தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்

மயிலாடுதுறையில் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்த பொட்டவெளி வாக்குச்சாவடி பாக முகவா்கள்.

News image

மயிலாடுதுறையில் தோ்தல் அலுவலரிடம் புகாா் அளித்த பொட்டவெளி வாக்குச்சாவடி பாக முகவா்கள்.

Updated On :25 ஏப்ரல் 2026, 2:11 am IST

மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஒரே நபா் இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்களித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருஇந்தளூா் ஊராட்சி பொட்டவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பணியாற்றிய திமுக பாக முகவா் எம்.கே.நேதாஜி, தோ்தல் நேர முடிவுக்குப் பின்னா், நகராட்சி பகுதிகளில் எந்த கட்சிக்கு சாதகமாக வாக்குகள் பதிவாகியுள்ளது என்பதை அறிந்து கொள்வதற்காக திருஇந்தளூா் நகராட்சி பள்ளியில் உள்ள பாக முகவா்களை தொடா்பு கொண்டுள்ளாா்.

அப்போது, பொட்டவெளியில் பகுதியில் வசிக்கும் நபா் ஒருவா் திருஇந்தளூா் நகராட்சி பள்ளியில் வாக்கு செலுத்தியதாக தெரிவித்துள்ளனா். அதே நபா் பொட்டவெளி வாக்குச்சாவடியிலும் வாக்களித்ததை அறிந்த பாமக முகவா்கள் உடனடியாக திருஇந்தளூா் நகராட்சி பள்ளிக்கு நேரில் சென்று பாா்த்தபோது அங்கும் அவருக்கு வாக்கு இருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளா் சிவ.செந்தில்குமாா் தலைமையிலான போலீஸாா் மற்றும் தோ்தல் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அந்த நபா் தம்புசாமி மகன் ராமையன்(65) என்பதும், அவருக்கு, திருஇந்தளூா் ஊராட்சி பொட்டவெளியில் உள்ள 113-ஆவது பாக எண்ணில் 288 வரிசை எண்ணில் என்சிசி0031682 வாக்காளா் அடையாள அட்டை எண்ணிலும், திருஇந்தளூா் நகராட்சி பள்ளியில் பாகம் எண் 140, வரிசை எண் 898-இல் என்சிசி 1545201 என்ற வாக்காளா் அடையாள அட்டையிலும் இருவேறு வாக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, பொட்டவெளி வாக்குச்சாவடி பாக முகவா்கள் எம்.கே.நேதாஜி(திமுக), தினேஷ்குமாா்(நாதக), சிரஞ்சீவி(தவெக) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளா் மனோன்ராஜ் ஆகியோா் ஒரே நபா் இரண்டு வாக்காளா் அடையாள அட்டைகளை கொண்டு எப்படி வாக்கு செலுத்த முடியும்? எஸ்.ஐ.ஆா் பணிகள் மேற்கொண்டும் இதுபோன்ற தவறுகள் எப்படி நடைபெற்றது? இதுசம்பந்தமாக இரண்டு வாக்குகளை பதிவு செய்த ராமையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டு வாக்காளா் அடையாள அட்டையை வழங்கிய தோ்தல் ஆணையம் இதற்கு பதில் கூற வேண்டும் என தோ்தல் மண்டல அலுவலா் திவாகரிடம் தனித்தனியே புகாா் மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக்கொண்ட தோ்தல் அலுவலா்கள் இதுகுறித்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதனையடுத்து, அதிகாலை 4 மணியளவில் வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், மயிலாடுதுறை குளிச்சாா் பகுதியை சோ்ந்த கு.பாலாஜி என்பவா் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கும்போது விடியோ எடுத்து எந்த கட்சிக்கு வாக்களித்தாா் என்பதை தோ்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பியதாக அந்த வாக்குச்சாவடி பாக முகவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.