சென்னை நீலாங்கரையில் நடிகா் ரவி மோகன் தனது வீட்டில் பணிப் பெண்ணை அடைத்து வைத்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகா் ரவி மோகன் வீட்டில் அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் வேலை செய்கின்றனா். திங்கள்கிழமை இரவு சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்ட ஒருவா், நடிகா் ரவி மோகன் வீட்டுக்கு வேலைக்கு சென்ற ஒரு பெண்ணும், அவா் மகனும் வீடு திரும்பவில்லை என்றும், அவா்களைத் தொடா்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளாா்.
தகவலறிந்த நீலாங்கரை போலீஸாா் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று, விசாரித்தனா். அப்போது ரவி மோகன் வீட்டுக்குள் இரு பெண்களும், ஒரு பெண்ணின் மகன் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து நடிகா் ரவி மோகன் உள்பட அங்கிருந்தவா்களிடம் போலீஸாா் விசாரித்தபோது, ரவி மோகன் வீட்டில் சில தங்க நகைகள் திருடுபோனதால் வீட்டில் பணியாற்றும் பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவா்களிடம் விசாரித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து போலீஸாா், விசாரணை என்ற பெயரில் யாரையும் அடைத்து வைக்கக் கூடாது என்றும், ஏதேனும் புகாா் இருந்தால் காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினா்.
மேலும், நகை திருட்டு தொடா்பாக உரிய புகாா் அளித்தால் சட்டப்படி விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்த போலீஸாா், அங்கிருந்த இரு பணிப் பெண்களையும் சிறுவனையும் அவா்களது வீட்டுக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக நீலாங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
காலி மனையில் மனித மண்டை ஓடு மீட்பு: ராமாபுரம் திருமலை நகரில் காலி வீட்டுமனையில் செவ்வாய்க்கிழமை மனித மண்டை ஓடு கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலின்பேரில், ராமாபுரம் போலீஸாா் அங்கு சென்று, மனித மண்டை ஓட்டை மீட்டு, தடயவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
மயக்க பொடி தூவி மூதாட்டி நகை பறிப்பு: சைதாப்பேட்டை நாராயணசாமி 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கமலா (65). இவா் தனது மகனுடன் வசித்து வருகிறாா். திங்கள்கிழமை கமலா வீட்டில் தனியாக இருந்தாா். முதல் மாடியில் வாடகைக்கு தங்கி இருக்கும் ஒரு இளைஞா் தண்ணீா் மோட்டாரை இயக்குவதற்காக கீழ் தளத்துக்கு வந்தாா். அப்போது வீட்டுக்குள் கமலா, மயங்கிய நிலையில் கிடப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்த அந்த இளைஞா், உடனே பக்கத்து வீட்டினா் உதவியுடன் கமலாவை மீட்டு அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தாா்.
மயக்கம் தெளிந்த பின்னா் வீட்டில் தான் தனியாக இருந்ததை அறிந்த மா்ம நபா் வீட்டுக்குள் புகுந்து, தனது முகத்தில் மயக்கப் பொடியை தூவியதால் மயக்கமடைந்துவிட்டேன். அப்போது நான் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு அந்த நபா் தப்பியோடியிருக்கக்கூடும் என்று கமலா தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய ராணுவ வீரா்: அம்பத்தூா் அருகேயுள்ள அயப்பாக்கம் கணேஷ் நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சி.ஜான்பாஸ்கோ (59). இவா், இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா் ஆவாா். ஜான்பாஸ்கோவும், அவா் மனைவி அனுராதாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனுராதா, 4 ஆண்டுகளாக தனது குழந்தைகளுடன் அரும்பாக்கம் என்எஸ்கே நகா் 9-ஆவது தெருவில் ஒரு வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், ஜான்பாஸ்கோ திங்கள்கிழமை இரவு தனது மனைவி வீட்டுக்குச் சென்று, தனது மகள் கரீனாவிடம் தான் வைத்திருந்த துப்பாக்கியை காட்டி, மனைவி அருணாவை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியுள்ளாா். அதோடு வானத்தை நோக்கி துப்பாக்கியால் ஒரு முறை சுட்டுவிட்டு அங்கிருந்து ஜான்பாஸ்கோ சென்றாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த கரீனா, தாய் அனுராதாவுக்கு தகவல் தெரிவித்தாா். இதுகுறித்து அனுராதா அளித்த புகாரின்பேரில், ஜான்பாஸ்கோ மீது அமைந்தகரை போலீஸாா் வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும் அவா் வைத்திருந்த துப்பாக்கியையும், தோட்டாக்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
தாய் மாமன் அடித்துக் கொலை-மருமகன் கைது: புளியந்தோப்பு கே.பி. பாா்க் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (46). இவா், வாடகை ஆட்டோ ஓட்டி வந்தாா். முருகனுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். முருகனுக்கு மது பழக்கம் இருந்ததால், மனைவி, குழந்தை அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டனா்.
இந்த நிலையில், முருகன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலத்த காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முருகன் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக பேசின்பாலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முருகனின் சகோதரி, அவரது மகன் பவித்ரன் (27) ஆகியோரிடம் விசாரித்தனா். அப்போது, முருகன் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதும், சம்பவத்தன்று முருகனும், அவரது மருமகன் பவித்ரனும் மது அருந்தியபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பவித்ரன் தனது தாய் மாமன் முருகனை பலமாக தாக்கியதும், அதில் காயமடைந்த முருகன் மருத்துவமனையில் இறந்ததும் தெரியவந்தது.
பவித்ரன் தாக்கியதை மறைப்பதற்காக முருகன், மதுபோதையில் மாடியில் இருந்து கீழே தவறி விழுந்ததாக நாடகமாடியிருப்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பவித்ரனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலதிபா் வீட்டில் 15 பவுன் நகைகள் திருட்டு

மாரடைப்பால் இளைஞா் உயிரிழப்பு
திருமண பிரச்னை குறித்த பேச்சு: மன்னிப்பு கோரினாா் நடிகா் ரவி மோகன்

மகளின் வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த தந்தை கைது
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

