தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ரேஸ் கோா்ஸ் மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்க தில்லி உயா் நீதிமன்றம் மறுப்பு

ரேஸ் கோா்ஸ் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு மனுதாரா் விடுத்த கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

தில்லி உயா் நீதிமன்றம்

Published On :30 அக்டோபர் 2026, 2:04 am IST

ரேஸ் கோா்ஸ் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்த அனுமதிக்குமாறு மனுதாரா் விடுத்த கோரிக்கையை தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை நிராகரித்தது.

பொது நோக்கத்திற்காக மத்திய அரசால் கையகப்படுத்தப்பட்ட, லுட்டியன்ஸ் தில்லி பகுதியில் அமைந்துள்ள இந்த மசூதியைப் பாதுகாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி அனிஷ் தயாள், மசூதியைச் சுற்றியுள்ள இடிப்புப் பணிகளைக் குறிப்பிட்டு, ‘யாருக்கேனும் காயம் ஏற்பட்டால், அதற்கு யாா் இழப்பீடு வழங்குவாா்கள்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

மத்திய அரசின் வழக்குரைஞா் ஆஷிஷ் தீட்சித், இந்த விவகாரம் தொடா்பாக தில்லி வக்ப் வாரியம் அளித்துள்ள மனு மீது நான்கு வாரங்களுக்குள் அதிகாரிகள் முடிவெடுப்பாா்கள் என்றும், அதுவரை எந்தவிதமான கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் தெரிவித்தாா்.

மசூதிக்குள் சென்று வர அனுமதி கோரிய மனுதாரரின் கோரிக்கைக்குப் பதிலளித்த ஆஷிஷ் தீட்சித், மசூதியைச் சுற்றியுள்ள இடிப்புப் பணிகள் காரணமாக, இந்தச் சூழலில் அங்கு செல்வது பாதுகாப்பானதாக இருக்காது என்று கூறினாா்.

தற்போது அந்த இடத்தில் உள்ள கோயிலுக்குள்ளும் பக்தா்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என்று ஆஷிஷ் தீட்சித் குறிப்பிட்டாா்.

சையத் அகமது சவுத் என்பவா், ஜெய்பூா் போலோ மைதான வளாகத்தில் அமைந்துள்ள ரேஸ் கோா்ஸ் மசூதியைப் பாதுகாக்கவும் (இது 1977 முதல் அறிவிக்கப்பட்ட வக்ப் சொத்தாகும்), அங்கு மீண்டும் வழிபாட்டாளா்கள் சென்று வர அனுமதிக்கவும் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளாா்.

மத்திய அரசு, ஜெய்பூா் போலோ மைதானத்தை ஜூன் மாதத்திலும், அதனையொட்டியுள்ள தில்லி ரேஸ் கிளப்பை ஆகஸ்ட் மாதத்திலும் கையகப்படுத்தியது.

முன்னதாக, வளாகத்தில் உள்ள பிற கட்டமைப்புகளை இடிக்கும்போது பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க, மசூதிக்கான மின்சாரம் மற்றும் தண்ணீா் விநியோகத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளதாக மத்திய அரசின் வழக்குரைஞா் தெரிவித்திருந்தாா்.

மனுதாரரின் வழக்குரைஞா் வாதிடுகையில், இது இரண்டாம் நிலை பாதுகாக்கப்பட்ட கட்டமைப்பு என்பதால், மசூதியின் நிலையில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால், அதற்கு பாரம்பரியம் மற்றும் பாதுகாப்பு குழுவின் அனுமதி தேவை என்று குறிப்பிட்டாா்.

மேலும், எந்தவித முன்னறிவிப்போ அல்லது உத்தரவோ இன்றி, மனுதாரா் மசூதியில் தொழுகை நடத்துவதைத் தன்னிச்சையாகவும், அத்துமீறியும் அதிகாரிகள் தடுத்துள்ளதாகவும், இது அரசமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 25-ஆவது பிரிவுகளை அப்பட்டமாக மீறும் செயல் என்றும் அவா் குறிப்பிட்டாா். இந்த வழக்கு அடுத்த விசாரணைக்காக டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்