குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

உலகம் அளப்பரிய அற்புதங்களைக் கொண்டது. பாரதத்தில் அத்தகு அற்புதங்களை சித்தர்களும் முனிவர்களும் தவவலிமையால் உணர்ந்து சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வரையறை செய்து அளித்தனர். வேதம், தத்துவம், மருத்துவம், யோகக்கலை எனப் பொக்கிஷங்களை எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகத் தந்தனர்.

News image

யோகா பயிற்சி - கோப்புப்படம்

Updated On :6 மணி நேரங்கள் முன்பு

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

உலகம் அளப்பரிய அற்புதங்களைக் கொண்டது. பாரதத்தில் அத்தகு அற்புதங்களை சித்தர்களும் முனிவர்களும் தவவலிமையால் உணர்ந்து சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வரையறை செய்து அளித்தனர். வேதம், தத்துவம், மருத்துவம், யோகக்கலை எனப் பொக்கிஷங்களை எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகத் தந்தனர்.

அத்தகைய துறைகளுள் யோகக் கலை சிறப்புடையது. நாள் முழுவதும் சோர்வின்றி உழைப்பதற்கான உற்சாகமும் புத்துணர்வும் யோகப் பயிற்சியின் மூலம் கிடைக்கிறது. இன்றைய மாறிவரும் சூழலில் யோகக் கலை அவசியம் என்பதை உலகுக்கு நினைவூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகின் கைகளில் சேர்த்த பெருமை பாரதப் பிரதமர் நரேந்திர மோடியையே சாரும்.

பாரதத்தின் தனிச் சிறப்பு உலகையே ஒற்றைக் கிராமமாகவும் உயிர்கள் அனைத்தையும் சகோதரர்களாகவும் காணும் மாண்பாகும். அதனடிப்படையில், 'எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்' என்ற மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் முயற்சி

யாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27, 2014 அன்று ஐ.நா. சபையில் யோகக் கலையின் அவசியத்தையும், சர்வதேச யோகா தினம் வேண்டும் என்பதையும் முன்மொழிந்தார்கள். இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

டிசம்பர் 11, 2014 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்து ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் என அறிவித்தது. முதல்முறையாக யோகா தினம் ஜூன் 21, 2015 அன்று கொண்டாடப்பட்டது. உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் பொதுவெளிகளில் ஒன்றிணைந்து யோகப் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினர். அனைத்துத் தரப்பு மக்களிடமும் யோகக் கலை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டது.

பாரதத்தில் பள்ளிகளில் வாரந்தோறும் ஒரு பாடவேளை யோகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு யோகாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த கருப்பொருளுடன் யோகா தினம் நம் தேசத்தில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருவதைக் காண்கிறோம். உலகம் கவனத்தில் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வும் யோகக் கலையின் அவசியம் குறித்த புரிதலும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

நிகழாண்டு 12-ஆவது சர்வதேச யோகா தினத்துக்கான கருப்பொருள் 'ஆரோக்கியமான முதுமைக்கு யோகா' (யோகா ஃபார் ஹெல்தி ஏஜிங்), இந்தக் கருப்பொருள், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கான முழுமையான அணுகுமுறையாக யோகா உலக அளவில் அதிக அங்கீகாரம் பெறுவதை உணர்த்துகிறது. தற்போது மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. இந்தக் கருப்பொருள் ஆயுட்காலத்தை மட்டுமல்லாமல், வாழும் காலத்தை நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வதில் யோகக் கலையின் பங்களிப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஆரோக்கியமான முதுமை என்ற கருப்பொருள், மூத்த குடிமக்களுக்குத் தேவையான சுகாதாரம் சார்ந்த பொருள்கள், சேவைகள் குறித்த "சில்வர் எகானமி' எனும் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இந்தியாவில் மட்டும் மூத்த குடிமக்களுக்கான சுகாதாரம், நலவாழ்வு சேவைகள், புனர்வாழ்வு, உதவிக்கான சேவைகள் சுமார் ரூ. 73,000 கோடி மதிப்புள்ளவையாக இருக்கின்றன. வரும் காலங்களில் இது இன்னும் வளர்ச்சியடையும் துறையாக இருக்கும்.

45 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் சுகாதாரம், நலவாழ்வு போன்ற வாழ்க்கை முறைகளுக்காக அதிக அளவில் செலவு செய்யும் நிலை இருக்கிறது. ஆனால், யோகக் கலை அவர்களின் ஆரோக்கியத்தையும் சுயசார்பையும் குறைந்த செலவில் உறுதிப்படுத்தும் என்பதுடன் எளிமையானதும் நம்பிக்கை தருவதுமாக இருக்கிறது. இதன் பலன் அனைத்துதரப்பு மக்களுக்கும் ஏற்றதாக இருக்கும். நிகழாண்டின் சர்வதேச யோகா தினக் கருப்பொருள் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

பாரதத்தைப் பொருத்தவரை வாழ்வியல் முறை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்பட்டது. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று முன்னோர்கள் கற்றுக்கொடுத்தனர். நோயற்ற வாழ்வுக்கு யோகப் பயிற்சிகளை நெறிப்படுத்தி அளித்தனர்.

பல யோகக் கலை நூல்கள் பாரதத்தின் சொத்தாக இருக்கின்றன. ராஜ யோகம், ஹட யோகம், லய யோகம், மந்த்ர யோகம் எனப் பல யோகங்கள் குறித்து இவை பேசுகின்றன. யோகம் குறித்த நூல்கள் பெüத்த, ஜைன சமயங்களின் ஆன்மிக நூல்களுக்கிடையிலும் இருக்கின்றன.

இந்த யோகப் பயிற்சிகள் அது குறித்தான நூல்கள் பாரதம் என்றைக்கும் வாழ்வியல் நெறிகளின் அடிப்படையிலும் சிந்தனையின் அடிப்படையிலும் ஒரே தேசம் என்ற உண்மையைப் பதிவு செய்கின்றன.

தமிழகத்தில் அடையாறு நூலகத்திலும் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்திலும் பல யோகா குறித்த புத்தகங்கள் சுவடி வடிவில் இருக்கின்றன. பரமேஸ்வர யோகி எழுதிய 'பரமேஸ்வர யோகின்', சுவடி வடிவில் அடையாறு நூலகத்தில் இருக்கிறது. சுந்தரதேவ என்பவர் எழுதிய 'ஹட சங்கேத சந்திரிகா' நூல் யோக சுவடிகளில் முக்கியமானது. தனது நூலில் 90 யோக நூல்கள் குறித்த குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

தமிழில் திருமூலரும் வடமொழியில் பதஞ்சலி முனிவரும் யோகக் கலை குறித்து விரிவாக தத்தமது நூல்களில் எடுத்தியம்புகின்றனர். திருமூலர் பதினெட்டு சித்தர்களில் ஒருவராகவும் 63 நாயன்மார்கள் வரிசையிலும் இடம்பெற்றுள்ளார்.

திருமந்திரம் நூல் 3,000 பாடல்களைக் கொண்டது. ஒன்பது தந்திரங்களைக் கொண்ட திருமந்திரத்தில், மூன்றாவது தந்திரம் யோகக் கலை பற்றியது. யோகம் என்ற சொல்லுக்குப் பொருள், மனதையும் ஆன்மாவையும் இணைப்பது ஆகும். இதற்கு எட்டு அங்கங்கள் உள்ளன. அதனால்தான், அஷ்டாங்க யோகம் என்ற பெயர் ஏற்பட்டது.

அஷ்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள், இயமம் (விலக்க வேண்டியவை), நியமம் (கவனிக்க வேண்டியவை), ஆசனம் (யோக நிலைகள்), பிராணாயாமம் (மூச்சுக் கட்டுப்பாடு), பிரத்யாஹாரம் (புலன்களை விலக்குதல்), தாரணை (செறிவு), தியானம் மற்றும் சமாதி நிலை ஆகியன.

யோகக் கலை என்று சொல்லியபோதும் அது நுட்பமான அறிவியலும் ஆகும். அதனால்தான் இன்றைக்கு ஒருங்கிணைந்த மருத்துவ சிகிச்சையில் யோகப் பயிற்சி முக்கிய இடம்பெறுகிறது. மேலைநாடுகளில் இருந்து பாரதம் வந்து முறையாக யோக அறிவியலைப் பலர் கற்றுக் கொள்கின்றனர்.

எட்டு அங்கங்களில் ஒன்றான பிராணாயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி, இன்றைக்கு குழந்தைகள் முதலாக முதியோர் வரை அனைவருக்கும் மனஅழுத்தம், நினைவாற்றல், மனதை ஒருமுகப்படுத்துதல் எனப் பல காரணங்களுக்காகக் கற்றுக் கொடுக்கிறோம். இதை,

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்

காற்றைப் பிடிக்குங் கணக்கறிவார் இல்லை

காற்றைப் பிடிக்குங் கணக்கறி வாளர்க்குக்

கூற்றை யுதைக்குங் குறியது ஆமே

என்று திருமந்திரத்தின் மூன்றாம் தந்திரப் பாடலில் மூச்சுப் பயிற்சி நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் வழங்கக்கூடியது என எளிய தமிழில் விளக்குகிறார் திருமூலர்.

பதஞ்சலி முனிவர் "யோக சூத்ரம்' என்ற யோக நூலை உலகுக்கு அருளியிருக்கிறார். இதில் 196 சூத்திரங்கள் இருக்கின்றன. யோக சூத்திரமும் அஷ்டாங்க யோகத்தையே கற்றுக் கொடுக்கிறது.

பாரதத்தின் பெருமையை, ஆன்மிகத்தை உலக அரங்குக்கு எடுத்துச் சென்ற சுவாமி விவேகானந்தர், பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து விளக்கவுரையும் அளித்து மேலை நாடுகளுக்கு வழங்கினார். யோகக் கலையை உலகுக்கு முதன்முதலில் வழங்குவதற்கான முயற்சியை அன்றைக்கும் நரேந்திரர் மேற்கொண்டார்.

பதஞ்சலி முனிவர், தமிழகத்தில் சிதம்பரம் முதலாகப் பல திருத்தலங்களுடன் தொடர்புடையவராக இருக்கிறார். திருச்சி மாவட்டத்தின் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் பதஞ்சலி முக்தி அடைந்தார் என்பது நம்பிக்கை. அவரைப் போலவே 'என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே' எனப் பாடிய திருமூலரும் சிதம்

பரத்தோடும், சாத்தனூர் முதலான திருத்தலங்களுடன் தொடர்பு உடையவர். யோகக் கலையை உலகுக்கு வகுத்துக் கொடுத்த இருவரும் தமிழ் மண்ணோடு தொடர்புடையவர்கள் என்பது பெருமைக்குரியது.

யோகக் கலை, அறிவியல் என்று இன்றைக்கு உலகம் கொண்டாடினாலும், பாரதம் அதை வாழ்வியல் என்றதற்குக் காரணம் இருக்கிறது. இயமம் என்ற முதல் அங்கத்தை பதஞ்சலி முனிவர் கொல்லாமை, வாய்மை, களவு செய்யாமை, வெஃகாமை அதாவது பிறர் பொருளுக்கு ஆசைப்

படாதிருத்தல், புலனடக்கம் என்ற ஐந்தைச் சொல்கிறார். திருமூலரோ இந்த ஐந்துடன் நடுநிலைமை, பகுத்துண்ணல், மனத்தூய்மை, கள்ளுண்ணாமை ஆகியவற்றையும் சேர்த்துச் சொல்கிறார்.

யோகாசனம் என 134 ஆசனங்கள் குறித்து திருமூலர் குறிப்பிடுகிறார். இவற்றில் சில ஆசனங்களை இன்றைக்கு நாம் பயிற்சி செய்கிறோம். இன்றைய வாழ்வியல் தேவைக்கு அவையே பெரும்பயன் அளிக்கின்றன. முழுமையாக யோகக் கலை மீண்டும் நமக்கு வசப்பட்டால் உலகின் அத்தனை சவால்களுக்கும் எளிய தீர்வுகளைக் காணமுடியும். அதையே பதஞ்சலி முனிவர் 'அஷ்டமாசித்திகள்' என்கிறார்.

திருமூலரின் சொற்களோ, உலகையே அணைத்துக் கொள்கின்றன. "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்', "அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்', "நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என வாழ்வின் ரகசியங்களை தர்மத்தின் அடிப்படையில் சொல்கிறார் திருமூலர்.

யோகக் கலை என்ற இந்த அறத்தை, மனிதகுலம் அனைத்துக்கும் எடுத்துச் செல்லும் பாரதப் பிரதமரின் முயற்சியே சர்வதேச யோகா தினம்.

நாளை (ஜூன் 21) சர்வதேச யோகா தினம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.