இந்திய இசைக்குரலின் தேயாத நிலவான ஆஷா போஸ்லே இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
பாடகி ஆஷா போஸ்லே மறைந்துவிட்டார். உடலுக்கு அழிவென்றாலும் இந்திய இசை மரபின் முன்னோடிகளாலும் இனி எழுகிற தலைமுறைகளாலும் ஆஷா நித்தியமானவராக எழுந்து வருவார். அவரை யாரென்றே தெரியாமலேயே அவரின் குரலை எங்காவது கேட்டுக்கொண்டே இருப்போம். ஒன்றா, இரண்டா? 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரம் திரையிசைப் பாடல்களைப் பாடிய சாதனைக் குரல். கஸல் (Ghazal), பாப், காபரே (Cabaret), கிளாசிக்கல், திரைப்பட பாடல்கள் என ஒரு காலத்தில் கன்னியாகுமரி ரேடியோவிலிருந்து காஷ்மீர் ரேடியோ வரை ஆஷாதான் அதிமதுரமாக திளைத்திருந்தார்.
இசைக்குடும்பத்தில் பிறந்தாலும் குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்ததால் குடும்பச் சூழல் காரணமாக பாட ஆரம்பித்திருக்கிறார். பள்ளி, கல்லூரியெல்லாம் முடித்துவிட்டு பாடகியாகவில்லை. தன் 10 வயதிலேயே மராத்தி பாடலைப் பாடி இனிமையான குரல் எனப் பெயரெடுத்தவர் ஓய்வில்லாமல் நூற்றுக்கணக்கான இசையமைப்பாளர்களின் இசைக்கு குரலாகவும் உணர்வுகளுக்கும் உயிராகவும் இருந்தார். ஹிந்தி தெரியாதவர்களைக் கூட ஒரு கணம் நின்று கேட்க வைக்கும் ஆற்றல் கொண்ட பாடகியான ஆஷா போஸ்லேவுக்கு ஆரம்பத்தில் தன் சகோதரி லதா மங்கேஷ்கரால் வாய்ப்புகள் குறைவாகவே வந்திருக்கிறது. ஒரே வீட்டுப்பிள்ளைகள் என்பதால் மூத்தவருக்குக் கிடைக்கும் மரியாதை ஆஷாவையும் விட்டுவைக்கவில்லை.
இருந்தும், கிடைக்கிற வாய்ப்புகளையெல்லாம் மிகச்சரியாகப் பயன்படுத்தி தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்களின் விருப்பமான பாடகியாக 1950-களில் மிக வேகமாக வளர ஆரம்பித்தார். ஆஷாவின் இசைப்பயணம் திருப்புமுனை அடைந்ததே இயக்குநர் ஒ. பி. நய்யார் திரைப்படங்களில் தொடர்ச்சியாக அவர் பாடியதுதான் என்றும் கருதப்படுகிறது. குறிப்பாக, மிகப்பிரமாதமாக ஹம்மிங் செய்யக்கூடிய பாடகி என்பதால் கவர்ச்சியான, மற்றவர்கள் பாடத்தயங்கிய காபரே பாடல்களை (Cabaret songs) தன் ஏற்ற, இறக்க குரலில் கிறங்கடித்ததுடன் அதற்கு புது வடிவத்தையும் கொடுத்து பெரிய புயலாக ஆஷா ஆச்சரியப்படுத்தினார். ஆயே மெஹர்பான் (Aaiye Meherbaan), யே ஹாய் ரேஷ்மி சுல்பன் கா ஆந்த்ரே (Yeh Hai Reshmi Zulfon Ka Andhera) பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான கிளாசிக்காவே கேட்கப்பட்டு வருகின்றன.

ஆஷா போஸ்லே
மனதை உருக வைக்கும் தேன் குரல் என்பதால் மெலடிகளிலும் ஆஷாவை அடித்துக்கொள்ள முடியாது. காதலர்கள் ஏங்குகிறார்களா? காதல் கைவிடப்பட்டதா? நிலவை பார்த்து காதலர்கள் துடிக்கிறார்களா? ஆஷா இருக்கிறார் என அவரைப் பாட வைத்து மெட்டு போட்ட கதைகளும் இருக்கின்றன. Yeh Ratein Yeh Mausam பாடலை மறக்க முடியுமா? கடந்த 70 ஆண்டுகளாக இப்பாடல் கேட்கப்படாத இரவு என ஒன்றிருக்காது. ஆஷாவின் எவர்கிரின்.
மெலடி, காபாரேவில் கலக்கிய ஆஷா கஸல் இசையையும் விட்டுவைக்கவில்லை. உணர்வுகளை முன்னிருத்தி மென்மையாக பாடப்படும் பல கஸல் பாடல்களில் தன்னை விரிவாக்கிக் கொண்டார். தில் சீஸ் க்யா ஹாய் (Dil Cheez Kya Hai), சலோனா சா சாஜன் ஹாய் ஆர் மெய்ன் (Salona Sa Sajan Hai Aur Main Hoon) போன்ற பாடல்கள் இன்னும் பல காலங்கள் வாழும்!
ஹிந்தி, பெங்காலி மொழிகளில் ஏகப்பட்ட பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லேவை இசையமைபாளர் இளையராஜா, எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில், “செண்பகமே செண்பகமே” பாடலின் மூலம் தமிழில் அறிமுகப்படுத்தினார். (அறிமுகமானபோது ஹிந்தியில் மாபெரும் கலைஞர் எனப் பெயரெடுத்துவிட்டார்.) இப்பாடலைப் பாடியபோது ஆஷா போஸ்லேவுக்கு 55 வயது. இப்போது கேட்டாலும் முதல் காதலுக்காக மலர்ந்த யுவதியின் இனிய இளமைக்குரல் போன்றே ஒலிக்கும். இப்பாடலில் ஆஷாவின் குரலில் கொஞ்சம் முதிர்ச்சியும் தெரியும். ஆனால், அம்முதிர்ச்சியை கொஞ்சம் குறைத்து மீரா படத்தில் பாடிய ஓ பட்டர்பிளை பாடலை மறக்க முடியுமா?
இப்பாடலுக்குப் பின் பத்தாண்டு கழித்து ஹேராம் திரைப்படத்தில் பாடிய, ‘நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி’ பாடலில் பட்டர்பிளையைவிட இளமை தள்ளாடும் குரலில் பாடி திக்கு முக்காட வைத்தார். இதே ஆண்டில் வெளியான அலைபாயுதேவில் செப்டம்பர் மாதம் பாடலையும் பாடியிருந்தார். தன் ஒவ்வொரு பாடல்களுக்கும் தனித்தறியக்கூடிய மாயங்களைச் செய்ததே ஆஷா போஸ்லேவின் பன்முகத்திறமைக்குச் சான்று.
ஆஷாவிடமிருக்கும் இன்னொரு தனித்திறன் நடிகைகளின் குரலுக்கு இணையாக குரலைக் கொஞ்சம் மாற்றிப்பாடக்கூடியவர். அதனாலேயே, அனைத்து நாயகிகளின் ஏக்கத்திற்கும், துயரத்திற்கும் ஆஷாவின் குரலை நாடி இசையமைப்பாளர்கள் சென்றனர். புதுமையைத் தேடிக்கொண்டிருந்தவர் என்பதால் ஒவ்வொரு பாடல்களிலும் ஏதாவது செய்து இசையமைப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதும் ஆஷாவின் வழக்கம்.
ஆஷா போஸ்லே பாடிய பல மொழிப்பாடல்களின் அர்த்தம் புரியவிட்டாலும் கண்ணை மூடிக்கேட்டாலே போதும் அந்த உணர்வைத் தன் குரல் மூலம் கடத்தக்கூடிய ஆற்றல் படைத்தவர் அவர் என்றே அவரின் தீவிர ரசிகர்கள் கூறும் முக்கியமான அவதானிப்பு.
ஒரு மொழிச்சூழலில் பிறந்து வளர்ந்திருந்தாலும் ஒவ்வொரு மொழியின் உணர்வுகளையும் இணைக்கும் மொழி இசைதான் என்பதை ஆஷா நன்றாக புரிந்து வைத்திருந்தார். சொந்த வாழ்க்கையில் ஏகப்பட்ட இழப்புகளைச் சந்தித்திருக்கிறார். கசப்பான திருமண வாழ்க்கை, தொழிலில் ஏற்ற, இறக்கங்கள், புறக்கணிப்புகள்... எல்லாவற்றையும் எதிர்கொண்டிருக்கிறார். “எனக்கு இசையே எல்லாம். என்னைக் காப்பாற்றியது அதுதான்” என எப்போதும் கலைக்குள் இருந்தவர்.
ஆஷா போஸ்லே பாடிய ஒவ்வொரு மொழிப்பாடலையும் யூடியூபில் தேடினால் அத்தனை மொழிகளிலும் அவருக்கு இரங்கல் குறிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அவற்றின் பின்னணியில் ஆஷாவின் குரல் எங்கோ கரைந்தபடி ஏக்கத்துடன் கேட்டுக்கொண்டே இருக்கிறது!
Summary
Asha Bhosle the undiminishing moon of Indian music passed away today due to ill health.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
20 மொழிகள்... 11 ஆயிரம் பாடல்கள்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12,000 திரைப் பாடல்களைப் பாடிய ஆஷா போஸ்லே!

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

