தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது வேதனை அளிப்பதாக, அக்கட்சியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப். 23 அன்று நடைபெறவுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிடும் மொத்தம் 28 தொகுதிகளில் முதற்கட்டமாக 27 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வெள்ளிக்கிழமை (ஏப். 3) அன்று நீண்ட இழுபறிக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி, வெற்றி வாய்ப்புள்ள பலருக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது என காங்கிரஸ் கட்சியின் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கூறியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் 12 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கபட்டுள்ளதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் மீதமுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் மனக்குமுறலையும், கொந்தளிப்பையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. வேட்பாளர்கள் முன்பே முடிவுசெய்யப்பட்டு, அதற்கேற்ப தொகுதிகள் கேட்டு வாங்கப்பட்டுள்ளன.
நீண்ட காலம் காங்கிரஸ் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றி வருகிற, தகுதியும், மக்கள் செல்வாக்கும், வெற்றி வாய்ப்பும் உள்ள பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இருபது ஆண்டுகள், முப்பது ஆண்டுகள் பணியாற்றிய பலர் இருக்கும்போது அந்த இடத்தில் கட்சிக்கு வந்து சில நாட்கள், சில ஆண்டுகளே ஆன, கள அனுபவம் இல்லாத சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
தமிழ்நாட்டின் மேற்கு மண்டலமான கொங்கு நாட்டில் செல்வாக்கு மிகுந்த 38 சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பானமை சமூகமாக உள்ள கொங்கு வெள்ளாளக் கவுண்டர் மற்றும் அருந்ததியர் சமூகங்களுக்கு முழுக்கவும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் தேர்தல் வரலாற்றில் இதற்குமுன்பு நிகழ்ந்திராத ஒன்று. கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தின் உட்பிரிவுகளுக்கு இரண்டு தொகுதிகளை வழங்கியுள்ள காங்கிரஸ் கட்சி, பெரும்பான்மையான கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூகத்தைப் புறக்கணித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
அதே போல 28 தொகுதிகளில் ஆறு தனித்தொகுதிகளைக் கேட்டுப்பெற்ற காங்கிரஸ் கட்சி, மிகவும் பின் தங்கிய, விளிம்புநிலை சமூகமான அருந்ததியர் சமூகத்திற்கு வாய்ப்பை மறுத்திருக்கிறது. இரண்டு பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது காங்கிரஸ் கட்சியின் சமூக நீதிக் கோட்பாட்டிற்கும், சமூகத்தின் கடைக்கோடி மக்களுக்காகப் போராடும் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் அரசியல் நிலைப்பாட்டிற்கும் எதிரானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், சட்டமன்ற கட்சித் தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தைப் பற்றியோ, தமிழ்நாடு எதிர் நோக்கியுள்ள கடுமையான அரசியல் சூழலைப் பற்றியோ, உண்மையான கட்சித் தொண்டர்களின் உணர்வுகளைப் பற்றியோ எவ்வித கவலையும், அக்கறையும் இல்லை என்பது தெளிவு.
இவர்களின் பட்டியலை ஏற்க மறுக்கின்ற உரிமை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் உண்டு. அதுதான் காங்கிரஸ் கட்சியின் வலிமையான ஜனநாயகத் தன்மை. இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்த நாங்கள் மேற்கொண்ட முயற்சி வெற்றிபெறவில்லை. ஆனால் நாங்கள் உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை உள்வாங்கி, அவர்கள் எண்ணங்களைப் பிரதிபலித்தோம். அவர்களைக் கைவிட்டுவிடவில்லை என்கிற திருப்தி மட்டுமே எஞ்சியுள்ளது.
முப்பது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் பணியாற்றியுள்ளேன். எவ்வளவோ கடினமான காலங்களை, சவால்களை கட்சி எதிர்கொண்டபோதெல்லாம் உணர்வுப் பூர்வமான ஒட்டுதலோடு பணியாற்றியிருக்கிறேன். போராடியிருக்கிறேன். முதன்முதலாக மிகவும் அந்நியமாக உணர்கிறேன். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும், அரசியல் சூழலையும் கருத்தில் கொண்டு, இதுகுறித்து வாக்குப்பதிவு முடிந்தபிறகே விரிவாகப் பேசவிரும்புகிறேன்.
இந்த நேரத்தில் மனம்சோர்ந்து போயிருக்கின்ற, தமிழ்நாட்டில் ஏறக்குறைய அறுபது ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், காங்கிரஸ் கொடியை பெருமையோடு உயர்த்திப்பிடித்திருக்கின்ற ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் எனது பேரன்பையும், ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் அர்ப்பணிப்பிற்குத் தலைவணங்குகிறேன்.” எனக் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 28 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்த பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Jyothimani, MP from the Congress party, has expressed anguish that many individuals who worked with dedication were denied the opportunity in the TN elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எதிரியும் எதிரியும் எப்படி நண்பன்? தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது! - ஜோதிமணி
திமுககூட காங்கிரஸை வெளியேற்றியிருக்கிறது: ஜோதிமணி
தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவி நீக்கம்
காங்கிரஸ் தொண்டர்... விசிக வேட்பாளர்! திடீர் அறிவிப்பு பற்றி ஜோதிமணி சொல்வது என்ன?
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

