ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கற்றுக்கொள்ளும் காலம்

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :26 மார்ச் 2026, 5:05 am IST

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்துவிடும். சுமார் ஒன்றரை மாத காலம் கோடை விடுமுறையாக இருக்கும்.

இந்த விடுமுறையை மாணவர்கள் தம் அறிவை பல்வேறு வழிகளில் கூர்தீட்டிக்கொள்ளக் கிடைத்திருக்கும் நல்வாய்ப்பாகக் கருத வேண்டும். பாடத் திட்டக் கல்வியைத் தாண்டியும் இந்த உலகில் மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன. அதற்கான தருணமே கோடை விடுமுறைக் காலம். கோடை விடுமுறையில் காய்கறிகள் நறுக்குவது, சமையல் வேலைகள் செய்வது, பாத்திரம் துலக்குவது, துணிகளைத் துவைப்பது என்று வீட்டு வேலைகளைச் செய்ய பிள்ளைகளைப் பழக்கலாம். விடுதியில் தங்கிப் படிக்க வேண்டிய நிலை வந்தால், அவரவர் வேலைகளை அவரவர்களே செய்துகொள்ளும் வகையில் அவர்களுக்கு இப்போதே சிறந்த பயிற்சி அளிக்கலாம்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றைப் பார்வையிடச் சென்ற போது, அங்கு மாண்டிசோரி கல்வி முறையில் படிக்கும் ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கேரட்டை பொடிப் பொடியாக நறுக்குவதையும், சின்னஞ்சிறு கைகளால் சப்பாத்திக்கு மாவு பிசைவதையும் பார்த்து வியந்தேன். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன், பாயை எடுத்து விரித்துப்போட்டு அதில் அமரவும், பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும்போது பாயை மடித்து உரிய இடத்தில் வைக்கவும் அவர்களுக்குப் பழக்கியிருந்தார்கள். காரியத்தில் கண்ணாக, கவனக்குவிப்புடன் அந்த மழலைகள் செய்த பணிகள் மகிழ்வை அளித்தன.

ஓவியம், பாட்டு, நடனம், யோகா, நீச்சல், இசைக் கருவிகள் வாசிப்பது என அவரவருக்குப் பிடித்த கலைகளைக் கற்க இந்தக் கோடை விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கெனவே இந்தக் கலைகளைக் கற்று வருபவர்கள், விடுமுறை நாள்களில் கூடுதலாக சில மணி நேரங்களை ஒதுக்கி விரிவாகக் கற்றுக் கொள்ளலாம். தோட்ட வேலைகளில் பெரியவர்கள் ஈடுபடும்போது, தங்கள் வீட்டுச் சிறார்களையும் பங்கேற்கச் செய்யும்போது, இயற்கை மீதான அவர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட முடியும்.

ஒரு காலத்தில் பெண் குழந்தைகள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டுமெனக் கருதி, பள்ளிகளில் கற்றுத் தரப்பட்ட தையல் கலையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரலாம். தினசரி வாழ்வில், பிய்ந்து போன சட்டைப் பொத்தானைத் தைக்கத் தெரியாமல் அவதிப்படுபவர்களைப் பார்க்கும்போது பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஆண், பெண் பேதமின்றி அவரவர் ஆடைகளின் கிழிசல்களைத் தைக்கும் அளவுக்காவது இந்தக் கலையில் மாணவர்கள் எல்லோரும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

சிறு சிறு பிளம்பிங் வேலைகள், மின் உபகரணங்களைக் கழற்றி மாற்றுதல், ஸ்க்ரூ டிரைவரைப் பயன்படுத்தி கருவிகளை முறுக்கும் வேலை, பழுதுபட்ட மின்சார பல்பை மாற்றுதல், வீட்டை தூய்மைப்படுத்துதல், ஆடைகளுக்கு இஸ்திரி போடுவது, புத்தகங்களுக்கு அட்டை போடுவது, பூ தொடுப்பது, பாசிமணி மாலை கட்டுவது, கூடை பின்னுவது... இப்படி எத்தனை எத்தனையோ பணிகள் கணக்கில்லாமல் கொட்டிக் கிடக்கின்றன. கற்கும் மனம் இருந்தால் மார்க்கமுண்டு.

"கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்ற கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் கூற்றுப்படி பிள்ளைகளுக்கு சிறு சிறு கைத்தொழில்களை கற்றுக்கொடுக்க பெற்றோர் முன்வரவேண்டும். ஒன்றரை மாத கோடை விடுமுறை என்பது இந்தக் கலைகளை ஓரளவுக்குக் கற்கப் போதுமானதுதான். கைத்தொழிலின் ருசியை உணர்ந்துகொண்டால், கோடை விடுமுறைக்குப் பின்னும் ஆர்வத்துடன் தொடர பிள்ளைகள் முன்வருவார்கள். கைத்தொழில் தெரிந்த மாணவர்கள், தன்னம்பிக்கை மிக்கவர்களாக ஒளிர்வார்கள் என்பது நிச்சயம்.

பாடப் புத்தகத்தைத் தாண்டிய படிப்பனுபவத்தைப் பெற பிள்ளைகளை ஊக்குவிக்கவும் கோடை விடுமுறையே ஏற்றது. நூலகத்தில் அவர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துவிட்டு, சிறந்த நூல்களை எடுத்துப் படிக்கத் தூண்டுவதும், அவர்கள் படித்த நூல்கள் குறித்து கேட்டுத் தெளிவதும், சிறந்த நூல்களைப் படிக்கப் பரிந்துரைப்பதும், புத்தக வாசிப்பின் மீது அவர்களுக்கு கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்த உதவும்.

பணப் பரிவர்த்தனைகள் அனைத்துமே எண்மமயமாகிவரும் இன்றைய சூழ்நிலையில், தானியங்கிப் பணப்பட்டுவாடா செய்யும் இயந்திரங்களில் இருந்து பணத்தைப் பாதுகாப்பாக எடுக்கவும், கணினி மூலம் மெயில் அனுப்பவும், ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யவும் தெரிந்திருப்பது அவசியம். உயர்நிலைப் பள்ளி வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு இதைப் பற்றியெல்லாம் எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயம். கோடை காலமே இவற்றை தெளிவறக் கற்கச் சிறந்த காலம்.

காலம் பொன் போன்றது என்பார்கள். கற்றுக்கொள்ளக் கிடைக்கும் காலம், பொன்னைவிட விலை மதிப்பற்றது. அதை முறையாகப் பயன்படுத்தி, அறிவைப் பெருக்கிக்கொள்ள மாணவர்கள் முன்வரவேண்டும். பெற்றோரும், ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து, ஊக்கப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.