தமிழக அரசியல் வரலாற்றில் அதன் திரைக்கதையை புரட்டிப் போட்டது விஜய் சர்க்கார்.
“காலம் என்னைக் கொண்டு சென்று ஓரிடத்தில் அமர வைக்கும். அதற்கான நேரம், சூழல், இடம் அனைத்தும் அமைந்து வர வேண்டும். அது வரும்போது நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்வேன்” - 2011-ல் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விஜய் கூறியவை.
அதற்கான நேரமும் காலமும் 2024-ல் விஜய்க்குக் கச்சிதமாக அமைந்தது. கோட்டையைப் பிடிப்பதற்குக் கோடம்பாக்கம்தான் குறுக்கு வழி என்பது கோலிவுட் ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. ஆனால், ஜொலித்தவர்கள் எத்தனை பேர் என்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மிகவும் சொற்பமானவர்களே.
தமிழ் சினிமா நீண்டகாலமாகவே ஃபாலோ செய்த அதே பழைய ஸ்க்ரீன்ப்ளே போல, நடிகர்கள் புதிய கட்சி தொடங்கி முதல்வராகும் கனவுகளுடன், ‘விஜய் மக்கள் இயக்கத்தை’ கட்சியாகப் பதிவு செய்யப்போவதாக நடிகர் விஜய் அறிவித்தார்.
முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த் என அனைவருமே திரைத்துறையிலிருந்து வந்து அரசியலில் ஜொலித்தவர்கள்.
தமிழக வெற்றிக் கழகம்: புதிய கட்சியின் பிறப்பு
“அவரே வரேன்னு சொல்லிட்டு வரலயே, ரஜினி மாதிரி இவரும் வருவாரா, திரும்பி போய்விடுவாரா” என்று விமர்சனங்கள் எழுந்தாலும், எந்தவித சலசலப்புமின்றி, புதிய மாற்றத்தை உருவாக்கப் போகிறோம் என 2024 பிப். 2 ஆம் தேதி தனது கட்சியின் பெயரை வெளியிட்டார் விஜய்.
பெயர் - தமிழக வெற்றி கழகம் - பெரும் வரவேற்புக்கு மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. தமிழ்நாட்டில் புதிய கட்சி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது; ஆனால், ஒற்றுகூட (க்) இல்லாமல் எப்படி தமிழைக் காப்பாற்றுவார்கள் என்று இன்ஸ்டாவில் விமர்சனம் கிளம்ப அன்று பிப். 18-ல் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று மாற்றி மற்றோர் அறிவிப்பு. அன்றே தொடங்கிவிட்டது தவெகவின் இன்ஸ்டாகிராம் அரசியல்.
மாற்று அரசியலின் முகமாக விஜய்
தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக மாறி, மாறி ஆட்சி நடத்திவரும் அதிமுக, திமுக இரு துருவங்களுக்கு மத்தியில் சிவாஜி வந்தார், ரஜினி வருவேன் என்று சொன்னார், கமலும் வந்து அதே கழகங்களுக்குள் சென்றுவிட்டார், விஜய் எப்படி தாக்குப் பிடிப்பார் என்று பலரும் கேலியாகப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், அதையெல்லாம் விஜய் பெரும் பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - பிறப்பால் அனைவரும் சமம்” என்ற அடிப்படையைக் கொள்கையாகக் கொண்டு மக்களின் ஏகோபித்த வரவேற்புடன் புதிய கட்சித் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்கள் இயக்கத்தில் விஜய்க்காக போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்த ரசிகர்கள் பலருக்கும் கட்சியில் பொறுப்புகள் வழங்கப்பட்டன.
மாற்று அரசியல், தூய சக்தி அரசியல் எனத் தொடக்கம் முதலே சுட்டிக் காட்டிய விஜய், ஊழலற்ற அரசு அமைப்பதே முதன்மையான இலக்கு என்று வேகம் காட்டினார்.
2026 இலக்கை நோக்கிய தவெக
கெரியரின் உச்சத்தைவிட்டு, எனக்காக செய்த மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என நோக்கத்துக்காகக் கட்சி ஆரம்பித்தாக மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டிய விஜய், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இதற்கிடையில், தனது முழு வலிமையை வெளிக்கொணராத தவெக, 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலையும், 2025-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையும் புறக்கணித்தது.
கட்சிக் கொடி மற்றும் கொள்கைப் பாடல் வெளியீடு
2024 ஆகஸ்ட் 22-ல் சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் வைத்து கட்சிக் கொடியையும், கட்சியின் கொள்கைப் பாடலையும் வெளியிட்டார். மேலேயும் கீழேயும் சிவப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் நடுவில் வெற்றியைக் குறிக்கும் வாகை மலருடன் இரண்டு பக்கங்களிலும் போர் யானைகளுடன் கொடி உருவாக்கப்பட்டிருந்தது. கொடியுடன், “தமிழன் கொடி பறக்குது தலைவன் யுகம் பிறக்குது...” என்ற கொள்கைப் பாடலும் வெளியிடப்பட்டது.
அன்று வரை முதல் பார்வை போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என காத்துக் கிடந்த விஜய்யின் ரசிகர்கள், அவரின் கட்சியை நோக்கித் தொண்டர்களாக நகர்ந்தனர். நடிப்பை விட்டு அரசியல் தலைவரானாலும், சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு வரவேற்பு தொடர்ந்தது.
விக்ரவாண்டி மாநாடு: கொள்கை அறிவித்த முதல் மேடை
கட்சி ஆரம்பிக்கப்பட்டு மாதங்கள் உருண்டோடின. தவெக தலைவர் விஜய், தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்குவது, ஆளும் கட்சிக்கு எதிராக அறிக்கைகள் விடுவது போன்ற தனது அரசியல் வருகைக்கான இருப்பைத் தக்க வைக்க முயன்ற சூழலில், ‘விஜய் வெறும் டிவிட் மட்டும்தான் போடுவாரா? களத்துக்கு வருவாரா மாட்டாரா?’ எனக் குரல்கள் எழ, விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநாட்டுக்கான அறிவிப்புகள் வெளியாகின.
2024 அக். 27 விழுப்புரத்தில் விக்ரவாண்டி என்னும் இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு. என்ன பேசப் போகிறார் விஜய், யாருக்கு ஆதரவு, அவரின் கொள்கைகள்தான் என்ன? எனப் பலரும் எதிர்பார்த்த வேளையில், வெற்றிக் கொள்கைத் திருவிழா என்ற பெயரில் நடைபெற்ற அந்த மாநாட்டில் எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம். தமிழ்த் தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் மாதிரி; ஆனால், எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக் கொள்ளக் கூடாது. சமத்துவம், சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றையும் கொள்ளைகளாகக் கூறியிருந்தார் தவெக தலைவர் விஜய். கட்சியின் கொள்கைத் தலைவர்களாக அண்ணல் அம்பேத்கர், பெரியார், முன்னாள் முதல்வர் காமராஜர், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வேலு நாச்சியார், அஞ்சலையம்மாள்.

திமுக, பாஜக, சீமான்: நேரடி அரசியல் மோதல்கள்
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற திராவிட கட்சிகளுக்கு எதிரான சித்தாந்தங்களை விஜய் முன்வைத்தார். நம்மோடு சில வருவார்கள் என அப்போது கூட்டணிக் கட்சிகளுக்கு வலை வீசிப் பார்த்தார் விஜய்.
அந்தக் கூட்டத்தில், சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடினர் [ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சிறிய அதிர்ச்சிதான்]. எம்.ஜி.ஆருக்கும் கூட்டம் கூடியது; ஆனால், அவர் திமுகவில் 20 ஆண்டுகளுக்கு மேல் பயணித்தவர். விஜயகாந்துக்கும் கூட்டம் கூடியது; ஆனால், அவரே முதல் தேர்தலில் 234 தொகுதியிலும் போட்டியிட்டு ஒரேயொரு ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றார். அதேபோலத்தான் விஜய்யும் - என சரியாகக் கணிக்காமல் விட்டன திராவிட கட்சிகள்.
அரசியல் எதிரி என திமுகவையும், கொள்கை எதிரி என பாஜகவையும் முன்னிறுத்தினார் விஜய். “பாசிசம் என பாஜகவுக்கு ஒரு அடியும், அவுங்க பாசிசம்னா நீங்க பாயசமா..” என திமுகவுக்கு ஒரு அடியும் விழுந்தது. தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி கட்சி நடத்திய சீமானுக்கும் விஜய்க்கும் நேரடியான மோதல் அப்போதே தொடங்கியது.
இரண்டாவது இடத்துக்கு வேகமாக முன்னேறிய தவெக
திமுக, அதிமுகவைத் தவிர்த்து மூன்றாமிடத்திலிருந்த நாம் தமிழர் கட்சியின் இடத்தை ஆக்கிரமிக்க விஜய் வந்துவிட்டார் எனக் கொதித்தெழுந்த சீமான், அவரை ஒருமையிலேயே கடுமையாகச் சாடினார்.
திமுகவை தீயசக்தி எனக் கடுமையாக சாடிய விஜய், “திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியே, இறந்துபோனத, அழுகிப்போனத சிங்கம் சீண்டிக்கூட பார்க்காது” என அதிமுகவையும், நாம் தமிழர் கட்சியையும் சீண்டினார்.
ஆளும் கட்சியான திமுகவின் ஆட்சித் தவறுகளைத் தொடக்கம் முதலே சுட்டிக்காட்டத் தவறவில்லை விஜய். பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை கீழே அழுத்தத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு வேகமாக மேலேறினார். திமுகவை நேரடி எதிராகப் பார்த்த விஜய், அதிமுகவைத் தொடக்கம் முதலே கண்டுகொள்ளவில்லை. அதேநேரம் திமுகவோ பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகதான் நமக்கு எதிரி, கமல் போல, விஜய்யும் 2-3 சதவிகித வாக்குகள்தான் வாங்குவார் என்று தப்புக்கணக்குப் போட்டனர்.
2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் முனைப்பில் புதிய செயலியும் உருவாக்கப்பட்டது.
விஜய் ஒரு கூத்தாடி, அவர் ஒரு நடிகர் - அவர் மக்களோடு எங்கே நிற்கப் போகிறார் என்ற விமர்சனங்கள் எழ, அதனையும் பிரசார மேடைகளில் சுட்டிக்காட்டினார் விஜய். ‘ஆமா.. விஜய் நடிகன்தான், அவன் கூத்தாடிதான்’ என்ற பேச்சுகள் எளிய மக்களிடம் வேகமாக சென்றடைந்தது.
இதற்கிடையில், விசிகவில் துணை பொதுச் செயலராக இருந்த ஆதவ் ஆர்ஜுனா, அதிமுகவிலிருந்து சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர்.
மதுரை மாநாடு மற்றும் மக்கள் சந்திப்பு
2025 ஆகஸ்ட் 25-ல் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு, மதுரையே குலுங்கியது. அந்தப் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளிட்ட விஜய், “மதுரை கிழக்கு - விஜய், மதுரை மேற்கு - விஜய், மதுரை மத்தி - விஜய், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான், உசிலம்பட்டி என 234 தொகுதிகளிலும் உங்கள் விஜய்தான் வேட்பாளர்” என்றும் அனைத்துத் தொகுதிகளிலும் நிற்கப்போவது உங்கள் விஜய்தான் என்றார்.
“ஹேய்.. விஜய் வீட்ட விட்டு வெளிய வா...” என பல குரல்களும் திமுகவில் எழ, “மக்கள் விரும்பும் முதல்வர் விஜய்” என்ற பெயரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வாரந்தோறும் சனிக்கிழமை ஒரு மாவட்டத்துக்கும் செல்ல முடிவு செய்யப்பட்டது. விஜய் செல்லும் இடமெல்லாம், யாரும் எதிர்பார்த்திடாத கட்டுக்கடங்காதக் கூட்டம். எம்.ஜி.ஆருக்கு கூடிய கூட்டம்போல இருந்தது என்று பலர் தெரிவித்தாலும் “கூட்டமெல்லாம் ஓட்டா மாறாது புரோ...” என அதற்கு எதிர்ப்புகளும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்தது.
கரூர் நெரிசல் பலி: மிகப்பெரிய பின்னடைவு
விஜய்யின் அரசியல் வாழ்க்கையின் கருப்புப் பக்கம் போல கரூர் நெரிசல் பலி நேரிட்டது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக விஜய் பேசுவதைக் கேட்பதற்காக கரூர் வேலுச்சாமிபுரத்தில் காலை முதலே காத்திருந்த மக்கள், கூட்ட நெரிசலில் சிக்கினர். இந்தத் துயர சம்பவத்தில் 41 பேர் பலியாகினர். பிரசாரக் கூட்டத்துக்கு விஜய், தாமதமாக வந்தார் என்றும், திமுக அரசின் சரியான திட்டமிடல் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் கோரச் சம்பவம் உலகம் முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தவிர்த்த விஜய், இடையில், கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைப் பனையூருக்கு அழைத்து அவர்கள் காலில் விழுந்து அழுததாகவும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
செங்கோட்டையன் இணைவு மற்றும் தேர்தல் வியூகம்
கரூர் பிரச்சினைக்கிடையில், அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த மூத்த அரசியல்வாதி கே.ஏ. செங்கோட்டையன், நவ. 27-ல் ஆதரவாளர்களுடன் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இவருக்கு ஏன் வேண்டாத வேலை என்று பலரும் விமர்சித்தனர்.
தவெக தலைவர் விஜய்யின் பயணங்களில் நேரிட்ட சிக்கல்கள், குளறுபடிகளைச் சரிசெய்யவும் களமிறக்கப்பட்டார் செங்கோட்டையன். அவர் வந்தபோது தவெகவுக்கு முதல் எம்.எல்.ஏ. சீட்டும் கிட்டத்தட்ட உறுதியானது.
அதிமுகவில் ஜெயலலிதாவின் தேர்தல் சுற்றுப்பயணத்தை இவரைப் போல யாராலும் திட்டமிட முடியாது என்ற பெருமை பெற்ற செங்கோட்டையனின் வருகைக்குப் பின்னர் அவரின் அனுபவத்துடன் தவெக மிக வேகமாக பிரசார வேலைகளைத் தீவிரப்படுத்தியது. கூட்ட நெரிசலைக் குறைக்க மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்கு கியூஆர் கோடுகளுடன் அனுமதி உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விக்ரவாண்டியில் த.வெ.க. முதல் மாநில மாநாட்டில் பேசும்போதே, ‘கூட்டணியில் சேருவோருக்கு ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சி அமைப்போம்’ என்று வீசிய வலைக்குள், யாரும் கடைசி வரை வரவில்லை. திமுக, அதிமுக போன்றே கூட்டணிக் கட்சிகளும் தவெகவைக் குறைத்து மதிப்பிட்டன.
காங்கிரஸ் – தவெக கூட்டணி பேசி முடிக்கப்பட்டதாக வதந்தி பரவிய நிலையில், தலா ஒரு மாநிலங்களவைத் தொகுதியைக் கொடுத்து காங்கிரஸையும், தேமுதிகவையும் தன் பக்கம் இழுந்தது திமுக.
விசில், ஆட்டோ ஆகியவற்றில் ஒரு சின்னம் வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் தவெக கேட்க, விசில் சின்னம் கிடைத்தது. இரட்டை இலை, சூரியனுக்காக மட்டுமே விழுந்துகொண்டிருந்த வாக்குகளை ஈர்க்க வீடுகள்தோறும் ‘விசில்’ சின்னத்தைக் கோலமாகப் போட வேண்டுமென்று தனது ரசிகைகளுக்குக் கோரிக்கை வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் தமனுக்கும், பாடலாசிரியர் விவேக் இருவருக்கும் பெரும் பங்கு இருந்ததாக தவெக ஆதரவாளர்கள் கருதினர். தவெவுக்காக தமனின் இசையில் வெளியான 3 பாடல்களும் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.
விசில் சின்னம், பாடல்கள், ரசிகர் படை
தவெக கொடி பாடல், உங்க விஜய் நா வரேன், விசில் ஆன்தம் என 3 பாடல்களுக்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. “மிரளப் போது ஸ்டேட்டு விசில் சத்தம் கேட்டு, நல்லவங்க வாழ விசிலுக்கு அடி ஓட்டு, உங்க விஜய் நா வரேன்” என இரண்டு பாடல்களை விஜய்யே பாடியிருந்தார்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. கூட்டணிக்கான அனைத்துக் கதவுகளும் மூடப்பட்டன. அதிமுக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, விசிக கூட்டணி என எதுவும் அமையவில்லை. தேர்தலில் தனித்து நிற்கிறார் விஜய் என்ற பேச்சுக்கு மத்தியில் விஜய் தனித்து விடப்பட்டுள்ளார் என்று விமர்சனங்களும் எழுந்தன.
வேட்பாளர் எல்லாம் யாரென்று பார்க்காமல் உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் விஜய்க்காக விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், உங்கள் அப்பா, அம்மா, பாட்டி, தாத்தாவையும் ஓட்டுப்போட வைக்க வேண்டும் என்று குட்டி நண்பா, நண்பீஸுக்கும் செல்லக் கோரிக்கை வைத்தார்.
மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் ஒரு பக்கம், மக்கள் செல்வாக்கு மறுப்பக்கம் என தமிழ்நாடு முதல்வர் வேட்பாளர்களில் முன்னணியில் இருந்தவர்களில் ஒருவரான ரஜினிகாந்த் 2020-ல் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “நாம எதிர்க்கிறது யார... இரண்டு பெரிய ஜாம்பவான்கள், அசுர பலத்தோடு இருக்காங்க.. மிகப்பெரிய ஆளுமை மிக்க தலைவர் (கலைஞர் கருணாநிதி) இப்போ இல்ல. அவரு வாரிசுங்கற (மு.க. ஸ்டாலின்) லெகசிய நிரூபிக்கனுங்கற நிர்பந்தம், இன்னொரு பக்கம் ஆட்சி கைல வச்சுக்கிட்டு, அந்த குபேரனோட கஜானாவையே கைல வச்சுக்கிட்டு அவங்க (அதிமுக) காத்திட்டு இருக்காங்க.. இவங்க நடுவுல சினிமா புகழ் வச்சுக்கிட்டு, நம்ம ரசிகர்கள வச்சுக்கிட்டு நம்ம ஜெயிக்க முடியுமா?” என்றும் பேசியிருந்தார். அவர் சொல்லியதுபோலவே, வெற்றிக்காகக் காத்திருந்த ஆளுங்கட்சி திமுக ஒருபக்கமும், மத்திய அரசின் ஆதரவோடும் மீண்டும் ஆட்சியமைக்கப் போட்டிபோடும் அதிமுக ஒருபக்கமும் இருக்க விஜய் எப்படித் தாக்குப் பிடிக்கப் போகிறார் என்ற கேள்விகள்தான் எல்லாப் பக்கமும் எழுந்தன.
பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு இடங்களில் விஜய் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தில் கடுமையான கெடுபிடிகள். 6 மணிக்கு மேல் வெளியே வர மாட்டார் என்ற விமர்சனங்களுக்கிடையில் பல இடங்களில் பிரசாரத்தை ரத்து செய்தார் விஜய். மேலும், பல இடங்களில் பிரசாரத்துக்குச் சென்றும் நேரம் முடிந்ததால் பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார். இருந்தாலும், மக்கள் மத்தியில் விஜய்க்கு இருந்த செல்வாக்கு குறையவில்லை. “உங்கள் கிட்ட இருந்து எடுத்த காசெல்லாம் கொட்டுவாங்க... வாங்கிக்கோங்க..” என்றெல்லாம் சொல்லி பிரசாரம் செய்தார்.
தேர்தல் களத்தில் சவால்கள் மற்றும் சர்ச்சைகள்
தேர்தல் பிரசாரத்துக்கிடையில், விஜய்யின் கடைசிப் படமான ஜன நாயகன் தணிக்கை வாரியப் பிரச்சினைகளில், இணையத்திலும் சட்டவிரோதமாக வெளியானது. மேலும், விவாகரத்து வழக்கையும், கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் சிபிஐ வழக்குக்காகத் தில்லிக்கும் சென்று 6 - 8 மணி நேரத்துக்கும் மேலான விசாரணையை எதிர்கொண்டார்.
விஜய்க்காக அவரது 'நெஞ்சில் குடியிருக்கும்' ரசிகர்கள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலுமிருந்து வந்து வாக்குகளை செலுத்தினர். விஜய்யின் அரசியல் பிரவேசம், எஸ்.ஐ.ஆர். என தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவில் 85% வாக்குப்பதிவு. வாக்குப்பதிவு நாளில் விஜய்யைப் போலவே வெள்ளை சட்டை - பெய்ஜ் நிற பேண்ட் அணிந்து அதே ட்ரெஸ் கோடில் வந்து வாக்கு செலுத்தினர் அவரது ரசிகர்கள்.
கருத்துக்கணிப்புகளை தலைகீழாக்கிய முடிவுகள்
ஏப். 29 மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே, மீண்டும் திமுக 150 இடங்களைப் பெற்று வெற்றி பெறும்; அதிமுக 60 இடங்கள் வரையிலும், தவெக 1 முதல் 5 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் இன்று கணித்தன. ஒரேயொரு நிறுவனம் மட்டும் தவெக தனித்து வெற்றி பெறும் என்றும், விஜய் முதல்வராவார் என்றும் கணித்தது. இவர் முதல்வரா? என்று பலரும் கட்டம் கட்டி கேலி செய்தனர்.
விஜய் அலை: தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக
மே 4-ல் தேர்தல் முடிவுகள் வெளியாகின. வழக்கம்போல், 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. எதிர்பார்த்தது போல, திமுக 70 இடங்களில் அதிமுக 8 இடங்களிலும், தவெக 2 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. அனைவரும் நினைத்தது போல அன்று நிகழ்ந்தது. எதிர்க்கட்சிகள் அனைவரும் மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதிலும், காலை 9 மணி வரை திமுக முதலிடம், அதிமுக இரண்டாமிடம், தவெக மூன்றாமிடம்.
அதன் பின்னர்தான் விஜய்யின் அலை அனைவரையும் அடித்து காலி செய்தது. சுமார் 100 தொகுதிகளில் தவெக முன்னிலை. முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என அனைவரும் பின்னடவைச் சந்தித்தனர். காலை 11 மணிக்கெல்லாம் சுமார் 120 தொகுதிகளில் தவெக முன்னிலை பெற்றது. முகம் தெரியாத தவெக வேட்பாளர்கள் பலரும் முன்னிலை பெற்றனர். இறுதியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவானது.
சாதி, மத பேதமின்றி வேட்பாளர் பெயர் தெரியாமல் முகத்தைக்கூட பார்க்காமல் தங்கள் வாக்குகளை விசில் சின்னத்தில் செலுத்தினர்.
விஜய் சொன்னதுபோலவே, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி என 10-ல் 8 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றது. திமுகவில் 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், அதிமுக முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் முகம் தெரியாத வேட்பாளர்களிடம் தோற்கடிக்கப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் ஒப்பீடுகளைத் தாண்டிய வெற்றி
விஜய் என்ன எம். ஜி. ஆரா? என்று கேட்டவர்களெல்லாம் வாயடைத்துப் போகும் வகையில், 1.72 கோடி (34.92%) வாக்குகளைப் பெற்றது தவெக. அதிலும் குறிப்பாக எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்து வெற்றி பெற்றபோதுகூட சென்னையில் 14-ல் ஒன்றில் மட்டுமே வென்றார். ஆனால், கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளிலேயே ஆட்சியைப் பிடித்த தவெக சென்னையில், 16-ல் 14 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூரில் தோற்கடிக்கப்பட்டார்.
முதல்வர் விஜய்: கனவு நனவான தருணம்
தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், விஜய்யின் பட வெளியீட்டில் எழும் பிரச்சினைகளைப் போலவே அவர் முதல்வராவதிலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. இதனால், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகளிடம் ஆதரவு கோரினார் விஜய். காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் கேட்க மற்றவர்கள் நிபந்தனையற்ற ஆதரவளித்தனர். சி. ஜோசப் விஜய் முதல்வரானார். பதவியேற்பு விழாவிலும் மாஸ் காட்டினார் விஜய்.
நடிகரிலிருந்து சகாப்தமாக மாறிய விஜய்
வெறும் நடிகர் மட்டுமல்ல; சகாப்தம் என்பதை நிரூபித்துக் காட்டினார் விஜய்யின் தேர்தல் வெற்றி சந்தோஷமே என்றாலும், தோற்றால் ‘மீண்டும் நடிக்க வந்துவிடுவார்’ என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் ஏமாற்றமே.
கெரியரின் உச்சத்தைவிட்டு சினிமாவுக்கு எண்ட் கார்டு (End card) போட்ட விஜய், அரசியலில் எண்ட்ரி கொடுத்து முதல்வர் நாற்காலியை எட்டிப் பிடித்திருக்கிறார். சினிமாவைப் போலவே அரசியலில் மிகப் பெரிய ஆளுமையாக உச்சம் தொட வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு... பார்க்கலாம்!
The entry of Chief Minister Vijay into Tamil Nadu politics!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திரையில் விஜய்யின் அரசியல் - இயல்பானதா? திட்டமிடப்பட்டதா?

திமுகவை பின்பற்றித்தான் தவெக செயல்பட முடியும்: மு.க.ஸ்டாலின்
இடைவெளி குறைய வேண்டும்!

அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் தவெக கொடியேற்று விழா
விடியோக்கள்

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு

