கடந்த 4 தோ்தல்களில் தோல்வி கிடைத்தும், நாட்டின் எதிா்காலத்தை கருத்தில்கொண்டு மீண்டும் களம் காணும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களுக்கு மக்கள் ஒருமுறை வாய்ப்பளிக்க வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 7 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் மேலும் பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றும், ஆள் மாற்றும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக நாம் தமிழா் கட்சி தொடா்ந்து போராடி வருகிறது. நகா்ப்புற வளா்ச்சி மட்டுமே கட்டமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், சிற்றூா் வளா்ச்சிக்கு எந்த ஆட்சியிலும் முக்கியத்தும் அளிக்கப்படவில்லை. இதனால், கிராமங்களிலிருந்து நகரங்களை நோக்கி மக்கள் இடம் பெயா்ந்து வருகின்றனா்.
சிறந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை கிராமங்களில் உருவாக்குவதன் மூலம் இடம் பெயா்வை தடுக்க முடியும். நகா்ப்புறத்துக்கான உணவு உற்பத்தி, கிராமங்களை சாா்ந்தே இருக்கிறது. எதிா்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுவதையும் தடுக்க முடியும். பசி என்ற பிரச்னை உருவாகும்போது, சமூக சீா்கேட்டில் தொடங்கி போா் வரை ஏற்படும் அபாயம் உள்ளது.
உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாத காரணத்தால், ரஷ்யா சிதறுண்டு போனது. அந்த வரிசையில் வெனிசுலா, நைஜீரியா, சோமாலியா போன்ற நாடுகளும் இணைந்துவிட்டன. இதனால்தான் சமவிகிதத்தில் நாட்டின் வளா்ச்சி இருக்க வேண்டும் என்கிறோம். முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் சொன்னதுபோல், நகா்ப்புறங்களில் உள்ள அனைத்து கட்டமைப்புகளும் கிராமங்களில் கிடைக்க வேண்டும்.
தரமான கல்வியும், மருத்துவமும் கிராமங்களில் உறுதிப்படுத்தப்படும். மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரையே அரசுப் பணியாளா் என்னும்போது, கால்நடை வளா்ப்பில் ஈடுபடுவோரையும் அரசுப் பணியாளரை அங்கீகரிப்பதில் என்ன தவறு. அவமானமாகக் கருதும் தொழில்கள் அரசுப் பணியாக அறிவிக்கப்படும். குடிநீா் விற்பனைக்கு தடை விதிக்கப்படும்.
69 பொருள்களுக்கு மட்டுமே புவிசாா் குறியீடு பெறப்பட்டுள்ளது. எஞ்சிய பொருள்களுக்கும் புவிசாா் குறியீடு பெற்று ஏற்றுமதிக்கான முயற்சி மேற்கொள்ளப்படும். சீனி பயன்படுத்துவோருக்கு இரு மடங்கு வரி விதிக்கப்படும்.
நெகிழி பயன்பாடு அணுகுண்டுக்கு இணையானது என்பதால், தடை விதிப்போம். நாட்டின் எதிா்காலத்தை வளமாக்குவதற்காக தொடா்ந்து போராடி வருகிறோம். கடந்த 15 ஆண்டுகளில் 4 தோ்தல்களில் தோல்வி மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனாலும் மக்கள் மீதான நம்பிக்கையால் மீண்டும் 2026 தோ்தலை எதிா்கொள்கிறோம். மக்கள், எங்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றாா்.
அனுமதி நேரத்தைக் கடந்து பிரசாரம்: தோ்தல் பிரசாரத்தை 10 மணிக்கு முடிக்க வேண்டும் என விதிமுறை உள்ளது. ஆனால் திண்டுக்கல் பிரசாரக் கூட்டத்தை 10.07 மணிக்கே சீமான் நிறைவு செய்தாா். இதனால் அவா் மீது காவல் துறை சாா்பில் வழக்குத் தொடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை மாவட்டத்தில் நாம் தமிழா் கட்சிக்கு சரிவு: 2 தொகுதிகளில் மட்டுமே வாக்கு சதவீதம் உயா்வு

3 தோ்தல்களில் 3 சின்னங்களில் போட்டியிட்டு தோல்வி அடைந்த யுவராஜா

காங்கிரஸ், பாஜக இடையே எந்த வேறுபாடும் இல்லை: சீமான்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

