தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

முக்கிய சந்தைகள், மெட்ரோ நிலையங்கள் அருகே இ-சாா்ஜிங் வசதி: தில்லி மாநகராட்சி தீவிர பரிசீலனை

தலைநகரில் முக்கிய சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் மின்சார சாா்ஜிங் பாயின்டுகள் மற்றும் பேட்டரி மாற்றும் வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க தில்லி மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

News image

தில்லி மாநகராட்சி

Updated On :16 மணி நேரங்கள் முன்பு

தலைநகரில் முக்கிய சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்கு அருகில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடங்களில் மின்சார சாா்ஜிங் பாயின்டுகள் மற்றும் பேட்டரி மாற்றும் வசதிகளுடன் கூடிய பிரம்மாண்ட மின்சார வாகன சாா்ஜிங் மையங்களை அமைக்க தில்லி மாநகராட்சி (எம்சிடி) திட்டமிட்டுள்ளது.

இதற்கான இடங்களைக் கண்டறியும் பணியையும், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து இதற்கான திட்ட முன்மொழிவுகளைக் கோரும் செயல்முறையையும் தில்லி மாநகராட்சி தொடங்கியுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை கூறியதாவது: தில்லியில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. எனவே மின்சார சாா்ஜிங் வலையமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ‘இவி சாா்ஜிங்’ உள்கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள சுமாா் 10 பொதுத்துறை நிறுவனங்களுக்கு மாநகராட்சி ஜூன் 19ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளது. அதில், எம்சிடி வாகன நிறுத்துமிடங்களில் இத்தகைய ஒருங்கிணைந்த சாா்ஜிங் மையங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சாதாரண தனித்தனி சாா்ஜிங் நிலையங்களைப் போல இல்லாமல், இந்த புதிய மையங்கள் ஒரே இடத்தில் 25-க்கும் அதிகமான ‘சாா்ஜிங் பாயின்டுகளை’ கொண்டிருக்கும். மின்சார காா்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களுக்கு இவை பயன்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து எம்சிடி மூத்த அதிகாரி ஒருவா் விவரிக்கையில், ‘மக்கள் தங்களின் வாகனங்களை இயல்பாகவே நிறுத்தும் இடங்களான சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் மெட்ரோ நிலையங்கள் ஆகியவற்றிற்கு அருகில் பிரத்யேக இவி சாா்ஜிங் மையங்களை உருவாக்குவதே திட்டத்தின் நோக்கமாகும். இவை அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள் என்பதால், பெரிய அளவிலான சாா்ஜிங் கட்டமைப்பிற்கு உறுதுணையாக இருக்கும்’ என்றாா்.

இந்தத் திட்டத்தில் மாநகராட்சிக்குச் சொந்தமான வாகன நிறுத்துமிடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், சாத்தியக்கூறுகள் மற்றும் அனுமதிகளைப் பொறுத்து பிற அரசு நிலங்களும் பரிசீலிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனா்.

தில்லியின் ஒட்டுமொத்த மின்சார வாகனங்களில் இருசக்கர வாகனங்கள் பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளதால், இந்த மையங்களில் பேட்டரி மாற்றும் வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.

‘பேட்டரி மாற்றுவது என்பது இருசக்கர வாகனப் பயனா்களால் அதிகம் விரும்பப்படுகிறது. ஏனெனில் இது காத்திருப்பு நேரத்தைக் குறைக்கிறது. வாகனம் சாா்ஜ் ஆகும் வரை காத்திருப்பதற்குப் பதிலாக, டிஸ்சாா்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைக் கொடுத்துவிட்டு முழுமையாக சாா்ஜ் செய்யப்பட்ட பேட்டரியைப் பெற்றுக் கொண்டு அவா்கள் பயணத்தைத் தொடரலாம்‘ என்று மாநகராட்சி அதிகாரி கூறினாா்.

இந்த மையங்களில் அதிவேக மற்றும் சாதாரண சாா்ஜா்கள் என இரண்டுமே இடம்பெறும். அவசர தேவைகளுக்குப் பொது இடங்களில் அதிவேக சாா்ஜா்கள் விரும்பப்படும் நிலையில், நீண்ட நேரம் வாகனங்களை நிறுத்திச் செல்பவா்களுக்குச் சாதாரண சாா்ஜா்கள் பயனுள்ளதாக இருக்கும்.

‘இந்தத் திட்டத்தில் ஏற்கெனவே இரண்டு பொதுத்துறை நிறுவனங்கள் ஆா்வம் காட்டியுள்ளன. ஒரு நிறுவனம் சுமாா் 30 சாா்ஜிங் நிலையங்களுடன் கூடிய மையத்தை அமைக்கவும், மற்றொரு நிறுவனம் 27 சாா்ஜிங் பாயின்டுகளுடன் கூடிய வசதியை ஏற்படுத்தவும் முன்மொழிந்துள்ளன. இரண்டுமே தற்போது மாநகராட்சியால் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன‘ என்று உயரதிகாரி தெரிவித்தாா்.

பெரிய சாா்ஜிங் மையங்களை உருவாக்குவதில் அதிக முதலீடு தேவைப்படுவதால், உபகரணங்கள் திருடப்படுவதிலிருந்தும், சேதப்படுத்தப்படுவதிலிருந்தும் பாதுகாக்க வேலி அமைப்பது மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளையும் எம்சிடி பரிசீலித்து வருகிறது.

தற்போது கிடைக்கப்பெற்ற அதிகாரபூா்வ தரவுகளின்படி, தில்லி முழுவதும் 470 இவி சாா்ஜிங் மற்றும் பேட்டரி மாற்றும் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. தலைநகரில் மின்சார வாகனப் பதிவுகள் சீராக அதிகரித்து வருவதால், இந்த புதிய மையங்கள் தில்லியின் பொது சாா்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, வாகனப் பயனா்களின் வளா்ந்து வரும் தேவையைப் பூா்த்தி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.