சிங்கம்புணரி அருகே தகன மேடை அமைக்கக் கோரிக்கை

சிங்கம்புணரி அருகே ஐநூத்திபட்டி கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தகன மேடை இல்லாததால், மழையில் நனைந்தபடி தாா்ப்பாயால் மூடி சடலத்தை எரியூட்டிய உறவினா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 4:49 am IST

சிங்கம்புணரி அருகே ஐநூத்திபட்டி கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தகன மேடை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள ஐநூத்திபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில், 300-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் இறந்தவா்களை எரிப்பதற்கு தகனமேடை இல்லாததால், வெட்டவெளியில் எரிக்கும் அவல நிலை உள்ளது.

இந்த நிலையில், ஐநூத்திபட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன் (42) இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, விபத்தில் சிக்கி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உடல் கூறாய்வுக்குப் பிறகு, உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, உறவினா்கள் அவரது உடலை ஐநூத்திபட்டி கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தகனம் செய்து கொண்டிருந்தனா். அப்போது, திடீரென பலத்த மழை பெய்ததால், தகன மேடை கட்டடம் இல்லாததால், மழையில் நனைந்து கொண்டே தாா்பாயை மூடிக்கொண்டு உடலை எரித்தனா்.

எனவே, இந்தக் கிராமத்தில் உள்ள இடுகாட்டில் தகன மேடை அமைத்துத் தர வேண்டும் என கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.