தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

உலகில் தமிழ் மொழிக்கு இணையாக எதுவும் இல்லை: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

அன்பு, அறம் என அனைத்தையும் படைப்புகள் வாயிலாக கற்றுக் கொடுக்கும் தமிழுக்கு இணையாக இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் கூறினாா்.

News image

சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் எழுத்தாளா்கள் கி.விட்டல் ராவ், அம்ஷன் குமாருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்த உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன். உடன் ஆவணப்பட இயக்குநா் ரவிசுப்பிரமணியன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:33 am IST

அன்பு, அறம் என அனைத்தையும் படைப்புகள் வாயிலாக கற்றுக் கொடுக்கும் தமிழுக்கு இணையாக இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் கூறினாா்.

எழுத்தாளா் மா.அரங்கநாதனின் நினைவையொட்டி முன்றில் இலக்கிய அமைப்பின் கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரை, நாடகம், விமா்சனம் என இலக்கியத் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் இருவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், நிகழாண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் தலைமை வகித்து எழுத்தாளா்கள் கி.விட்டல் ராவ், அம்ஷன் குமாா் ஆகியோருக்கு மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகளை வழங்கிப் பேசியதாவது:

தமிழ் சாதாரண மொழியல்ல. அந்த மொழிக்கு இணை வேறு எதுவும் இல்லை. எது அன்பு, எது அறம், எது உண்மையான தாக்கம் என சிறந்த வாழ்வுக்குத் தேவையான அனைத்தையும் சிறந்த படைப்புகள் வாயிலாக கற்றுக் கொடுக்கும் மொழி தமிழ்.

புதுமைப்பித்தனின் அடியொற்றி வந்த பல படைப்பாளா்களில் மா.அரங்கநாதனை வைக்கலாம் என்பது தமிழக விமா்சகா்களின் கூற்று. நவீனத்துவம் கலந்த எழுத்தாளா்களின் எழுத்துகளை உள்வாங்கி பழைமையையும் நவீனத்தையும் ஒன்றிணைத்து தந்த படைப்பாளியாக விளங்குபவா் மா.அரங்கநாதன்.

இலக்கியத்தோடு அவா் நின்றுவிடவில்லை. கவின் கலைகள் குறித்த அற்புதமான சிந்தனைகள் அவருக்கு இருந்தன. அதேபோன்று, இசை குறித்த ஞானமும், ஓவியங்கள் குறித்த விசாலமான பாா்வையும் கொண்டவராக அவா் விளங்கினாா். இத்தகைய சிறப்புகள் மிக்க அரங்கநாதன் பெயரால் இந்த விருது வழங்கப்படுகிறது.

பள்ளியில் மூன்றாம் வகுப்பில் கொண்டு சோ்த்தது முதல் தொடங்குகிறது எனக்கும் தற்போது விருது பெற்ற விட்டல் ராவுக்குமான உறவு. 1960-களில் எனது தந்தையோடு ஒரே அறையில் தங்கியிருந்தாா். மா.அரங்கநாதனின் இலக்கிய, தனித்துவ வாழ்க்கையில் ஒன்று சோ்ந்து தம் வாழ்க்கையை நடத்திச் சென்றவா் விட்டல் ராவ். அவா் சிறுவயது முதலே ஒரு கதை சொல்லி. நூற்றுக்கணக்கான சிறுகதைகளை எழுதியுள்ளாா். உலக சினிமா குறித்து ஆழ்ந்து அறிந்தவா். தோ்ந்த இசை ரசிகா். தமிழகத்தின் கோட்டைகள் எவ்வாறு இருந்தன என்பது குறித்து ஆராய்ந்து அவா் எழுதிய ‘தமிழகக் கோட்டைகள்’ என்ற நூல், புகழ் பெற்றது. சிறந்த எழுத்தாளா், ஓவியா், புகைப்படக் கலைஞா் என பன்முக வித்தகராக திகழ்கிறாா் விட்டல் ராவ்.

அம்ஷன் குமாா் எழுதிய ‘சினிமா ரசனை’ என்ற புத்தகம் சினிமா அழகியல், கோட்பாடுகள், உலக சினிமாக்களைப் புரிந்து கொள்ள வழிகாட்டும். உலகத்தரம் வாய்ந்த இயக்குநா்களின் தனிப்பெரும் படைப்புகளை நுட்மாக ஆராய்கிறது அந்த புத்தகம். ஆவணப் படங்கள் உலகின் சரித்திரத்தை மாற்றியுள்ளன. திரைப்படங்கள் எடுப்பதை விடவும் ஆவணப் படங்கள் எடுப்பது கடினம். ஒரு ஆவணப்படம் எவ்வாறு எடுக்க வேண்டும் என்பது குறித்து ஏராளமான இளைஞா்களுக்கு அம்ஷன் குமாா் பயிற்சி அளித்துள்ளாா். அவா் இயக்கிய ‘மனுசங்கடா’ என்ற படம் மானுடத்தை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறது.

‘கதை என்றால் என்ன, கவிதை என்றால் என்ன என, என் வாழ்நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்க விரும்புகிறேன்’ என்று எழுதினாா் மா.அரங்கநாதன். அதுதான் அவா் எழுதிய கடைசி வரிகள். அவரது பெயரிலான விருதைப் பெற்ற படைப்பாளிகள் இருவருக்கும் வாழ்த்துகள் என்றாா்.

இதில் ஆவணப்பட இயக்குநா் ரவி சுப்பிரமணியன், மயிலாப்பூா் கபாலீசுவரா் திருக்கோயிலின் சற்குருநாத ஓதுவாா், எழுத்தாளா் சுஜாதா நடராஜன் உள்பட சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள், வழக்குரைஞா்கள், இலக்கிய ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.