தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பஹல்காம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு- பயங்கரவாதத்தை வீழ்த்த இந்தியா உறுதி: குடியரசுத் தலைவா்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (ஏப்.22) அனுசரிக்கப்பட்டது.

News image

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:32 am IST

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (ஏப்.22) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

‘அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் வீழ்த்த இந்தியா உறுதியுடன் உள்ளது’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு குறிப்பிட்டாா்.

‘மினி ஸ்விட்சா்லாந்து’ என்று வா்ணிக்கப்படும் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காம், ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2025, ஏப். 22-ஆம் தேதி லஷ்கா்-ஏ -தொய்பா பயங்கரவாதிகள் 3 போ் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் குதிரை சவாரி தொழிலாளி ஒருவா் என 26 போ் உயிரிழந்தனா்.

இந்தத் தாக்குதலுக்குப் பழிதீா்க்க, கடந்த மே 7-ஆம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளில் அதிதுல்லிய தாக்குதல் நடத்தி, பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தகா்த்தது இந்திய ராணுவம். இதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே மூண்ட ராணுவ மோதல், பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையின்பேரில் 4 நாள்களில் முடிவுக்கு வந்தது.

பஹல்காம் தாக்குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

‘பயங்கரவாதத்தை வீழ்த்த உறுதி’: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பஹல்காமில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான செயலில் அப்பாவி உயிா்கள் பறிபோன துயரச் சம்பவம் நமது நினைவில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒட்டுமொத்த தேசமும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணைநிற்கிறது. இத்தகைய பயங்கரவாதச் செயல்களால் அமைதி மற்றும் ஒற்றுமைக்கான நமது உறுதிப்பாட்டைத் தடுக்க முடியாது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்தையும் வீழ்த்த இந்தியா உறுதியுடன் உள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது’: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி உயிா்களை நினைவுகூா்கிறேன். ஒரு தேசமாக துக்கத்திலும், உறுதியிலும் ஒன்றுபட்டு நிற்கிறோம். எந்த வடிவிலான பயங்கரவாதத்துக்கும் இந்தியா அடிபணியாது. பயங்கரவாதிகளின் கொடூர திட்டங்கள் வெல்லவும் அனுமதிக்க மாட்டோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட இந்தியா’: மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தேசத்தின் மைந்தா்களின் வீரமரணம், நாட்டின் ஆன்மாவில் என்றென்றும் நிலைத்திருக்கும். பயங்கரவாதத்துக்கும், வன்முறைக்கும் எதிராக ஒட்டுமொத்த நாடும் ஒன்றுபட்டு நின்றது. இனியும் அவ்வாறே ஒன்றுபட்டு நிற்கும். வெறுப்புணா்வு, அச்சத்தை பரப்பும் சக்திகளுக்கு இந்தியா ஒருபோதும் தலைவணங்காது’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பல்வேறு மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தியுள்ளனா்.

இந்தியாவுக்கு பல நாடுகள் ஆதரவு: பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு ஐரோப்பிய யூனியன், இஸ்ரேல் தரப்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு துணைநிற்பதாகவும் அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

தேசத்துக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம்: ராணுவம்

பஹல்காம் தாக்குதல் நினைவு தினத்தையொட்டி, இந்திய ராணுவம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தேசத்துக்கு எதிரான செயல்களுக்கு பதிலடி நிச்சயம். பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதில் ராணுவம் அசைக்க முடியாத உறுதிபாட்டைக் கொண்டுள்ளது. நீதி நிலைநாட்டப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய 3 லஷ்கா் பயங்கரவாதிகளும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ‘ஆபரேஷன் மகாதேவ்’ அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டனா். அதை நினைவுகூரும் வகையில், டிஜிட்டல் போஸ்டா் ஒன்றையும் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில், ‘ஆபரேஷன் சிந்தூா் தொடா்கிறது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.