தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நினைப்பும் நிஜமும்... மாமியார் வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா?

மாமியார் வேண்டாம், கூட்டுக் குடும்பம் வேண்டாம் என்று மருமகள்கள் நினைப்பது பற்றி...

Expectations and Reality: Do you wish you didnt have a mother-in-law

மாமியார் வேண்டாம் என்று எண்ணுகிறீர்களா? - Gemini AI

Published On :25 அக்டோபர் 2026, 11:00 am IST

ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை 'மாமியார்' என்ற சொல்லே பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது. மாமியார் என்றாலே மருமகளுக்கு எதிரி போன்றதொரு தோற்றம் இன்றுமே தொடர்கிறது.

90ஸ் கிட்ஸ் முதல் இன்றைய 2கே கிட்ஸ் வரையுள்ள பெண்கள், பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பே, 'மாமியாருடன் கூட்டுக் குடும்பம் வேண்டாம், தன் கணவருடன் தனிக் குடித்தனம் வேண்டும்' என்ற கருத்தை முன்வைக்கின்றனர்.

தான் சுதந்திரமாக இருக்க வேண்டும், யாரையும் சாராமல் முடிவெடுக்க வேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும், கணவருடன் அடிக்கடி வெளியில் செல்ல வேண்டும் என சுதந்திர வாழ்வை விரும்பி இவ்வாறு கூறுகிறார்கள். பலரும் அதுபடியே நடந்தும்கொள்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது வீட்டில் 'பெரியர்வர்கள்' இருந்தால் உதவியாக இருக்குமே என்று ஒருமுறையாவது நினைக்கும் வாய்ப்பு அதிகம்.

குறிப்பாக, திருமணமாகி குழந்தைகள் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக மாமியார் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்திருப்பார்கள், நினைப்பார்கள்.

சிலருக்கு அம்மா வீட்டில் இருந்து பெரியளவில் ஆதரவு இருக்கும். மகள் மட்டுமின்றி மகளின் குழந்தைகளையும் சில பெற்றோர்கள் கண்ணும்கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்கள். அப்படி இருப்பவருக்கு மாமியார் - மாமனார் எண்ணம் பெரிதாக வராது.

ஆனால், அம்மாவின் ஆதரவும் இன்றி யாருடைய ஆதரவும் இன்றி தனிமையாக இருப்பவர்களுக்குத்தான் ஓர் உறவின் அருமை தெரியும்.

பெண்கள் பலரும் அம்மாவோ, மாமியாரோ அல்லது இருவருமே இல்லாத சூழலில் வாழ்கிறார்கள்.

மாமியார் இல்லாதவர்கள்...

மாமியார் இல்லாதவர்கள், தங்கள் வீட்டில் எந்த இடைஞ்சலுமின்றி சுதந்திரமாக இருக்க முடியும், பெரியவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்காது, கணவருடன் சுதந்திரமாக வெளியில் செல்ல முடியும், எந்தவொரு முடிவும் தன்னிச்சையாக எடுத்து செயல்படுத்தவும் முடியும், வீட்டை தங்கள் விருப்பப்படி நிர்வகிக்க முடியும். 'அது சரியில்லை, இது சரியில்லை' என்று சொல்வதற்கு பெரியவர்கள் (குறிப்பாக மாமியார்) இல்லாததால் சற்று மன நிம்மதியுடன் இருக்க முடியும் என்று சொல்லலாம்.

ஆனால், நீங்கள் தவறு செய்தால் அதை சரிசெய்ய யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். சில முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் அறிவுரை சொல்ல பெரியவர்கள் இருக்க மாட்டார்கள். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் பார்த்துக்கொள்ள ஒருவரும் இருக்கமாட்டார்கள். வீட்டில் சடங்கு, சம்பிரதாயங்கள் பற்றி தெரியாது.

ஒரு வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் அந்த வீட்டில் உறவினர்களின் வட்டமே சுருங்கிவிடும். பெரியவர்கள் இருக்கும்போது அவர்களுக்கு உறவுகள் தெரியும், உறவுகளுடன் இணக்கமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் இல்லாத சூழலில் உறவினர்களின் நெருக்கம் குறைந்துவிடும். அதிலும் அந்த பிள்ளைகள் சொந்த ஊரை விட்டு இடம்பெயர்ந்துவிட்டால் எந்த உறவினர் தொடர்பும் பெரிதாக இருக்காது. இதனால் நீங்கள் பெரிதாக ஆதரவின்றி தனியாக இருப்பதுபோன்று உணரலாம். உங்களுக்கே இந்த நிலைமை என்றால் உங்களுடைய குழந்தைகள் நிலை..?

அடுத்து வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால் பாதுகாப்பு இருக்காது. மனைவி, குழந்தைகளை தனியாக விட்டு கணவன் வெளியில் செல்ல முடியாது.

அதைத் தாண்டி, ஒரு கணவன் - மனைவியாக குழந்தைகளை தனியாக வளர்ப்பது கடும் சவாலாக இருக்கும். அதிலும் தற்போதைய பொருளாதாரச் சூழலில் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தால் அந்த குழந்தை ஒரு தனிமையான சூழலில்தான் வரும். குறிப்பாக நகரங்களில் வசிப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான். அந்த சூழலில் குழந்தைகளுக்காக வேலையைவிட்ட பெண்கள் ஏராளம்.

இதுவே வீட்டில் பெரியவர்கள் இருக்கும்பட்சத்தில் அவர்களின் கண்காணிப்பில் குழந்தையைவிட்டு குடும்ப பொருளாதாரத்திற்காக, கணவருக்கு ஆதரவாக மனைவி வேலைக்குச் செல்ல முடியும். பெண்கள் பலர் படித்து வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தும் குடும்பத்திற்காக கனவைத் தியாகம் செய்கிறார்கள்.

அம்மா - அப்பாவும் இல்லை, மாமனார் - மாமியாரும் இல்லை என்பவர்களுக்கு... எந்தவொரு சூழ்நிலையையும் தனியாக சமாளிக்க வேண்டிய சூழல், குழந்தைகளையும் தனியாக வளர்க்க வேண்டிய சூழல், வீட்டில் ஒருவருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மற்ற ஒருவர்தான் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் என குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களின் வாழ்க்கைச் சூழல் மோசமாக இருப்பதாகவே சொல்கிறார்கள். சுதந்திரத்தை அதிகம் உணரும் அவர்கள் பல நேரங்களில் தனிமையையும் உணர்கிறார்கள்.

சிலருக்கு அம்மா - அம்மா, மாமனார் - மாமியார் இருந்தாலும் அவர்களின் ஆதரவு பெரிதாக இருப்பதில்லை. அவர்களுக்கும் இதே சூழல்தான்.

அதனால், கணவனின் வீட்டிற்குச் செல்லும் பெண்ணுக்கு, அம்மா இருந்தாலும் கண்டிப்பாக மாமியார் தேவை. உதாரணத்திற்கு, மருமகளாகிய உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது குழந்தைப்பேறு சமயத்திலேயோ ஓர் ஆதரவு தேவைப்படுகிறது. பெரும்பாலான மருமகள்களுக்கு அந்த நேரத்தில் மாமியார் பெரும் ஆதரவாக இருக்கிறார்கள். அதுபோலவே மாமியாருக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருமகள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இருக்கும்.

இன்று மாமியார் - மருமகள் உறவு என்பது அம்மா - மகள் உறவு போல இருக்கும் பல வீடுகளை நாம் பார்த்து வருகிறோம். மகளைவிட மருமகளை கவனிக்கும் மாமியார்கள் அதிகரித்துவிட்டார்கள். தன் மகன் அவனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அம்மாக்கள், மருமகள்களுடன் ஒத்துப்போகிறார்கள். மகனுக்காக சில விஷயங்களை சகித்துக்கொள்கிறார்கள்.

அதுவே, சில வீடுகளில் மாமியார் எப்படி இருந்தாலும் மருமகள் கண்டுகொள்வதில்லை. அதுபோல மருமகள் நல்ல முறையில் நடந்துகொண்டாலும் மாமியார் அந்த மருமகளை ஏற்றுக்கொள்வதில்லை. சில பெண்களுக்கு அம்மா இருந்தாலும் திருமணமான பிறகு மகள்களை பெரிதாக கண்டுகொள்வதில்லை.

இந்த சமூகத்தில் நாம் ஒருவரையொருவர் சார்ந்துதான் வாழ்கிறோம். யாரையும் சாராமல் இந்த உலகத்தில் வாழ முடியாது என்பது கசப்பான உண்மை. அதனால் குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது ஒரு நல்ல குடும்பத்தை மட்டுமின்றி ஒரு நல்ல சமூகத்தையும் உருவாக்கும்.

மருமகள்களுக்கு....

மருமகள்களே, அதனால் மாமியார் வேண்டாம் என்று நினைக்காதீர்கள். அவர்களும் உங்களுயை அம்மா போலதான். அம்மாவுக்கும் மகளுக்கும் என்ன 100% ஒத்துப்போகிறதா? இல்லைதானே. உங்களின் நிறை, குறைகளை உங்களுடைய அம்மா எடுத்துச் சொல்கிறார்தானே... உங்கள் இருவருக்கும் சண்டை வருகிறது தானே? அதற்காக அம்மா வேண்டாம் என்று சொல்ல முடியுமா? அதுபோலவே மாமியாரும்.

தன்னுடைய மகனின் வாழ்க்கையைக் கெடுக்க எந்த தாயும் நினைக்கமாட்டார். ஒரு குடும்பத்தில் புதிதாக ஒரு உறவு (மருமகள்) வரும்போது அனைத்து அம்மாக்களுக்கும் ஒரு பயம் கலந்த உணர்வு ஏற்படும். தன் மகன் மீதுள்ள அன்பால், 'அவனை நம்மிடம் இருந்து பிரித்துவிடுவாளோ' என்ற எண்ணம் தோன்றலாம். திருமணம் ஆன பிறகும் ஆண்களும் அம்மாவின் பிள்ளைகளாகவே இருக்கிறார்கள். அதனால் மாமியாரை மட்டும் குறைசொல்ல முடியாது.

இவ்வளவு நாள் உடனிருந்து உங்கள் கணவரை வளர்த்து ஆளாக்கிய உங்கள் மாமியாரை நீங்களும் புரிந்துகொள்ள வேண்டும். சிறிய விஷயங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்பது நலம்.

காலம்தான் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு. எனவே எடுத்தவுடன் சண்டையிடாமல், வாக்குவாதம் செய்யாமல் சிறிது நாள்கள் கடந்துவிட்டால் குடும்பத்திற்குள் ஒரு புரிதல் ஏற்பட்டுவிடும்.

மாமியாருக்கும் வயதாகும்போது அவர்களுடைய நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம், நீங்களும் ஒருநாள் மாமியார் ஆகும்போது உங்களுக்கும் இதே நிலைதான் என்பதை மனதில் வையுங்கள். அதையும் நீங்கள் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

மாமியாரும் மருமகளும் நண்பர்களாக இருக்கும் பல குடும்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன. புரிதல்தான் வாழ்க்கையை நிம்மதியாக்கும், மகிழ்ச்சியாகும், அழகாக்கும்.

மாமியார்களுக்கு...

உங்களுக்கு என ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளுங்கள். கணவன் - மனைவி பிரச்னையில் கணவனின் பெற்றோர்களும் சரி, மனைவியின் பெற்றோர்களும் சரி தலையிடாமல் இருப்பதே நல்லது. பெற்றோர்கள் தலையிடுவதால்தான் சிலர் விவாகரத்து வரை செல்கின்றனர். எனவே அவர்கள் வழியில் விட்டுவிட வேண்டும்.

குறிப்பாக கணவன் - மனைவி தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களில் தலையிட வேண்டாம்.

வீட்டிற்கு புதிதாக வரும் பெண்ணுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும், அதையும் நீங்கள் புரிந்துகொண்டு அவர்களுக்கான இடைவெளியை கொடுக்க வேண்டும்.

உங்கள் மகன் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே நீங்கள் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை கவனத்தில் கொண்டு மருமகளுடன் ஒத்துப்போக வேண்டும்.

என்னதான் பெண்கள் இன்று வேலைக்குச் சென்று சம்பாதித்தாலும் ஆண்களின் தலையில்தான் பொறுப்பு அதிகம். இதனை யாரும் மறுக்க முடியாது, அந்த வகையில் ஆண்களுக்கு வீட்டில் நிம்மதியும், மகிழ்ச்சியும், வீட்டில் உள்ளவர்களின் ஆதரவும் தேவை. அவருக்கு அம்மாவும் வேண்டும், மனைவியும் வேண்டும். அப்படியிருக்க மாமியார் - மருமகள் ஒரு புரிதலுடன் நட்பாக இருக்கும்பட்சத்தில் அந்த ஆண்களுக்கு மிகப்பெரும் ஆதரவாக இருக்கும்.

அதனால், "மாமியார் இல்லாத வீடும் பாழ், மணல் இல்லாத ஆறும் பாழ்" என்பது எக்காலத்திற்கும் பொருந்தும் பழமொழி.

Summary

Expectations and Reality: Do you wish you didnt have a mother-in-law?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.