தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாலில் விழுந்த பழத்துக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி?

திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி என்பது பற்றி..

News image

திமுக கூட்டணியில் தேமுதிக - DPS

Updated On :27 மார்ச் 2026, 3:59 pm IST

முன்னாள் முதல்வர் கருணாநிதி, தேமுதிக கூட்டணி பற்றி 2015ஆம் ஆண்டு பேசுகையில், பழம் நழுவி பாலில் விழும் என்றார், ஆனால், அவர் சொன்னது 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியது.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வரும் தேமுதிக, தற்போது 2026ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்திருக்கிறது. இந்தக் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் வெறும் 0.43 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த தேமுதிக, நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 8 தொகுதியைக் காட்டிலும் அதிக தொகுதிகள் பெற்றது பலருக்கும் ஆச்சரியங்களை ஏற்படுத்தியது.

கூட்டணியில் இணைவதற்கு தேமுதிக வைத்த தொகுதிகளைவிடவும் திமுக கொடுத்த 10 என்பது குறைவு என்றே தேமுதிக தரப்பு கூறுகிறது. ஆனால், திமுக எப்படி 10 தொகுதிகளைக் கொடுத்தது என்ற கேள்வி மட்டும் எழுந்துகொண்டேயிருக்கிறது.

திமுகவிலிருந்து, ஆறு மாதங்களுக்கு முன்பே தேமுதிகவிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தைத் தொடங்கியதாகவும் அப்போதே அதிமுகவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. விஜய் வருகையால், தேமுதிகவை தன் பக்கம் ஈர்க்க திமுக கடும் முயற்சி செய்தது. அண்மைக் காலமாகத்தான் தேமுதிகவின் வாக்கு வங்கி சரிந்து வருகிறது. ஆனால், கட்சியின் பலம் மாநிலம் முழுவதும் பரவியிருக்கிறது. ஒரு சில வளர்ந்த கட்சிகளின் செல்வாக்கு, சில தொகுதிகளுக்குள் அடங்கிவிடுவது போல தேமுதிக இல்லை என்றும் திமுக நம்பியது.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 19 தொகுதிகள் கேட்கப்பட்டு, அதிமுக தரப்பில் 12 அல்லது 13 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முடியும் என பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. சரியாக அந்த நேரத்தில், திமுக கூட்டணியிலிருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் சலசலப்பை ஏற்படுத்த, தேமுதிக மீதான பிடியை திமுக இறுக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது, தேமுதிக-வுக்கு திமுக தரப்பில் அதிகபட்சம் 8 தொகுதிகள்தான் பேசப்பட்டுள்ளது. ஆனால், தேமுதிக 14 தொகுதிகள் என்ற நிலையிலேயே நின்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் கூட்டணியிலிருந்து வெளியேறாத நிலையில், இடது சாரிக் கட்சிகள் தங்கள் கோரிக்கையை குறைத்துக் கொள்ள எல்லாம் சேர்ந்து 10 தொகுதிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டது.

கூட்டணியில் இணைய தேமுதிக ஒப்புக் கொண்டபோதே, எல்.கே. சுதீஷுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என்பதும் உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் பரபரப்பு மாநிலம் முழுவதும் தொற்றிக்கொண்டிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு, வேட்பாளர் அறிவிப்பு என அதிமுக கூட்டணி வேகமாக முன்னேறி வரும் நிலையில், திமுக கூட்டணி இன்னமும் எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கிறது.

திமுக கூட்டணியில் புதிய கட்சிகளுக்கு கொடுத்த வரவேற்பினால் ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சித் தலைவர்களுக்கு சற்று மன வருத்தங்கள் உண்டாகின. அவர்கள் வெளியேறிவிடுவார்கள் என்று கிசுகிசுக்கப்பட்ட நிலையில், திமுக கூட்டணியிலிருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி மட்டும் வெளியேறியது.

கடந்த 2021 பேரவைத் தோ்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, கடலூர் மாவட்டம் பண்ருட்டி தொகுதியில் தி.வேல்முருகன் வெற்றி பெற்றார். இந்த முறை தனிச் சின்னம், குறைந்தபட்சம் 2 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி வந்த நிலையில், ஒரு தொகுதி மட்டுமே உறுதியானதால்தான் அவர் வெளியேறியிருக்கிறார்.

இதற்கிடையே தங்களுக்கு வெற்றிவாய்ப்பு உள்ள ஆம்பூர், விருகம்பாக்கம், விருத்தாச்சலம், ரிஷிவந்தியம், விருதுநகர் 25 தொகுதிகளின் பெயர்களை தேமுதிக, திமுகவிடம் வழங்கியிருக்கிறது. அதில் 10 தொகுதிகளை திமுக தேர்வு செய்து, தேமுதிகவுக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

About how DMDK, which joined the DMK alliance, got 10 seats..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.