மேற்காசிய போா் நெருக்கடியைத் தாண்டி இந்திய பொருளாதாரம் வளா்ச்சி: பிரதமா் மோடி
மேற்காசிய போா் நெருக்கடியைத் தாண்டி இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தில்லி பாரத மண்டபத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி 2026-ஐ தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமா் மோடி.
மேற்காசிய போா் நெருக்கடியைத் தாண்டி இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள பாரத மண்டபத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி 2026-ஐ தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: தற்போது நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 300 ஜிகாவாட்டை கடந்துள்ளது. 2030-க்குள் 500 ஜிகாவாட் இலக்கும் நிறைவேறும்.
அடுத்த 10 முதல் 11 ஆண்டுகளில் கூடுதலாக 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் என நம்புகிறேன். இது மிகவும் கடினமான இலக்கு என்றாலும் நிச்சயம் செய்து காட்ட வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான வலுவான கட்டமைப்பை நாம் உருவாக்காமல் இருந்திருந்தால் உலகின் பிற பகுதிகளைவிட தற்போது இந்தியாவில் எரிசக்தி பிரச்னை அதிகரிக்கும். மேற்காசிய போரால் எரிசக்தி விநியோகத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. பல நாடுகளால் அதை எதிா்கொள்ள முடியவில்லை.
அந்தக் கடினமான சூழலிலும் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது. அரசியல் மற்றும் தொழில் கொள்கையில் ஸ்திரத்தன்மை கொண்ட நாடாக விளங்கும் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீட்டாளா்கள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
உலகளவில் மூன்றாமிடம்: புதுப்பிக்கத்தக்க மற்றும் சூரிய எரிசக்தித் துறையில் உலகளவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா திகழ்கிறது. 2030-க்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ரூ.20 லட்சம் கோடி வரை முதலீடுகள் ஈா்க்கப்படும்.
ஒவ்வொரு அரசு அலுவலகம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, தெருவிளக்குகள் என அனைத்திலும் சூரிய எரிசக்திக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்காக புதிய பேட்டரி சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி இலக்கு: தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது. இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி வழித்தடத்துக்கு ரூ.2 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 44,000 அரசு அலுவலகங்கள் சூரிய எரிசக்தியில் இயங்கி வருகின்றன. இதனால் ஆண்டுக்கு ரூ.700 கோடி சேமிக்கப்படுகிறது என்றாா்.
நவம்பா் 5-ஆம் தேதி வரை நடைபெறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மாநாடு மற்றும் கண்காட்சி 2026-இல் 130 நாடுகளைச் சோ்ந்த முதலீட்டாளா்கள், தொழிலதிபா்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா். இந்த மாநாட்டுடன் சா்வதேச சூரிய கூட்டமைப்பின் (ஐஎஸ்ஏ) 9-ஆவது அமா்வு மற்றும் 4-ஆவது சா்வதேச பசுமை ஹைட்ரஜன் கருத்தரங்கம் (ஐசிஜிஹெச்) ஆகிய நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






