தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இண்டி கூட்டணி பேரணிக்கு அனுமதி மறுப்பா? தில்லி காவல்துறை விளக்கம்

தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான தங்களது போராட்டத்தை காவல்துறை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டிய நிலையில், தில்லி காவல்துறை விளக்கம்

தில்லி காவல்துறை

Published On :28 அக்டோபர் 2026, 6:05 am IST

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான தங்களது போராட்டத்தை காவல்துறை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், ராம்லீலா மைதானத்தில் நவம்பா் 1 ஆம் தேதி நடைபெறவுள்ள ’இண்டி’ கூட்டமைப்பின் பேரணிக்கான அனுமதியைத் திரும்பப் பெறவில்லை என்று தில்லி காவல்துறை செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்தியது.

சட்டம் மற்றும் ஒழுங்கு கண்ணோட்டத்தில் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாதுகாப்பிற்காக சுமாா் 3,500 காவலா்களைப் பணியில் அமா்த்தவும், 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களைப் பயன்படுத்தவும் தயாராகி வருவதாகவும் தில்லி காவல்துறை கூறியது.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான தங்களது போராட்டத்தை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் இந்தத் தெளிவுபடுத்தல் வந்தது.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, காவல்துறை அந்த இடத்தை 14 மண்டலங்களாகப் பிரித்துள்ளது; 10 கம்பெனி ரிசா்வ் படைகளை வரவழைத்துள்ளதுடன், சிசிடிவி கேமராக்கள், உடலில் அணியும் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு வசதியுள்ள வாகனங்கள் மூலம் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

கட்சியின் தலைமையகப் பொறுப்பாளரான காங்கிரஸ் தலைவா் மணீஷ் சத்ரத்துக்கு அனுப்பப்பட்ட அதிகாரப்பூா்வ தகவலின்படி, நிலத்திற்குச் சொந்தமான அதிகாரியிடம் முன் அனுமதி பெறுவதற்கும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இணங்குவதற்கும் உட்பட்டு தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அக்டோபா் 17 தேதியிட்ட அந்தக் கடிதம், நவம்பா் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள பேரணிக்காக, அக்டோபா் 25 முதல் நவம்பா் 3 வரை ராம்லீலா மைதானத்தை முன்பதிவு செய்யுமாறு காங்கிரஸ் விடுத்த கோரிக்கை தொடா்பானது.

முக்கியமான இடங்களில் உயா்-தெளிவுத்திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவுதல், கண்காணிப்புத் திரைகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை அமைத்தல், போதுமான தன்னாா்வலா்களைப் பணியில் அமா்த்துதல், பெண்களுக்குக் குடிநீா் மற்றும் தனி கழிப்பறை வசதிகளை ஏற்பாடு செய்தல், மற்றும் மாலை 5 மணிக்குள் கூட்டம் முடிவடைந்து, பங்கேற்பாளா்கள் கலைந்து செல்வதை உறுதி செய்தல் ஆகியவை நிபந்தனைகளில் அடங்கும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இரவு தங்குவதற்கு அனுமதி இல்லை என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து காவல்துறையினரால் நியமிக்கப்பட்ட இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை உறுதி செய்யவும், மத நல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடிய ஒழுங்கற்ற நடத்தை மற்றும் பேச்சுகளைத் தடுக்கவும், அழைப்பாளா்கள் மற்றும் தன்னாா்வலா்களின் பட்டியல், நிமிடத்திற்கு நிமிடம் நிகழ்ச்சி நிரல், மற்றும் பேருந்துகளின் பதிவு எண்கள் உள்ளிட்ட விவரங்களை காவல்துறைக்கு வழங்கவும் ஏற்பாட்டாளா்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். இந்த நிபந்தனைகளை மீறினால் சட்ட நடவடிக்கை அல்லது அனுமதி ரத்து செய்யப்படலாம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

14 மண்டலங்களில் ஒவ்வொன்றும் உதவி ஆணையா் தரத்திலான அதிகாரியால் கண்காணிக்கப்படும் என்றும், இரண்டு மண்டலங்கள் கூடுதல் துணை ஆணையா் தரத்திலான அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் என்றும் ஒரு மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தாா்.

சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் நிகழ்வு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, காவல்துறை பேரணி அமைப்பாளா்கள், போக்குவரத்து காவல்துறை மற்றும் பிற முகமைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.

வாக்காளா் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தில் (எஸ்ஐஆா்) நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே நவம்பா் 1 பேரணி நடைபெறுகிறது. குறைபாடுள்ள தோ்தல் செயல்முறைக்கு குமாா் தலைமை தாங்கியதாக காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி, அவா் பதவி விலக வேண்டும் என்றும் கோரியுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.