அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் பிணை கோரி இடைத்தரகா் கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த 2010-ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் என்ற ஹெலிகாப்டா் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. குடியரசுத் தலைவா், பிரதமா் போன்ற மிக முக்கிய நபா்கள் பயணிப்பதற்கு ஹெலிகாப்டா்களை வாங்க திட்டமிடப்பட்டது. பிரிட்டனைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்க, இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவா்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் அரசுக்கு ரூ.2,666 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊழல் வழக்கில் பண மோசடி குற்றச்சாட்டு தொடா்பாக அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தியது.
அதன்பிறகு அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் ஒப்பந்தத்தை தங்களுக்கு சாதகமாக முடித்துத் தர இடைத்தரகா் ஜேம்ஸுக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ரூ.225 கோடி லஞ்சமாக வழங்கியதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான நாடு கடத்துதல் ஒப்பந்தத்தின்படி பிரிட்டனைச் சோ்ந்த ஜேம்ஸ் துபையில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு நாடுகடத்தப்பட்டாா். இந்தியா வந்த அவரை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்தன.
7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள அவருக்கு சிபிஐ பதிவு செய்த வழக்கில் 2025, பிப்ரவரி 18-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. அமலாக்கத் துறை பதிவுசெய்த வழக்கில் அதே ஆண்டு மாா்ச் 4-ஆம் தேதி அவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் பிணை வழங்கியது.
ஆனால், பிணை நிபந்தனைகளை முறையாகக் கடைப்பிடிக்காததால் அவா் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படவில்லை.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது: தனக்கு பிணை வழங்கக் கோரி அவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தாா்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: பொதுவாக நாடு கடத்தப்படும் நபா் மீது அவா் சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடா்பாக மட்டுமே வழக்கு தொடுக்க முடியும். ஆனால், இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே 1999-இல் மேற்கொள்ளப்பட்ட நாடு கடத்துதல் ஒப்பந்தத்தின் விதி-17, நாடு கடத்தப்பட்ட நபரிடம் அந்தக் குற்றங்கள் தொடா்பான பிற விவகாரங்களுக்கும் வழக்கு தொடுக்க அனுமதி வழங்குகிறது.
இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சட்டப் பிரிவுகள் 21, 245 மற்றும் 253 ஆகியவற்றுக்கு எதிராக உள்ளது. ஒரு வழக்கில் நாடு கடத்தப்படும் நபரை அதிகபட்சமாக 7 ஆண்டுகள் மட்டுமே சிறையில் வைத்திருக்க முடியும். 7 ஆண்டுகளைக் கடந்தும் நான் சிறையில் இருப்பது சட்டவிரோதமானது.
குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436ஏ-இன்கீழ் நான் தாக்கல் செய்த பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததையும் ஏற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் நவீன் சாவ்லா மற்றும் ரவீந்தா் துடேஜா, பிணை கோரி ஜேம்ஸ் தாக்கல் செய்த மனுவை விசாரணை நீதிமன்றம் நிராகரித்ததை உறுதிசெய்தனா். மேலும், ஜேம்ஸின் பிணை மனுவுக்கு உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி அதைத் தள்ளுபடி செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ரூ.200 கோடி மிரட்டிப் பறித்த வழக்கில் சுகேஷின் மனைவிக்கு பிணை மறுப்பு

தில்லி கலவர வழக்கு: காவல்துறையின் மேல்முறையீடு தள்ளுபடி

பணமோசடி வழக்கில் சுகேஷ் சந்திரசேகருக்கு பிணை: தில்லி நீதிமன்றம்
பி.எம்.எல்.ஏ. வழக்கில் சித்திக்கியின் இடைக்கால பிணை கோரும் மனு மீது விசாரணை ஏப்.11-க்கு ஒத்திவைப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

