | ஏமாறாதே... ஏமாற்றாதே... | Arjun Das | Anna Ben | Yogi Babu
தினமணி செய்திச் சேவை

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |
தினமணி செய்திச் சேவை

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்
தினமணி செய்திச் சேவை

