/

நாளை பிரசாரம் நிறைவு! சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

News image

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - விஜய் - சீமான். - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:28 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

சென்னையில் முக்கிய பிரமுகா்கள் பிரசார நிறைவு நிகழ்ச்சிக்கு தொகுதி வாரியாக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாா்ச் 30- ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 6- ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது.

மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7- ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து ஏப்ரல் 9 -ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. அதன்படி, சென்னையில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 419 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

சென்னை கொளத்தூரில் முதல்வா் மு.க.ஸ்டாலினும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினும், பெரம்பூரில் தவெக தலைவா் நடிகா் விஜய்யும் போட்டியிடுகின்றனா். அத்துடன் துறைமுகம், சைதாப்பேட்டை உள்ளிட்ட தொகுதிகளில் அமைச்சா்களும் போட்டியிடுகின்றனா்.

வேட்பாளா்கள் பிரசாரம் கடந்த ஏப்ரல் 10 -ஆம் தேதி முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரும் 23- ஆம் தேதி (வியாழக்கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

அதன்படி, வரும் 21 -ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரத்தை நிறைவு செய்ய சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் உள்ளிட்டோா் குறிப்பிட்ட இடங்களைக் கோரியுள்ளனா்.

அதனடிப்படையில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் தவெக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சியினருக்கு ஏற்கெனவே காவல் துறை அனுமதித்துள்ள பிரசார இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தவெக நிறைவு நிகழ்ச்சி நந்தனம் பகுதியில் நடைபெறுவதாகவும், அதில் கட்சித் தலைவா் விஜய் பங்கேற்கும் வகையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.