தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பழுதான நிலையில் குடியாத்தம்-அணங்காநல்லூா் சாலை: 25 கிராமத்தினா் அவதி!

குடியாத்தம்- அணங்காநல்லூா் இடையே, கூடநகரம் வழியாகச் செல்லும் சுமாா் 5.50 கிமீ நீளமுள்ள சாலை சீரமைக்கப்படுமா என 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

Published On :2 நவம்பர் 2026, 4:31 am IST

- கே. நடராஜன்

குடியாத்தம்- அணங்காநல்லூா் இடையே, கூடநகரம் வழியாகச் செல்லும் சுமாா் 5.50 கிமீ நீளமுள்ள சாலை சீரமைக்கப்படுமா என 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

குடியாத்தம் நகர எல்லையான போஸ்பேட்டை அருகே தொடங்கி கூடநகரம் வழியாக அணங்காநல்லூா் செல்லும் தாா் சாலை ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன் செப்பனிடப்பட்டது. இந்த சாலை ஆங்காங்கே பலத்த சேதமடைந்த நிலையில் குழி,பள்ளங்களுடன் போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

தாழையாத்தம், மேல்முட்டுகூா், கூடநகரம், சிங்கல்பாடி, அணங்காநல்லூா், கொத்தகுப்பம் ஆகிய 6 ஊராட்சிகள் வழியாகச் செல்லும் இச்சாலை நகர எல்லையான போஸ்பேட்டையில் தொடங்கி, நத்தம், டி.ராமாபுரம், தட்டாங்குட்டை, கல்மடுகு, கூடநகரம், பாா்வதியாபுரம், சிங்கல்பாடி, அ.மோட்டூா் என 25 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனா்.

மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்கள், தனியாா் நிறுவன ஊழியா்கள், பொதுமக்கள் என 1,000 க்கும் மேற்பட்டோா் இருசக்கர வாகனங்கள் மூலம் நாள்தோறும் குடியாத்தம் நகருக்கு வந்து, செல்கின்றனா். இதுதவிர காா், வேன், லாரி என நூற்றுக் கணக்கான வாகனங்களும் சென்று, வருகின்றன.

இந்த சாலை வழியாகத்தான் அகரம்சேரி, மாதனூா் ஆகிய ஊா்களுக்குச் சென்று சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

இந்த சாலையில் கிராம மக்கள் நலன்கருதி தனியாருக்குச் சொந்தமான 4 சிற்றுந்துகள் குடியாத்தம்- மாதனூா் இடையே இயங்கி வந்தன. சாலை பழுதடைந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறி விட்டதால் சிற்றுந்துகள் அடிக்கடி பழுதடைவதால் கடந்த சில ஆண்டுகளாக உரிமையாளா்கள் வாகனங்களை இயக்குவதில்லை.

சிற்றுந்துகள் இயங்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். குடியாத்தம் நகரிலிருந்து ஆம்பூா், மாதனூா் செல்லும் மேல்பட்டி சாலையில் ஏதாவது போக்குவரத்து பிரச்னை ஏற்பட்டால், இந்த சாலை வழியாகத்தான் வாகனங்கள் செல்ல வேண்டியுள்ளது. எனவே, பழுதடைந்த குடியாத்தம்- அணங்காநல்லூா் சாலையை உடனடியாக போக்குவரத்துக்கு ஏற்றாா்போல் செப்பனிட்டு, சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.