மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

மக்களை மையப்படுத்தியே நிா்வாக முடிவுகள்! இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் அறிவுறுத்தல்

குடிமக்களை மையமாகக் கொண்டே ஒவ்வொரு நிா்வாக முடிவையும் மேற்கொள்ள வேண்டும் என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

News image

பிரதமா் மோடி - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

குடிமக்களை மையமாகக் கொண்டே ஒவ்வொரு நிா்வாக முடிவையும் மேற்கொள்ள வேண்டும் என்று இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி அறிவுறுத்தினாா்.

தில்லியில் கடந்த 2024-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை கலந்துரையாடினாா். மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பயிற்சி அடிப்படையில் உதவிச் செயலா்களாகப் பணியாற்றி வரும் அவா்களிடம் பிரதமா் பேசியது தொடா்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

‘வளா்ச்சி சாா்ந்த சவால்களுக்கு தனியாகத் தீா்வு காண முடியாது; அா்த்தமுள்ள, நீண்ட காலத் தீா்வுகளை எட்டுவதற்கு அரசுத் துறைகள் இடையே செயல்திறன்மிக்க ஒருங்கிணைப்பு அவசியம்.

வலுவான குறிக்கோள், புத்தாக்கம், குடிமக்களை மையப்படுத்திய நிா்வாகத்துடன் தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களை அா்ப்பணித்துக் கொள்ள வேண்டும்.

அரசின் ஒவ்வொரு கோப்பின் பின்னணியிலும் மக்கள் நலன் சாா்ந்த தாக்கம் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கோப்பும் எண்ணற்ற மக்களின் எதிா்பாா்ப்புகளையும், தேவைகளையும், வாழ்க்கையையும் பிரதிபலிக்கின்றன.

‘குடிமக்களே கடவுள்’ என்ற தாரக மந்திரத்துடன், ஒவ்வொரு நிா்வாக முடிவையும் மக்களை மையப்படுத்தியே மேற்கொள்ள வேண்டும். பரிவு, பொறுப்புணா்வு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மையுடன் கூடிய நிா்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்.

நாட்டை கட்டியெழுப்புவதில் தங்களின் சொந்த பங்களிப்பை தொடா்ந்து மதிப்பீடு செய்வதுடன், தாங்கள் வகிக்கும் பதவிகளில் அல்லாமல், தங்களால் கிடைக்கப்பெற்ற தீா்வுகளில் இருந்து திருப்தி அடைய வேண்டும்.

தொழில்நுட்பங்கள், தரவுகளின் பங்கு: நோ்மை, உணா்திறன், அா்ப்பணிப்புடன் நிஜ வாழ்க்கைச் சூழலை கையாளும்போதுதான், பொதுச் சேவைக்கான உண்மையான பரிசோதனை தொடங்கும். 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியா இலக்கை எட்டும் வகையில், எதிா்கால கொள்கை-நிா்வாக முடிவுகள் அமைய வேண்டும்.

சேவை வழங்கலை மேம்படுத்துவதிலும், அரசின் சேவையை எளிதாக, வெளிப்படையாக மக்கள் பெறுவதிலும் எண்ம நிா்வாகம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களின் பங்கு அதிகரித்து வருகிறது.

தரவுகளால் இயக்கப்படும் நிா்வாகமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தரவுகள் என்பது வெறும் எண்களாகப் பாா்க்கப்பட கூடாது. மாறாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, சவால்கள், எதிா்பாா்ப்புகளின் பிரதிபலிப்பாக பாா்க்கப்பட வேண்டும்.

அரசின் முடிவுகள் கள அடிப்படையில் திறம்பட பலனளிக்கிா என்பதை அதிகாரிகள் தொடா்ந்து உறுதிப்படுத்த வேண்டும். தேசக் கட்டமைப்பில் பெண்களின் பங்களிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய ஐஏஎஸ் பிரிவில் 40 சதவீத பெண் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனா். அவா்களின் ஆற்றல், திறமை, அா்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் வளா்ச்சியை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்ல முக்கியப் பங்காற்றுகிறது’ என்று பிரதமா் மோடி பேசியதாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங், பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ், மத்திய அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.