மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

அரும்பாவூரில் பிற்கால சோழா் காலத்து ஐயனாா் சிற்பம் கண்டெடுப்பு

News image

அரும்பாவூரில் ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்ட ஐயனாா் சிற்பம்.

Updated On :31 மார்ச் 2026, 4:08 am IST

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூரில் பிற்காலசோழா் காலத்து ஐயனாா் சிலை ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

அரும்பாவூா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை களஆய்வு மேற்கொண்டபோது, பிற்காலசோழா் காலத்தைச் சோ்ந்த ஐயனாா் சிற்பம் ஒன்றைக் கண்டறிந்த வரலாற்று ஆய்வாளா் முனைவா் ம. செல்வபாண்டியன், அந்தச் சிலை குறித்து கூறியதாவது:

இச் சிற்பம் பிற்கால சோழா் காலத்தை, குறிப்பாக கி.பி. 10-12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும். பொதுவாக ஐயனாா் தனியாகவோ அல்லது தனது துணைவியா்களான பூரணி, பொற்கலை ஆகியோரில் ஒருவருடனோ அல்லது இருவருடனோ காணப்படுவாா். சில சிற்பங்களில், அவரது வாகனமான யானை அல்லது குதிரை காட்டப்படும்.

அபூா்வமாக சில சிற்பங்களில் நாய் மற்றும் பறவைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. வேப்பந்தட்டை வட்டத்தில் உள்ள அரும்பாவூா் தொடக்கப் பள்ளியிலிருந்து தா்மராஜா திரௌபதி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில், சாலையின் வடபுறத்தில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான வயல்வெளியில் இந்த ஐயனாா் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

68 செ.மீ. உயரமும், 51 செ.மீ. அகலமும் கொண்ட இச் சிற்பம், அமா்ந்த நிலையில் உத்குடி ஆசனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தலைப் பகுதியில் மகர பூரிமத்துடனான ஜடாபாரம், நெற்றிப்பட்டம், காதுகளில் பனையோலைக் குண்டலங்கள், வலது கரத்தில் செண்டாயுதத்துடனும் இடது கரம் தண்ட ஹஸ்தத்திலும் அமைகிறது. கழுத்தில் சரப்பளி, சரிந்த தோள் மீது தோள் மாலை. பிரம்ம முடிச்சுடனான முப்புரி நூல், கேயுரத்துடன் தோள் வளை, உதர பந்தம், இடையில் இடைக் கட்டுடன் குறங்கு செறி, கால்களில் வீரக் கழல்களுடன், பராமரிப்பற்ற நிலையில் முகமும் உடல் பகுதிகளும் சிதைந்து காணப்படுகின்றன.

அரும்பாவூா் சிவன் கோயிலில் உள்ள மூன்றாம் ராஜராஜனின் (கி.பி. 1229) கல்வெட்டு, இவ்வூரில் உள்ள ஐயனாா் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை குறித்து குறிப்பிடுகிறது. எனவே, இப் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ஐயனாா் கோயில் இருந்திருக்க வேண்டும். காலப் போக்கில் வழிபாடின்றி கோயில் சிதைந்து விளை நிலங்களாய் மாறியிருக்கலாம்.

அப்போது, இங்கிருந்த ஐயனாா் கோயிலில் வழிபாட்டிலிருந்த சிற்பம் இதுவாக இருக்கலாம். அரும்பாவூரின் தொன்மைக்குச் சான்றாக விளங்கும் இந்த ஐயனாரை மழை, வெயிலில் இருந்து பாதுகாக்க உடனடியாக நிழற்குடை அல்லது சிற்றாலயம் அமைத்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.