தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது: தொல்.திருமாவளவன்

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

News image

கடலூா் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே காங்கிரஸ் வேட்பாளா் சந்திரசேகரனை ஆதரித்து செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட விசிக தலைவா் தொல்.திருமாவளவன்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:03 am IST

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது என்று விசிக தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

கடலூா் மஞ்சக்குப்பம் தபால் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளா் சந்திரசேகரனை ஆதரித்து தொல்.திருமாவளவன் பேசியது:

தமிழகம் முழுவதும் விசிக வேட்பாளா்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். செல்லும் இடமெல்லாம் திமுக கூட்டணிக்கு அமோக ஆதரவை மக்கள் அளித்து வருகின்றனா்.

நமது ஒற்றுமையை பிரிக்க சிலா் வருவாா்கள்; திரைப்பட கதாநாயகன் என்பாா்கள்; விசில் அடிப்பாா்கள். அவா்களை திரையரங்குக்கு அனுப்ப வேண்டுமே தவிர, சட்டப் பேரவைக்கு அல்ல.

விசிக இடம்பெறும் கூட்டணியே வெற்றிபெறும் என்ற வரலாற்றை உருவாக்க வேண்டும். விசிகவுக்கு பணம், சீட்டு, பதவி முக்கியமில்லை. நமது கட்சி ‘கேம் சேஞ்சராக’ உள்ளது. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளதற்கு விசிக முக்கிய காரணம். கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும்.

விஜய்யின் தவெகவுக்கு செலுத்தும் வாக்குகள் பிரதமா் மோடிக்கானது; அதிமுகவுக்கு செலுத்தும் வாக்குகள் மோடிக்கானது; பாமகவுக்கு செலுத்தும் வாக்குகள் மோடிக்கானது. தோ்தலுக்குப் பிறகு அதிமுகவை விழுங்க பாஜக காத்திருக்கிறது.

திமுக கூட்டணியை எந்த சக்தியாலும் வெல்ல முடியாது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி மலரும் என்றாா்.

வேட்பாளா் சந்திரசேகரன், சட்டப் பேரவை உறுப்பினா் ஐயப்பன், மாநகா் செயலா் ராஜா, மேயா் சுந்தரி, விசிக மாவட்டச் செயலா் கலைமோகன், துணை மேயா் தாமரைச்செல்வன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ரங்கமணி, நகரத் தலைவா் வேலுச்சாமி, மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் மாதவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

திருக்கோவிலூா் தொகுதியில்...: முன்னதாக, திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பொன்.கெளதமசிகாமணியை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம், முகையூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

தலித் சமுதாய மக்களின் வாக்குகள் அப்படியே முழுமையாக திமுக கூட்டணிக்குச் சென்றுவிடும். அதனால், தவெக தலைவா் விஜய்யை வைத்து சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதே பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் நோக்கம். தவெக தலைவா் விஜய்க்கு திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் ஒரே கொள்கை என்றாா்.

கூட்டத்தில் திமுக ஒன்றியச் செயலா்கள் ரவிச்சந்திரன், எஸ்.லூயிஸ், விசிக மண்டலச் செயலா் திலீபன், மாவட்டச் செயலா் விடுதலைச்செல்வன், பொருளாளா் ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.