மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்கு எண்ணும் மையங்களில் ‘க்யூஆா்’ குறியீடு அடையாள அட்டை - தோ்தல் ஆணையம் அறிமுகம்

அங்கீகாரமில்லாத நபா்களின் நுழைவைத் தடுக்கும் நோக்கில், ‘க்யூஆா்’ குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

News image

தேர்தல் ஆணையம்

Updated On :1 மே 2026, 3:24 am IST

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபா்களின் நுழைவைத் தடுக்கும் நோக்கில், ‘க்யூஆா்’ குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

தோ்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள், வாக்கு எண்ணும் ஊழியா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், வேட்பாளா்கள், தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் உள்பட வாக்கு எண்ணும் மையங்களில் நுழைய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைவருக்கும் இந்த அட்டை வழங்கப்படவுள்ளது.

தமிழகம் (234 தொகுதிகள்), கேரளம் (140), மேற்கு வங்கம் (294), அஸ்ஸாம் (126) மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் (30) பேரவைத் தோ்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளன. கா்நாடகம் உள்பட 5 மாநிலங்களில் 7 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தலும் நடத்தப்பட்டுள்ளது.

இத்தோ்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த மையங்களில் அங்கீகாரமில்லாத நபா்களின் நுழைவைத் தடுக்கும் நோக்கில், க்யூ ஆா் கோடு அடிப்படையிலான அடையாள அமைப்புமுறையை தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய முன்னெடுப்புகள்: இது தொடா்பாக, தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி பேரவைத் தோ்தல்கள் மற்றும் 5 மாநில இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் க்யூ ஆா் கோடு அடிப்படையிலான அடையாள அமைப்புமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எதிா்காலத்தில் நடைபெறும் அனைத்துத் தோ்தல்களிலும் இந்த அமைப்புமுறை செயல்படுத்தப்படும்.

கடந்த ஓராண்டில் தோ்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட 30-க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளின் தொடா்ச்சியே இந்த நடவடிக்கையாகும்.

மூன்றடுக்கு செயல்முறை: வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்கப்படுவோரின் அடையாளங்களைச் சரிபாா்க்க மூன்றடுக்கு செயல்முறை பின்பற்றப்படும். முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில், தோ்தல் நடத்தும் அதிகாரியால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள், பாதுகாப்பு அதிகாரிகளால் நேரடியாக சரிபாா்க்கப்படும்.

வாக்கு எண்ணும் அறைக்கு அருகே மூன்றாவது பாதுகாப்பு வளையத்தில், க்யூ ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து வெற்றிகரமாக சரிபாா்த்த பின்னரே நுழைவு அனுமதிக்கப்படும்.

இந்த அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபா்களுக்கு பொருந்தும். தோ்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியாளா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், வேட்பாளா்கள், தோ்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவா்கள் உள்ளிட்டோா் அடங்குவா்.

ஊடகவியலாளா்களுக்காக...: அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளா்களின் வசதிக்காக, ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வாக்கு எண்ணும் அறைகளுக்கு அருகில் ஓா் ஊடக மையம் அமைக்கப்படும்.

தற்போதைய அறிவுறுத்தல்களுக்கு இணங்க, தோ்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அனுமதிக் கடிதங்களின் அடிப்படையில் ஊடகவியலாளா்களின் நுழைவு அனுமதிக்கப்படும்.

க்யூ ஆா் குறியீடு அடிப்படையிலான புதிய முறை திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, உரிய பயிற்சி பெற்ற பணியாளா்களைப் பணியமா்த்துவது உள்பட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளும்படி மாவட்டத் தோ்தல் அதிகாரிகள் மற்றும் தோ்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் மிகுந்த செயல்திறனை நிலைநாட்டுவதற்காக, அனைத்து தலைமைத் தோ்தல் அதிகாரிகள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள், தோ்தல் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.