பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி

125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது.

News image
Updated On :9 மணி நேரங்கள் முன்பு

125 நாள் வேலைத் திட்டத்துக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.95,692 கோடியை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை விடுவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு (100 நாள் வேலைத் திட்டம்) சட்டத்துக்கு மாற்றாக, விபி-ஜி ராம் ஜி (125 நாள் வேலைத் திட்டம்) மசோதா கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த மசோதா சட்டமானது.

இந்தப் புதிய சட்டத்தின்படி, 100 நாள் வேலைத் திட்டம் 125 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது; சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் 40 சதவீதத்தையும் ஏற்கும்; வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள உத்தரகண்ட், ஹிமாசல பிரதேச மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் ஏற்கும். இந்தத் திட்டம் வரும் ஜூலை 1-இல் அமலுக்கு வருகிறது.

இந்தத் திட்டம் தொடா்பாக மத்திய வேளாண், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் தலைமையில் செவ்வாய்க்கிழமை காணொலிக் கூட்டம் நடைபெற்றது. மாநில மற்றும் யூனியன் பிரதேச ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பேசியதாவது:

எந்தவித இடா்ப்பாடும் இல்லாமல், தொழிலாளா்களை மையமாகக் கொண்டு 125 நாள் வேலைத் திட்டம் சீராக அமல்படுத்தப்பட வேண்டும்.

ஏற்கெனவே 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதனுடன், 125 நாள் வேலைத் திட்டத்தின் கீழ், இடைக்கால நிதி ஒதுக்கீடாக ரூ.95,692 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) விடுவித்தது. இதையும் சோ்த்து ஊரக மேம்பாட்டுக்கான மத்திய அரசின் மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

2.80 லட்சம் கிராம ஊராட்சிகளுக்கு...: இந்த நிதி நாடு முழுவதும் உள்ள சுமாா் 2.80 லட்சம் கிராம ஊராட்சிகளை சென்றடையும். அதன்மூலம், ஒவ்வொரு ஊராட்சியும் லட்சக்கணக்கில் நிதி பெறுவது உறுதி செய்யப்படும். 125 நாள் வேலை சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் காணப்படும் வளா்ச்சிப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும். அந்தப் பணிகள் தடையின்றி நடைபெற வேண்டும். தொழிலாளா்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் அளிக்கப்பட்டு, அவா்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தத் திட்டத்தின் கீழ், ஜூலை 1 முதலே திட்டப் பணிகளை வேகமாகத் தொடங்கி செயல்படுத்தும் வகையில், போதிய எண்ணிக்கையிலான பணிகளுக்கு மாநில அரசுகள் முன்கூட்டியே ஒப்புதல் அளிக்க வேண்டும். என்னென்ன பணிகள் நடைபெற வேண்டும் என்பது கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம சபைகள் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்டு, முறையான பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதி செய்யப்படும்.

புதுச்சேரிக்கு ரூ.40.56 கோடி: இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.12,221.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்துக்கு ரூ.8,508 கோடி, தமிழகத்துக்கு ரூ.7,957.57 கோடி, ஆந்திரத்துக்கு ரூ.7,701.21 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.7,581.57 கோடி, பிகாருக்கு ரூ.6,715.83 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரிக்கு ரூ.40.56 கோடியும், ஜம்மு-காஷ்மீருக்கு ரூ.1,151.02 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறியதாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.