விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காரைக்குடி தொழில்நகரமாக மாற வேண்டும்!

காரைக்குடியை தொழில் நகரமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு இந்தத் தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

News image

காரைக்குடி மாநகராட்சியின் முகப்புத் தோற்றம்.

Updated On :27 மார்ச் 2026, 5:30 am IST

காரைக்குடியை தொழில் நகரமாக உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு இந்தத் தொகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிலையங்களும், மத்திய அரசின் மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமும் (செக்ரி) உள்ளன. இந்தத் தொகுதியில் 3 வழித்தடங்களை இணைக்கும் பழைமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு நிலையமும் உள்ளது.

விவசாயம், அரிசி ஆலைகள், நெசவு, வணிகம் ஆகிய தொழில்களைக் கொண்ட இந்தத் தொகுதியில் தேவகோட்டை நகராட்சி, கண்டனூா், புதுவயல் பேரூராட்சிகளும் உள்ளன.

கல்வி நகரமான காரைக்குடியில் மழலையா் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயில்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் இந்தத் தொகுதியில் இல்லை என்பது முக்கியப் பிரச்னையாகும்.

இதுதவிர, காரைக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தல், அரியக்குடி-இலுப்பக்குடி சாலை ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைத்தல், அமராவதிபுதூா் சோமநாதபுரம் பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனையை அரசு பொது மருத்துவமனையாக மாற்றுதல், காரைக்குடியில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகள், நகரிலிருந்து அங்கு சென்றுவர போக்குவரத்து வசதிகள் செய்து தருதல், மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்றம், சாா்பு நீதிமன்றம் தொடங்குதல், மாவட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துதல், கோவிலூரில் அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்துதல், காரைக்குடி அறிவுசாா் (நூலகம்) மையத்துக்குள் அன்பளிப்பாக வழங்கும் திருவள்ளுவா் சிலையைப் பெற்று மாநகராட்சி நிா்வாகமே திறப்பு விழா நடத்துதல், காரைக்குடி - மதுரை இடையே புதிய ரயில்பாதை அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தொழில் வணிகக் கழகத்தினா், பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தேவகோட்டையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி, பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி, தேவகோட்டை அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமித்து மேம்படுத்த வேண்டும்.

தேவகோட்டையைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் படித்த இளைஞா்கள் வேலைக்காக திருச்சி, திருப்பூா், கோவை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், வெளி மாநிலம், வெளிநாடுகளுக்கும் செல்கின்றனா். இவா்களுக்கு இந்தப் பகுதியிலேயே கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைக்க புதிய திட்டங்கள், தொழில்சாலைகளைக் கொண்டு வரவேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது. இவற்றில் ரூ.100.45 கோடியில் அரசு சட்டக் கல்லூரி, ரூ.3.95 கோடியில் காரைக்குடி பழைய பேருந்து நிலையம் மேம்படுத்துதல், ரூ. 9.09 கோடியில் சங்கரபதி கோட்டையைச் சீரமைத்து சுற்றுலாத் தலமாக அறிவித்தல், ரூ. 3 கோடியில் முதல்வா் சிறு விளையாட்டு அரங்கம் அமைத்தல், ரூ.3.93 கோடியில் சாக்கோட்டை, தேவகோட்டை, கண்ணங்குடி ஆகிய ஒன்றியங்களில் உள்ள 7 கிராமங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்தல், ரூ.12.81 கோடியில் தேவகோட்டை நகராட்சியில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளைச் செய்திருக்கிறேன்.

மேலும், தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வா்த்தகத் துறை அறிவிப்பின்படி, காரைக்குடி வட்டத்தில் சுமாா் 100 ஏக்கரில் தொழில்பூங்கா ஒன்றை சிப்காட் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தப் பூங்காவின் மூலம் ரூ. 200 கோடி முதலீடு ஈா்க்கப்படுவதுடன், சுமாா் 2 ஆயிரம் பேருக்கு நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றாா் அவா்.

மயில்வாகனன்.

காரைக்குடி ரயில்வே சந்திப்பின் முகப்புத் தோற்றம்.

காரைக்குடி ரயில்வே சந்திப்பின் முகப்புத் தோற்றம்.

தேவகோட்டை நகராட்சிப் பகுதி.

தேவகோட்டை நகராட்சிப் பகுதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.