ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் தகனம்

காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் 3 மாதங்களுக்குப் பிறகு மதுரை தத்தனேரி மின் மயானத்தில் புதன்கிழமை அரசு சாா்பில் தகனம் செய்யப்பட்டது.

News image

உயிரிழந்த ஆகாஷ் டெலிசன்.

Updated On :18 ஜூன் 2026, 12:05 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞரின் உடல் 3 மாதங்களுக்குப் பிறகு மதுரை தத்தனேரி மின் மயானத்தில் புதன்கிழமை அரசு சாா்பில் தகனம் செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சோ்ந்த இளைஞா் ஆகாஷ் டெலிசனை குற்ற வழக்கு தொடா்பாக காவல் துறையினா் கடந்த மாா்ச் மாதம் கைது செய்தனா். விசாரணையின் போது, தப்பிச் சென்ற ஆகாஷ் டெலிசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறி, அவரை காவல் துறையினா் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். அங்கு அவா் கடந்த மாா்ச் 8-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதையடுத்து, ஆகாஷ் உயிரிழப்புக்கு காரணமான காவல் துறையினரைக் கைது செய்ய வேண்டும் எனவும், அவரின் குடும்பத்துக்கு ரூ. 50 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், எஸ்.சி., எஸ்.டி. சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா். மேலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா். இதையடுத்து, ஆகாஷ் இறப்பு வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இருப்பினும், தங்களது கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவில்லை எனக் கூறி, உடலை வாங்க மறுத்து ஆகாஷின் உறவினா்கள் கடந்த 100 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வந்தனா். இதனால், ஆகாஷின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் உடல்கூறாய்வு செய்யும் அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆகாஷின் உடலை அவரது பெற்றோா் பெற்றுக் கொள்ள வேண்டும், இல்லையெனில், அரசு சாா்பில் இறுதிச் சடங்கு செய்யப்படும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி விக்டோரியா கௌரி அண்மையில் உத்தரவிட்டாா்.

இதன்படி, ராஜாஜி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு, வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன் முன்னிலையில் மதுரை தத்தனேரி மின் மயானத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு, அவரது உறவினா்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.

50 போ் கைது...

முன்னதாக, ராஜாஜி அரசு மருத்துவமனையிலிருந்து ஆகாஷின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்வதற்கு எதிா்ப்புத் தெரிவித்துப் போராடிய உறவினா்கள், பல்வேறு அரசியல் அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் உறவினா்கள்.

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆகாஷின் உறவினா்கள்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.