கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள தொகுதி விருத்தாசலம். இதன் பழைமையான பெயர் திருமுதுகுன்றம்.
மிக பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் மற்றும் கொளஞ்சியப்பர் கோயில் அமைந்துள்ளது. விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தீர்த்தங்கள், கோபுரங்கள், தேர்கள், பிரகாரங்கள், விநாயகர்கள் என "ஐந்து' என்ற எண்ணின் சிறப்பாகக் கொண்ட சிவத்தலம். மாசி மகத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்தக் கோயில் அருகில் மணிமுக்தா ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நீராடினால் கங்கையில் நீராடிய கிடைக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
சிறப்புகள்: கிராமங்களை அதிகமாகக் கொண்ட தொகுதி. விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்பு பிரதான தொழில். பெரிய அளவிலான தொழிற்சாலைகள் ஏதுமில்லாததால் பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. தமிழ்நாட்டிலேயே விருத்தாசலத்தில்தான் செராமிக் தொழிற்பேட்டை மற்றும் கல்லூரி அமைந்துள்ளது. தொழிற்பேட்டையில் சுமார் 500 சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பீங்கான் மற்றும் அகல் விளக்குகள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
சமூக நிலவரம்: வன்னியர், பட்டியலினத்தவர் பெரும்பான்மையாக உள்ளனர். செட்டியார், நாயுடு, ரெட்டியார், உடையார் என பிற சமூக மக்கள் பரவலாக உள்ளனர். கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களும் குறிப்பிட்ட அளவு உள்ளனர்.
விருத்தாசலம் தொகுதிக்கு வடக்குப் பகுதியில் விழுப்புரம் மாவட்டம், தெற்கில் புவனகிரி தொகுதி, கிழக்கில் நெய்வேலி தொகுதி, மேற்கில் திட்டக்குடி தொகுதி எல்லைகளாக அமைந்துள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விருத்தாசலம் நகராட்சி, மங்கலம்பேட்டை பேரூராட்சி, கம்மாபுரம் ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள், விருத்தாசலம் ஒன்றியத்தில் 51 ஊராட்சிகள், நல்லூர் ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் இணைந்து விருத்தாசலம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜயகாந்த் தேமுதிகவை தொடங்கி விருத்தாசலத்தில் தனித்து நின்று வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோரிக்கைகள்: விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
விருத்தாசலத்தில் பெண்கள் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், தாலுகா காவல் நிலையம் அமைக்க வேண்டும். விருத்தாசலம் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும். புனிதமாக கருதப்படும் மணிமுக்தா ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தூய்மைப்படுத்த வேண்டும். தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட தொழிற்பேட்டை நிலத்தை மீட்க வேண்டும். பீங்கான் சுரங்க சுடு சீலை அரசு அமைக்க வேண்டும். அரசு வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும் என்பன பிரதான கோரிக்கைகள்.
தேர்தல் களத்தில்... அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் ப.தமிழரசி, திமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இரு பெண் வேட்பாளர்களுக்கு இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. நாதக சார்பில் ஆனந்தி தண்டபாணி, தவாக சார்பில் எ.நா.அறிவழகன், தவெக சார்பில் ச.விஜய் உள்ளிட்ட 18 பேர் களத்தில் உள்ளனர்.
தமிழரசி (பாமக): உள்ளூர் பகுதியைச் சேர்ந்தவர். சமுதாய வாக்கு உள்ளது. மருத்துவர் என்பதால் அனைவருக்கும் அறிமுகமானவர்.
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியவர். கூட்டணியில் பிரதான கட்சியான அதிமுகவின் வாக்கு வங்கி பலம். பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொதுச் செயலருமான பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதால் இந்தத் தொகுதி தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் 3-ஆவது இடத்தையே பிடிக்க முடிந்தது. இந்த முறை திமுக தலைமையிலான கூட்டணி வாக்குகளைப் பெரிதும் நம்பி களத்தில் உள்ளார்.
நாதக, தவெக வேட்பாளர்கள்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆனந்தி தண்டபாணி, தவெக வேட்பாளர் ச.விஜய் ஆகியோர் பெறும் வாக்குகள் இரு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
இந்தத் தொகுதியில் 1957-இல் இருந்து நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 5 முறை, அதிமுக 3 முறை, திமுக மற்றும் தேமுதிக தலா 2 முறை, ஜனதா தளம், பாமக, சுயேச்சை தலா ஒரு முறை வெற்றி பெற்றுள்ளன.
திமுக, அதிமுக நேரடியாக மோதாமல் அந்தக் கட்சிகளின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் மோதும் தொகுதிகளில் விருத்தாசலமும் ஒன்று. அந்த வகையில் பாமக, தேமுதிக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் வெற்றி

திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றிபெறும்: பிரேமலதா விஜயகாந்த்

கிராமங்களில் அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படும்: பிரேமலதா விஜயகாந்த்

விருத்தாசலம் தொகுதி தேமுதிக வேட்பாளா் பிரேமலதா விஜயகாந்த்!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
