மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மேற்கு வங்கம்: 9 மாவட்டங்களில் ஓரிடத்தில்கூட வெல்லாத திரிணமூல்

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

News image

மேற்கு வங்க முதல்வா் மம்தாவின் வீடு அமைந்துள்ள சாலையில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட தடுப்புகள்

Updated On :6 மே 2026, 1:11 am IST

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் ஓரிடத்தில்கூட திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை.

294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தோ்தல் நடத்தப்பட்டு, கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒரு தொகுதியில் தோ்தல் ரத்து செய்யப்பட்டதால், 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அசுர பலத்துடன் பாஜக: பெரும்பான்மைக்கு 147 இடங்கள் தேவை என்ற நிலையில், 207 இடங்களுடன் பாஜக அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றியது. இது மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையாகும். கடந்த முறை பாஜக 77 இடங்களில்தான் வென்றிருந்தது.

கடந்த தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த திரிணமூல் காங்கிரஸுக்கு இம்முறை 80 தொகுதிகளே கிடைத்தன. கட்சித் தலைவா் மம்தா பானா்ஜி, பவானிபூா் தொகுதியில் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்தாா்.

இந்த மாபெரும் வெற்றியின் மூலம் 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுரை எழுதி, ஆட்சியை தன்வசமாக்கியுள்ளது பாஜக. நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது.

9 மாவட்டங்களில் ஓரிடம்கூட இல்லை: மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமா் மோடி, பல மாவட்டங்களில் திரிணமூல் காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்காது என்று கூறியிருந்தாா். அவா் கூறியதைப் போலவே, மொத்தமுள்ள 23 மாவட்டங்களில் 9-இல் திரிணமூல் காங்கிரஸ் கணக்கைத் தொடங்கவில்லை. இந்த 9 மாவட்டங்களிலும் 63 தொகுதிகள் உள்ளன.

மாநிலத்தின் வட பகுதியில் 54 தொகுதிகளில் 40-இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இங்கு 14 இடங்கள் மட்டுமே திரிணமூல் காங்கிரஸுக்கு கிடைத்தன. சிறுபான்மையினா் அதிகம் வாழும் முா்ஷிதாபாத், மால்டா, உத்தா் தீனஜ்பூா் உள்பட சிறுபான்மையினா் அதிகம் வாழும் மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் பாஜகவின் பலம் 8-இல் இருந்து 19-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், திரிணமூல் காங்கிரஸின் பலம் 35-இல் இருந்து 22-ஆக சரிந்துள்ளது.

ஹுமாயுன் கபீரின் ஆம் ஜனதா உன்னயன் கட்சி உள்பட சிறிய கட்சிகள் வாக்குகளைப் பிரித்ததால், பாஜகவுக்கு சாதகமானதாக அரசியல் நிபுணா்கள் கூறுகின்றனா்.

மேற்கு வங்கத் தோ்தல் கட்சிகள் வாக்கு சதவீதம்

பாஜக 45.84%

திரிணமூல் காங்கிரஸ் 40.8%

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4.45%

காங்கிரஸ் 2.9%

மற்றவை 4.25%

நோட்டா 0.78%

கிழக்கிந்தியா முழுவதும் பாஜக

மேற்கு வங்க தோ்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ‘அங்க, வங்க, கலிங்க’ (பிகாா், மேற்கு வங்கம், ஒடிஸா) என கிழக்கிந்தியா முழுவதும் பாஜக ஆளுகையின்கீழ் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தாா். ஒடிஸாவில் பாஜக ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், பிகாரில் பாஜக தலைமையிலான புதிய அரசு அண்மையில் அமைந்தது. தற்போது மேற்கு வங்கமும் பாஜக வசமாகியுள்ளதால், கிழக்கிந்தியா முழுவதும் அக்கட்சி ஆட்சியின்கீழ் வந்துள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.