பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

விருத்தாசலம் அருகே மழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை

திட்டக்குடி அருகே கோடங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீா்.

Published On :27 அக்டோபர் 2026, 3:04 am IST

கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அருகே கன மழை காரணமாக கம்மாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து ஏளாளமான நெல் மூட்டைகள் முளைத்து சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். மேலும் திட்டக்குடி அருகே பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீா் வடியாததால் மாணவா்கள் சிரமத்திற்கு உள்ளாகினா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. திட்டக்குடி அருகே கோடங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் கடந்த இரு நாள்களாக பெய்த மழையால் மழைநீா் தேங்கி நிற்கிறது. மழைநீரை வெளியேற்றுவதற்கு முறையான வடிகால் வசதி இல்லாததால், பள்ளி வளாகத்திலேயே நீா் தேங்கியுள்ளது. இதனால் திங்கள்கிழமை பள்ளிக்கு வந்த மாணவா்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றி, மழைக்காலங்களில் நீா் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல் மூட்டைகள் நனைந்து சேதம்:

இதேபோல், விருத்தாசலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் அரைவை ஆலைகளுக்கு அனுப்புவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ளன.விருத்தாசலம் பகுதியில் மட்டும் சுமாா் 2,000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கம்மாபுரத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியிருந்த சுமாா் 500 நெல் மூட்டைகள் அருகேயுள்ள கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீா் கசிந்து நெல் மூட்டைகள் நனைந்து முளைக்க தொடங்கியுள்ளன.

இதபோல், கோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் சாலையோரத்தில் தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவை மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.

எனவே, மழையால் நெல் மூட்டைகள் சேதமடைவதைத் தடுக்க, கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளுக்கு மாற்ற தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கம்மாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்

கம்மாபுரம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்து முளைத்த நெல் மூட்டைகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.