
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன என்விஎஸ்-03 வழிகாட்டி செயற்கைக்கோளை ஜிஎஸ்எல்வி - எஃப் 18 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தி, அதை நிர்ணயிக்கப்பட்ட புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தி மற்றொரு மைல்கல்லையும் எட்டியிருக்கிறது இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ). வழிகாட்டுதல் செயற்கைக்கோளான என்விஎஸ்-03, பாதுகாப்புத் துறை, பொதுமக்கள் பயன்பாடு மற்றும் தொலைத்தொடர்பு நடவடிக்கைகளில் துல்லியமான சேவையை அளிக்கும்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட என்விஎஸ்-02 செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் பயணிக்காமல் பின்னடைவைச் சந்தித்தது. புவி வட்டப் பாதையில் பயணிக்கத் தொடங்கியபோது, அதன் உந்து விசைக்கான என்ஜின் தன்னிச்சையாக செயல்படவில்லை. அந்தத் தொழில்நுட்பக் கோளாறு இந்த முறை நிகழாமல் தடுக்க இஸ்ரோ உரிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு என்விஎஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது.
அமெரிக்கா, சீனா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகள் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி சேவைகளைப் பெற்று வருகின்றன. வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் முழு புவியையும் உள்ளடக்கிய உலகளாவிய அமைப்புகள், குறிப்பிட்ட பகுதிகளை உள்ளடக்கிய மண்டல அமைப்புகள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய வழிகாட்டுதல் செயற்கைக்கோள் தொகுப்புகளில் முதன்மையானதான ஜிபிஎஸ் அமைப்பை அமெரிக்கா இயக்குகிறது.
1999-ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, பாகிஸ்தான் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக மோதல் நடைபெற்ற பகுதி குறித்த அமெரிக்காவின் ஜிபிஎஸ் தரவுகளை இந்தியா கோரியது. ஆனால், அமெரிக்கா உதவவில்லை. இதையடுத்து, ராணுவ மோதல்களின்போது வெளிநாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வழிகாட்டுதல் அமைப்புகளைச் சார்ந்திருப்பதில் உள்ள பலவீனத்தை உணர்ந்த இந்தியா, உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் வழிகாட்டுதல் செயற்கைக்கோள்களை செலுத்தும் திட்டத்தை முன்னெடுத்தது.
2006-ஆம் ஆண்டில் இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (ஐஆர்என்எஸ்எஸ்) ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட தொகுப்பாக மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதில் மூன்று செயற்கைக்கோள்கள் புவிநிலை சுற்றுப்பாதையிலும், நான்கு செயற்கைக்கோள்கள் சாய்ந்த புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தரைவழி, கடல்வழி, வான்வழிப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்கு உதவும் இந்த மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பின் கீழ் ரூ.1,420 கோடியில் ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ, 1பி, 1சி, 1டி, 1இ, 1எஃப், 1ஜி என ஏழு செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டு, அவை கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரையான காலகட்டங்களில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
ஐஆர்என்எஸ்எஸ் அமைப்பின் அடுத்தகட்ட மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு என்விஎஸ் செயற்கைக்கோள் அமைப்பு (நேவிக்). இதன் முதன்மைப் பயன்பாடு இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, பொதுமக்களின் அன்றாடப் பயன்பாடு; மற்றொன்று பாதுகாப்பு மற்றும் ஆயுதப் படைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட மிகவும் குறிப்பிட்ட மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
என்விஎஸ் 01 செயற்கைக்கோள் 2023-ஆம் ஆண்டிலும், என்விஎஸ் 02 செயற்கைக்கோள் 2025-ஆம் ஆண்டிலும் அனுப்பப்பட்டன. தற்போது அவற்றுக்கு மாற்றாக அதிநவீன என்விஎஸ் 03 செயற்கைக்கோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.
2,250 கிலோ எடை கொண்ட என்விஎஸ் 03 செயற்கைக்கோளின் செயல்பாட்டுக் காலம் 10 ஆண்டுகள். இதில் எல் 1, எல் 5 எஸ் பேண்ட் டிரான்ஸ்பான்டர்கள், உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரான ரூபிடியம் அணுக் கடிகாரம் உள்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைகளைக் கடந்து 1,500 கி.மீ. பரப்பளவுக்கு துல்லியமான வழிகாட்டி மேப்பிங் சேவைகளை என்விஎஸ் 03 வழங்கும்.
தற்போது சுற்றுப்பாதையில் மூன்று வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் உள்ளன. என்விஎஸ்-03 அதில் நான்காவதாக இணையவுள்ளது. நேவிக் தொழில்நுட்பம்மூலம் இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரச் சேவைகளை வழங்க சுற்றுப்பாதையில் குறைந்தது 4 செயற்கைக்கோள்கள் தேவை. என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றியின்மூலம் நேவிக் சேவைகளுக்கான கட்டமைப்பை இந்தியா முழுமையாகப் பெற்றிருக்கிறது.
நேவிக் செயற்கைக்கோள் கட்டமைப்புமூலம் தற்போது 10,400-க்கும் மேற்பட்ட ரயில்கள், 64,000 மீன்பிடிப் படகுகள் நேரலையில் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் கண்காணிக்கப்படும் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையை ஒரு லட்சமாக உயர்த்த இஸ்ரோ இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதற்கு என்விஎஸ்-03 செயற்கைக்கோளின் பங்களிப்பு உதவும்.
அடுத்தடுத்து என்விஎஸ்-04, என்விஎஸ்-05 செயற்கைக்கோள்கள் தலா ஐந்து மாத இடைவெளியில் செலுத்தப்படும்; என்விஎஸ் 02-க்கு மாற்றுச் செயற்கைக்கோளும் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் அறிவித்திருக்கிறார். விண்ணை எட்டும் 'இஸ்ரோ' சாதனைகளால் பாரதம் தலைநிமிர்கிறது!
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்; மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும். மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
திருக்குறள் (எண் 595) அதிகாரம்: ஊக்கம் உடைமை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






