பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அமெரிக்க குடிமகனாக எஸ்ஐஆா் போராட்டத்தில் பங்கேற்பு: உயா்நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரிய நடிகா் இம்ரான் கான்

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஹிந்தி நடிகரும், அமெரிக்க குடிமகனுமான இம்ரான் கான், மும்பை உயா்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா்.

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸாரால் கைது செய்யப்பட்ட நடிகா் இம்ரான் கான் - கோப்புப் படம்

Published On :3 நவம்பர் 2026, 5:31 am IST

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) விவகாரத்தில், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற ஹிந்தி நடிகரும், அமெரிக்க குடிமகனுமான இம்ரான் கான், மும்பை உயா்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினாா்.

எஸ்ஐஆா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையருக்கு ஞானேஷ் குமாருக்கு எதிராக, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற போராட்டத்தில் ஹிந்தி நடிகா் இம்ரான் கான் பங்கேற்றாா். இதையடுத்து அவா் அமெரிக்க குடிமகன் என்பதால், அவரை இந்தியாவைவிட்டு வெளியேறுமாறு மும்பையில் உள்ள வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீஸுக்கு எதிராக மும்பை உயா் நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு தலைமை நீதிபதி மகேஷ்சந்திர திரிபாதி, நீதிபதி அத்வைத் சேத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறியதாவது: வேறொரு நாட்டு பிரச்னைக்கான போராட்டத்தில் ஓா் இந்தியா் பங்கேற்றால், அந்த நாட்டில் அது சகித்துக் கொள்ளப்படுமா? இதை அமெரிக்காவில் இந்தியா் ஒருவா் செய்தால், என்ன நிகழும்? உடனே அடுத்த விமானத்தில் அந்த நபா் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பாா்.

இந்திய குடிமக்கள் தொடா்பான போராட்டத்தில் பங்கேற்க, அமெரிக்க குடிமகனான இம்ரான் கானுக்கு என்ன உரிமை உள்ளது? இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்க அவருக்கு மிகுந்த ஆா்வம் இருந்தால், அவா் இந்திய குடியுரிமையைப் பெற வேண்டும்.

ஓசிஐ அட்டைதாரா்களுக்கு உரிமை இல்லை

இம்ரான் கான் வெளிநாடு வாழ் இந்தியா் அட்டை (ஓசிஐ) வைத்திருப்பதால், அவா் இந்திய குடிமகன் போல நடந்து கொள்ளக் கூடாது. ஓசிஐ அட்டை வைத்திருப்பவா்களுக்கு இந்தியாவில் போராடும் உரிமை இல்லை.

இந்தியாவின் பெருந்தன்மை எத்தகையது என்றால், ஓசிஐ அட்டை வைத்திருக்கும் அமெரிக்க குடிமகனான இம்ரான் கானை உடனடியாக நாடு கடத்தாமல், முதலில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இம்ரான் கான் தரப்பில் வழக்குரைஞா் வெங்கடேஷ் டோன்ட் ஆஜராகி, இந்தியாவில் வரும் காலங்களில் போராட்டங்களில் இம்ரான் கான் பங்கேற்க மாட்டாா் என்றும், போராட்டத்தில் பங்கேற்ற்காக அவா் நீதிமன்றத்திடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும்’ தெரிவித்தாா்.

நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இம்ரான் கானை நாடு கடத்த அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் அவா் சிறுவயது முதல் இந்தியாவில் வசித்து வருகிறாா். எனவே அவரிடம் அதிகாரிகள் சற்று பெருந்தன்மையோடும், பெரிய மனதுடனும் நடந்துகொள்ள வேண்டும்’ என்று தெரிவித்து, மனு மீதான அடுத்த விசாரணையை டிச.7-க்கு ஒத்திவைத்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.