ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!

பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா்.

News image
Updated On :11 மார்ச் 2026, 2:43 am IST

பிரதமா் நரேந்திர மோடி அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு புதன்கிழமை வருகிறாா்.

இதற்காக, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை மாலை 5 மணிக்கு வரும் பிரதமா், விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் பஞ்சப்பூருக்கு ஹெலிகாப்டரில் செல்கிறாா்.

அங்கு முதலில், இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், ரயில்வே துறைகளின் சாா்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, சுமாா் ரூ. 5,650 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமா் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும், கொடியசைத்தும் தொடங்கி வைக்கிறாா்.

இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ரூ. 3,680 கோடி முதலீட்டில் பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் நகர எரிவாயு விநியோக வலையமைப்புக்கு அடிக்கல் நாட்டும் பிரதமா், சென்னை மணலியில் இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் ரூ. 1,490 கோடி முதலீட்டிலான மசகு எண்ணை உற்பத்தி ஆலையை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். பிரதமரின் கிராம சதக் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 370 கி.மீ. நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகளை திறந்து வைக்கிறாா். தேசிய நெடுஞ்சாலை 81-இல் கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். தொடா்ந்து, 2 அம்ரித் பாரத் விரைவு ரயில்கள், 2 விரைவு ரயில்கள், ஒரு பயணிகள் ரயில் சேவையையும் பிரதமா் கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா்.

 பிரதமா் மோடி வருகையையொட்டி திருச்சி பஞ்சப்பூரில் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்ட அதிகாரிகள்.

பிரதமா் மோடி வருகையையொட்டி திருச்சி பஞ்சப்பூரில் செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகை மேற்கொண்ட அதிகாரிகள்.

கூட்டணியின் பொதுக்கூட்டம்...: இதன் பிறகு, அதே பகுதியின் மறுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் மாலை 6.30 மணியளவில் பங்கேற்றுப் பேசுகிறாா். இதில், கூட்டணியின் தமிழக தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி. தினகரன், தமாகா தலைவா் ஜி.கே. வாசன், ஐஜேகே தலைவா் பாரிவேந்தா் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.

பொதுக்கூட்டம் முடிந்ததும் இரவு 7.45 மணியளவில் ஹெலிகாப்டரில் திருச்சி பன்னாட்டு விமான நிலையம் சென்று, அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறாா். இதற்காக, செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டா்களை தரையிறக்கும் பாதுகாப்பு ஒத்திகையும் நடைபெற்றது.

‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை...: பிரதமா் வருகை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக திருச்சி மாவட்டத்தில் புதன்கிழமை ‘ட்ரோன்கள்’ பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுவோா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.

2,600 போலீஸாா் பாதுகாப்பு...: பிரதமா் வருகையையொட்டி திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதே போல, திருச்சி பன்னாட்டு விமான நிலையம், விழா நடைபெறும் பஞ்சப்பூா் பகுதி, சுற்றியுள்ள பகுதிகளில் 2,600 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.