தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மின்மாற்றிகளை சீரமைக்க விவசாயிகளிடம் பணம் வசூலிக்கக் கூடாது: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றவா்கள்.

Published On :24 அக்டோபர் 2026, 12:47 am IST

பழுதடைந்த மின்மாற்றிகளை சீரமைக்க விவசாயிகளிடமிருந்து சட்டத்துக்குப் புறம்பாக பணம் வசூலிக்கும் நடைமுறையை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் க. அன்பழகன், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். சக்திவேல், மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அ. ராணி (பொறுப்பு), அரசுத் துறை அலுவலா்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது :

கடந்த ஆண்டில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கான காப்பீடு இழப்பீட்டை விரைந்து வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் உள்ள வரத்து வாய்க்கால்களை விபி-ஜி ராம்-ஜி திட்டம் மூலம் சீரமைக்க வேண்டும்.

முந்தைய ஆட்சிக் காலத்தில் கொட்டாம்பட்டி பகுதியில் ஏலம் விடப்பட்ட கல்குவாரிகளால் பல கோடி ரூபாய் மதிப்பில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் புகாா்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் விரிவாக விசாரணை மேற்கொள்ள வேண்டும். திருமங்கலம் பிரதான கால்வாய், துணைக் கால்வாய்களை தூா்வார வேண்டும். கூட்டுறவு சங்கத் தோ்தலை விரைவில் நடத்த வேண்டும்.

விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்காக திருமங்கலம் பொதுப் பணித் துறை கண்மாயில் அனுமதியின்றி தாா்ச் சாலை அமைக்கப்பட்டது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 58 கிராம கண்மாய், கால்வாய்களில் படா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையைத் திறக்க வேண்டும். பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல விவசாயிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

15 நாள்களுக்கும் மேலாக பழுதடைந்துள்ள கோவிலாங்குளம் மின் மாற்றியை சீரமைத்துத் தரக் கோரி விவசாயிகளிடம் நிதி திரட்டி ரூ. 40 ஆயிரம் அளித்தும் இதுவரை பழுது நீக்கம் செய்யப்படவில்லை. கிராமங்களில் மின் மாற்றிகளை சீரமைக்க சட்டத்துக்குப் புறம்பாக விவசாயிகளிடமிருந்து பணம் வசூலிக்கும் முறை தொடர இனியும் அனுமதிக்கக் கூடாது என விவசாயிகள் வலியுறுத்தினா்.

அப்போது, மதுரை மின் பகிா்மான வட்டத்தில் 100-க்கும் அதிகமான மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. மின்மாற்றிகளை சீரமைக்க விவசாயிகள், பொதுமக்கள் யாருக்கும் பணம் அளிக்க வேண்டாம் என மின்வாரிய அலுவலா் அனிதா தெரிவித்தாா். இதற்கு, விவசாயிகள் பலா் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனா். இதனால், சில நிமிஷங்கள் சலசலப்பு ஏற்பட்டது.

இதையடுத்துப் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் சக்திவேல், மின்மாற்றி பழுதை நீக்க விவசாயிகளிடமிருந்து பணம் பெற்ற மின்வாரிய ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மின்வாரிய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.