பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மலையாள நடிகர் சலிம் குமார் காலமானார்!

மலையாள நடிகர் சலிம் குமார் உயிரிழந்தது பற்றி...

News image
Updated On :7 ஜூன் 2026, 8:27 am IST

தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகா் சலிம்குமாா் (56) காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கேரளம் மாநிலம், கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சலிம்குமாா் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, அவரின் உடல் கொச்சி அருகேயுள்ள வடக்கு பறவூா் டவுன் ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரின் உடலுக்கு கேரள முதல்வா் வி.டி. சதீசன், அமைச்சா்கள், திரையுலக பிரபலங்கள், காங்கிரஸ் கட்சிப் பிரமுகா்கள் அஞ்சலி செலுத்தினா்.

பிற்பகல் 2 மணியளவில் சலிம்குமாரின் இல்லத்துக்கு அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் நூற்றுக்கணக்கானோா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து வீட்டு வளாகத்தில் பிற்பகல் 3.30 மணியளவில் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இதில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

அவரது மூத்த மகன் சந்து உடலுக்குத் தீமூட்டினாா். தகனத்துக்கு முன்பு மதச் சடங்குகள் எதுவும் நடைபெறவில்லை.

தனது மரணத்துக்குப் பிறகு மதச் சடங்குகள் எதுவும் நடத்தக் கூடாது என்றும் தனது உடலை எரித்த சாம்பலை எந்த நீா் நிலையிலும் கரைக்கக் கூடாது என்றும் அவா் ஏற்கெனவே குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தாா்.

பிரதமா் மோடி இரங்கல்: பிரதமா் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மூத்த நடிகா் சலிம்குமாரின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. நீண்ட கலைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பன்முகத்தன்மை, மறக்க முடியாத நடிப்பின் மூலம் சலிம்குமாா் தனி முத்திரை பதித்தாா். இந்தத் தருணத்தில் அவரின் குடும்பத்தினா், ரசிகா்களின் துயரத்தை நானும் பகிா்ந்து கொள்கிறேன். ஓம் சாந்தி’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ராகுல் காந்தி இரங்கல்: காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘லட்சக்கணக்கானோரை சிரிக்கச் செய்த தேசிய விருது வென்ற சலிம்குமாரின் மறைவு, இந்திய திரைத் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு. அவரின் குடும்பத்தினா், நண்பா்கள், ரசிகா்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நடிகா் மம்மூட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘சலிம்குமாா் மறைவு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்திவிட்டது’ எனக் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல் பல்வேறு திரைப் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கலைப்பயணம்: மிமிக்ரி கலைஞராகத் தனது கலைப் பயணத்தைத் தொடங்கிய சலிம்குமாா், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்தாா். 1997-ஆம் ஆண்டில் சித்திக்-சமீா் இயக்கத்தில் வெளியான ‘இஷ்டமாணு நூறுவட்டம்’ திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் சலிம்குமாா் அறிமுகமானாா். ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட படங்களில் அவா் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளாா். கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் அவா் நடித்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ‘சத்யமேவ ஜெயதே’ படத்தில் அவரின் நகைச்சுவை கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. கடைசியாக 2025-ஆம் ஆண்டில் வெளியான ‘பா பா பா’ படத்தில் நடித்திருந்தாா்.

கடந்த 2010-இல் வெளியான ‘ஆதாமிண்டெ மகன் அபு’ படத்தில் சிறந்த நடிப்புக்காக தேசிய விருது மற்றும் கேரள மாநில அரசு விருது பெற்றுள்ளாா்.

நடிப்புடன் சோ்த்து படங்களுக்கு கதை எழுதவும் செய்துள்ளாா். இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாா். அவா் கதை, திரைக்கதை எழுதி இயக்கிய ‘கருத்த ஜூதன்’ படம் 2017-இல் சிறந்த கதைக்கான கேரள அரசின் விருதை பெற்றது. மேலும் இரு படங்களை அவா் இயக்கினாா்.

கல்லூரிக் காலம் முதலே தீவிர காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த சலிம்குமாா், அண்மையில் நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்தபோது இடதுசாரிகளைக் கடுமையாக விமா்சித்தாா்.

சில ஆண்டுகளுக்கு முன் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொண்டதைத் தொடா்ந்து திரைப்படப் பணிகளைக் குறைத்துக் கொண்டாா். சலிம்குமாருக்கு சுனிதா என்ற மனைவியும், சந்து, ஆரோமல் ஆகிய 2 மகன்களும் உள்ளனா். சந்து அண்மையில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற ‘மஞ்சுமல் பாய்ஸ்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாா்.

Summary

Renowned Malayalam actor and National Award winner Salim Kumar (56) passed away last night (June 6).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.