இந்த பிரபஞ்சத்தின் வியக்கத்தக்க உயிரி இயந்திரமாக மனித மூளை இயங்குகிறது. நவீன காலத்தில் நாம் பயன்படுத்தும் கைப்பேசிகள், நமது சிந்தனையின் புற விரிவாக்கமாக மாறி, உடலின் ஓர் உறுப்பைப் போலவே நம்மோடு இணைந்துள்ளன. இந்தத் தொழில்நுட்பப் பிணைப்பை ஒரு பரிணாம வளர்ச்சி என நாம் பெருமிதம் கொள்கிறோம். மனதைத் தொழில்நுட்பத்தோடு ஒருமைப்படுத்திக் கொண்டால், வாழ்வின் செயல்பாடுகளை எளிதாக்க முடியும் என நம்புகிறோம்.
கடந்த காலங்களில், ஓர் அவசரத் தகவலைப் பகிர பல மைல்கள் கடந்து தந்தி அலுவலகங்களையே சார்ந்திருக்கும் சூழல் இருந்தது. ஆனால், இன்று, கைப்பேசி தொழில்நுட்பம் உலகையே நமது உள்ளங்கைக்குள் அடக்கியுள்ளது. ஒரு காலத்தில் முறையான கல்வி கற்க வசதியின்றித் தவித்த மாணவர்களும், இன்று கைப்பேசி வாயிலாக உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழக நூலகங்களை ஒரு சிறு சொடுக்கில்' அணுக முடிகிறது. இத்தகைய வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தினால் மனிதவளத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.
இந்தியாவின் 'மின்னணுப் பொருளாதாரம் 2023-ஆம் நிதியாண்டில் இருந்த 11.74 சதவீதத்திலிருந்து, 2025-இல் 13.42 சதவீதமாக உயர்ந்து தேசத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இணையப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 96.96 கோடியைத் தொட்டுள்ளதுடன், சுமார் 85.5 சதவீத வீடுகளில் அறிதிறன்பேசிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
இத்தகைய மின்னணு மாற்றம் ஒருபுறம் பொருளாதார வளர்ச்சியை அளித்தாலும், மறுபுறம் 'மின்னணு அடிமைத்தனம்' (டிஜிட்டல் அடிக்ஷன்) எனும் உளவியல் சிக்கலையும் உருவாக்கியுள்ளது. விருப்பு-வெறுப்புகளைப் பகிர்வதற்கு இந்தச் சிறு திரையையே சார்ந்து இருக்கும்போது, மனிதச் சிந்தனை சிறைபிடிக்கப்படவும் நேர மேலாண்மை பாதிப்படையவும் வாய்ப்புள்ளதாகக் கூறுகிறார்கள். இதனால் உற்பத்தித் திறன் பாதிப்பு, தனிமனித உறவுகளில் விரிசல் போன்றவை எழாமல் காக்க வேண்டுமென பொருளாதார ஆய்வு கள் உணர்ந்துகின்றன.
மின்னணுச் சூழலுக்கு ஏற்ப மனித மூளை தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது என்ற வாதங்கள் இருந்தாலும், வெறும் தகவல்களைச் சேகரிப்பதற்கும் உண்மையான அறிவைப் பெறுவதற்கும் இடையே அதிக வேறுபாடு உண்டு. தகவல்களையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணையம் வாரி வழங்கினாலும், மனிதனின் மனநலனையும் வாழ்வின் தரத்தையும் பாதுகாப்பதே அறிவியலின் உண்மையான சாதனையாக இருக்க முடியும்.
அறிதிறன்பேசிகளின் தொடர் பயன்பாடு நமது மூளையின் முன்பக்க மேலோடு' (ப்ரீபிரண்டல் கார்டெக்ஸ்) பகுதியில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மனிதனின் உயரிய அடையாளமான மன ஆற்றலே அவனது பெரும் சொத்து எனலாம். ஐம்புலன்களால் உணரப்படுவதை உள்வாங்கிச் சிந்திக்கும் மன சக்தி முழுவதையும், நிகழ்காலத் தன்னுணர்வோடு நிலைபெறச் செய்வதே ஒரு மனிதன் அடையக்கூடிய மிகப் பெரும் வெற்றியாகும்.
மனம் புதிய ஈர்ப்புகளைக் காணும்போது உந்துதல் ஏற்படுவது இயல்பே. அங்கே எழும் சிந்தனைப் பாதை நோக்கமின்றி, தெளிவற்று இருந்தால் மன ஆற்றல் சிதைவதையும், மனிதனின் 'சீவகாந்தக் கவசம் குறைவதையும் அங்கே உணர முடியும். மனதின் இந்த ஆற்றல் இழப்பு, பின்னர் உயிர் மற்றும் உடல் ஆற்றல் இழப்பாகச் சங்கிலித் தொடர்போலத் தொடரச் செய்கிறது.
நில்லாத, கட்டுப்படுத்த இயலாத மனவோட்டம் இறுதியில் ஒருவித வெறுமையை உருவாக்குகிறது. இத்தகைய மன ஆற்றலைப் பேராற்றலாக மாற்றி அகம் நோக்கிப் பயணிக்கச் செய்தால் மட்டுமே, 'நான் யார்?" என்ற உயர்ந்த நிலையை உணர்ந்து மனிதன் அமைதி பெற முடியும்.
அறிவு என்னும் வாளைக் கொண்டு, நம் ஆற்றலைச் சிதைக்கும் தேவையற்ற ஈர்ப்புகளைத் தடுத்தால், நமக்குள் இருக்கும் பேராற்றலை உணர முடியும் என்பதை,
மனத்திடைநின்ற மதிவா ளுருவி
......
புனத்திடை நஞ்சையும் போக மறித்தாற்
என திருமூலர் திருமந்திரத்தில் (1638) குறிப்பிடுகிறார்.
அகத்தில் நிலைபெறும் மனமே என்றும் நிறைவு காணும்; புறப்பொருட்களில் சுழலும் மனம் வெறுமையையே எஞ்சச் செய்யும். இத்தகைய உறுதியான மனநிலையின் அவசியத்தையே மகாகவி பாரதியார் 'திண்ணிய நெஞ்சம் வேண்டும்' என்கிறார்.
கண்ணுக்குப் புலனாகாத மனதின் செயல்பாட்டை அறிவியலோடு ஒப்பிட்டும் புரிந்துகொள்ளலாம். ஒரு கட்டடத்தை மின்னல், மின்கசிவுப் பாதிப்பிலிருந்து காக்க புவித்தொடுப்பு (எர்த்திங்) முறை அவசியமாகிறது. அதுபோலவே, மனித மனதுக்கும் உள்ளார்ந்த பிணைப்பு (இன்னர் எர்த்திங்) எனும் மன ஆற்றல் மிக முக்கியம். மின்சுற்றில் ஆபத்தான மின்னோட்டத்தைப் பூமிக்குள் அனுப்பிச் சேதத்தைத் தவிர்ப்பது போல, மன அழுத்தம் அல்லது குழப்பம் சூழும் போது, நமது உள்ளார்ந்த ஆற்றல் நம்மைச் சமநிலைக்குக் கொண்டுவர உதவுகிறது.
தேசிய நலன் சார்ந்த மனிதவளக் குறியீடுகளில் ஒன்றாக மன ஆற்றல் பாதுகாப்பையும் கருத வேண்டும். இணையத்தில் மூழ்கச் செய்யும் 'ஸ்க்ரோலிங் மற்றும் ஆட்டோ பிளே' போன்ற தொழில்நுட்பங்கள், உளவியல் ரீதியாகப் பயனாளர்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, 'எண்மப் பெற்றோரியம்' (டிஜிட்டல் பேரன்டிங்) குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் ஆழமாக விதைக்க வேண்டும்.
சமூக ஊடகங்களின் வணிக நோக்கம் கொண்ட உளவியல் உத்திகளைக் கட்டுப் படுத்த, முறையான கொள்கைகளை அரசு வகுக்க வேண்டும். பதின்ம பருவத்தினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் ஆஸ்திரேலியா, ஸ்பெயின் போன்ற நாடுகள் சில கட்டுப்பாடுகளை வகுத்துள்ளன. இந்தியாவிலும் இதுபோன்ற விழிப்புணர்வும் நெறிமுறைகளும் உருவாக வேண்டும். மன வளம்' கொண்ட மனிதனே அகத்தின் அமைதியையும் வாழ்வின் அழகையும் உணர முடியும். இதுவே அறிவின் படிக்கட்டுகளாக மாறி, மனித வளமாக உருமாற வழிவகுக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

ஜோதிட அறிவு என்பது என்ன? அதன் மூலம் அறிவது என்னென்ன?

மகளிர் சக்தியை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்! பிரதமர் நரேந்திர மோடி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

