செப். 27 - ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்படும்: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு

செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதைப் பற்றி...

Published On :24 செப்டம்பர் 2026, 3:39 am IST

நாடு முழுவதும் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை வங்கிகள் வேலைநிறுத்தத்துக்கு அவற்றின் ஊழியர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளதையடுத்து, பொதுமக்கள் வசதிக்காக வரும் ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட மத்திய நிதித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செப். 28 முதல் 30-ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப். 26, 27 ஆகியவை வார இறுதி (சனி, ஞாயிறு) விடுமுறை நாள்களாகும். இதனால், தொடர்ந்து 5 நாள்கள் வங்கிகள் மூடப்பட்டால் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, செப். 27-ஆம் தேதி (ஞாயிறு) அனைத்து பொதுத் துறை வங்கிகள் மற்றும் பிராந்திய ஊரக வங்கிகளைத் திறக்க பாரத ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய நிதித் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) அனைத்து வங்கிக் கிளைகள், அலுவலகங்கள், ஏடிஎம் வசதியுடன் இணைக்கப்பட்ட கிளைகள் மற்றும் பணப்பெட்டக மையங்கள் (கரன்சி செஸ்ட்கள்) ஆகியவை முழுமையாகச் செயல்பட இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஒப்புதல் அளித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலன் கருதி உத்தேச வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்குமாறு வங்கி நிர்வாகங்களும், அரசும் தொழிற்சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதேவேளையில், அத்தியாவசிய வங்கிச் சேவைகள் எவ்வித இடையூறுமின்றி தொடர்வதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு நாளை ஊதியம் வழங்க ஏற்பாடு

வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தையொட்டி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியம் செப்.25-ஆம் தேதியே (வெள்ளிக்கிழமை) வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித் துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அலுவலக குறிப்பாணையில், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும். முன்கூட்டியே வழங்கப்படும் இந்தத் தொகை, அக்டோபர் மாத ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தில் முறையாக கணக்கிடப்பட்டு சரி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, அனைத்து பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில், வங்கிகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள 3 நாள்களும் ஏடிஎம், கைப்பேசி செயலி மூலம் நடைபெறும் வங்கிச் சேவை, இணையவழி வங்கிச் சேவை, யுபிஐ போன்ற எண்ம சேவைகள் தடையின்றி செயல்படும். எனினும், நேரடியாக வங்கிக் கிளைகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டிய பணிகளை வாடிக்கையாளர்கள் செப்.25-ஆம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) முன்கூட்டியே முடித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Summary

The Finance Ministry notified that that the Reserve Bank of India (RBI) has granted approval for all bank branches, offices, ATM-link branches and Currency Chests to remain fully operational on Sunday, i.e., September 27.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.