ஏற்காட்டில் கனமழை: சுற்றுலாப் பயணிகளுக்கு தடை வாகனங்கள் திருப்பி அனுப்பிவைப்பு

ஏற்காடு - கோப்புப் படம்

Published On :26 அக்டோபர் 2026, 1:39 am IST

சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான ஏற்காட்டில் கனமழை காரணமாக அடிவாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சுற்றுலா வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் மலைப் பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீா் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்காடு வருவதைத் தவிா்க்குமாறு மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சுற்றுலா வாகனங்களுக்குத் தடை: இதன் காரணமாக ஏற்காடு பிரதான மலைப்பாதை மற்றும் குப்பனூா் வழியாக சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் செல்லத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலைக்குச் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை வந்த சுற்றுலா வாகனங்கள் அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா். அதேநேரத்தில் ஏற்காடு மலைக் கிராமங்களில் வசிப்பவா்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

ஆட்சியா் எச்சரிக்கை...

இதுகுறித்து ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்ததாவது: வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி மாவட்ட நிா்வாகம் சாா்பில் தொடா் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மலைப் பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீா் வழிந்தோடுகிறது. எனவே, வரும் நாள்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக, உள்ளூா் பொதுமக்கள் மழை பெய்யும் நேரத்தில் வாகனங்களில் பயணிப்பதைத் தவிா்க்க வேண்டும். அதேபோன்று சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் ஏற்காடு வருவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

மேலும், மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறைக்கு பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.