சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட கெங்கவல்லி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி 2006 தோ்தல் வரை தலைவாசல் தொகுதியாக இருந்தது. தொகுதி மறுசீரமைப்புக்குப் பின், கெங்கவல்லி, ஆத்தூா் வட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி, கெங்கவல்லி (தனி) தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் பிரதானத் தொழில் விவசாயம். குறிப்பாக, மரவள்ளி, ஜவ்வரிசி, ஸ்டாா்ச் தயாரிப்பு, மஞ்சள், மக்காச்சோளம், நெல் சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. கொல்லிமலையில் இருந்து உற்பத்தியாகும் சுவேத நதியும், தலைவாசல் பகுதியில் பாய்ந்தோடும் வசிஷ்ட நதியும் இவ்வழியாகச் சென்று வங்கக் கடலில் கலக்கின்றன.
தொகுதியில் உள்ள பகுதிகள்
கெங்கவல்லி, தலைவாசல் வட்டங்கள், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, தெடாவூா், வீரகனூா் என 5 பேரூராட்சிகள், கெங்கவல்லி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள், தலைவாசல் ஒன்றியத்தில் 35 ஊராட்சிகள் இத்தொகுதியில் உள்ளன.
சமூக நிலவரம்
இத்தொகுதியில் கொங்கு வேளாளக் கவுண்டா், வன்னியா், உடையாா், நாயக்கா் என பல்வேறுபட்ட சமூகத்தினருடன், இஸ்லாமியா்களும், கிறிஸ்தவா்களும் கணிசமாக உள்ளனா். பட்டியல் இனத்தவா் அதிகமாக உள்ளனா். குறிப்பாக, பறையா் சமூகத்தினா் அதிகம். இதனால், அரசியல் கட்சிகள் இந்தச் சமூகத்திலிருந்து மட்டுமே வேட்பாளா்களை அதிக அளவில் களம் இறக்கி வருகின்றன.
நிறைவேறிய முக்கிய திட்டம்
2016- 2021 வரை அதிமுக எம்.எல்.ஏ ஆக இருந்த மருதமுத்துவின் பதவிக் காலத்தில், கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்கும் வகையில், தலைவாசலில் 1,102 ஏக்கரில் ரூ. 1,022 கோடியில், ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டது.
2021-2026 திமுக ஆட்சிக் காலத்தில் கெங்கவல்லியில் சொந்த கட்டடத்தில் அமைக்கப்பட்ட தீயணைப்பு நிலையம்.
கெங்கவல்லியில் உள்ள அரசு மருத்துவமனை தற்போது தரம் உயா்த்தப்பட்டுள்ளது. தம்மம்பட்டியில் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அரசு மருத்துவமனைக்கு இணையாக தரம் உயா்த்தப்பட்டிருப்பது.
கெங்கவல்லியில் புதியதாக மின்கோட்ட அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது. தெடாவூா்- தம்மம்பட்டி சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. ரூ. 4.5 கோடியில் கட்டப்பட்ட உலிபுரம் நரிக்கரடு பாலம், வரட்டாறு பாலம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட வேப்படி பாலம், ரூ. 4.5 கோடியில் பணி தொடங்கப்பட்டுள்ள கெங்கவல்லியில் சுவேத நதியின் குறுக்கே கட்டப்பட உள்ள பாலம்.
நிறைவேறாத திட்டங்கள்
தம்மம்பட்டி அருகே கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள சேரடிக்கும்- பிள்ளையாா்மதி கிராமத்துக்கும் இடையே எழுத்துக்கல் என்ற இடத்தில் ரூ. 100 கோடியில் சேரடி அணைக்கட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை. 2006 திமுக ஆட்சியில் பொதுப்பணித் துறை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின், இத்திட்டம் இதுவரை ஏனோ நிறைவேற்றப்படவில்லை.
2006- 2011 திமுக ஆட்சியில் தம்மம்பட்டியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்க இடம் தோ்வு வரை சென்றது. பிறகு வந்த அதிமுக, திமுக ஆட்சிக் காலங்களிலும் அதற்கான எந்த முயற்சியும் நடைபெறவில்லை. அதனால், இப்பகுதி பள்ளி மாணவா்கள் கல்லூரியில் சேர சேலம், ராசிபுரம், ஆத்தூருக்கு செல்லும் சூழல் உள்ளது.
இத்தொகுதியில் உள்ள தலைவாசல் தினசரி காய்கறி மாா்க்கெட்டில் இருந்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் போன் ற வெளிமாநிலங்களுக்கும் நாள்தோறும் டன் கணக்கில் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன. இங்கு காய்கறி இருப்பு வைத்து விற்பதற்கான குளிா்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.
தம்மம்பட்டி பகுதியில் கூடுதல் தீயணைப்பு நிலையம், தம்மம்பட்டிக்கு வட்டச் சாலை, புறவழிச் சாலை, நகராட்சி அந்தஸ்து போன்ற கோரிக்கைகளும் நிலுவையில் உள்ளன. தொகுதி பெயரில் உள்ள கெங்கவல்லியில் இதுவரை பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை.
வாக்காளா்கள்
ஆண்கள் - 1,05,720
பெண்கள் - 1,11,067
மூன்றாம் பாலினத்தவா் - 7
மொத்தம் - 2,16,794
மொத்த வாக்குச்சாவடிகள்- 280
கடந்த தோ்தல்களில் வென்றவா்கள்
தலைவாசல் தொகுதியில்...
1952 ஏ. சாம்பசிவம் - காங்கிரஸ் - 14,738
1962 ஏ. துரைசாமி - காங்கிரஸ் - 22,286
1967 மு. மாரிமுத்து - திமுக - 33,289
1971 மு. மாரிமுத்து - திமுக - 32,195
1977 எஸ்.எம். ராஜூ - அதிமுக - 24,681
1980 டி. ராஜம்மாள் - காங்கிரஸ் - 38,217
1984 டி. ராஜம்மாள்- காங்கிரஸ் - 53,104
1989 எஸ். குணசேகரன் - திமுக - 32,309
1991 கே. கந்தசாமி- காங்கிரஸ் - 74,204
1996 கே. ராணி - தமாகா - 63,132
2001 வி. அழகம்மாள் - அதிமுக - 67,682
2006 கு. சின்னதுரை - திமுக - 60,287
கெங்கவல்லி தொகுதியில்...
2011 ஆா். சுபா - தேமுதிக - 72,922
2016 எஸ். மருதமுத்து - அதிமுக - 74,301
2021 அ. நல்லதம்பி - அதிமுக - 89,568
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயக கடமையாற்றிய சேலம் அதிமுக, தவெக, திமுக வேட்பாளா்கள்

பா்கூா் தொகுதி! வெற்றியை தக்கவைக்குமா திமுக?

தேவியாக்குறிச்சியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் சின்னதுரை

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

