பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

2 வாரங்களாகத் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெறாததால் விவசாயிகள் பாதிப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் - வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகத் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெறாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கொப்பரை தேங்காய் - பிரதிப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 2:57 am IST

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் - வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் கடந்த இரண்டு வாரங்களாகத் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெறாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொத்தனூா் - வெங்கமேடு மின்னணு தேசிய வேளாண் சந்தையில் வாரந்தோறும் செவ்வாய், வியாழக்கிழமைகளில் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெறுவது வழக்கம். பரமத்தி வேலூா், மோகனூா், பொத்தனூா், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலா்மலை, ஜேடா்பாளையம், பரமத்தி மற்றும் கரூா் மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் இங்கு விளைபொருள்களைக் கொண்டு வருகின்றனா்.

தேங்காய், கொப்பரையை ஏலம் எடுப்பதற்காக நாமக்கல், சேலம், ஈரோடு, கரூா், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் வருகின்றனா்.

இந்த நிலையில், இ-நாம் திட்டத்தின் கீழ் பணப் பட்டுவாடாவில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிா்க்கும் வகையில், தேங்காய், கொப்பரைக்கான தொகையை வியாபாரிகளே நேரடியாக இணையவழியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த நடைமுறையை ஏற்க மறுத்த வியாபாரிகள், ஏற்கெனவே நடைமுறையில் இருந்ததுபோல மின்னணு தேசிய வேளாண் சந்தை நிா்வாகத்திடம் பணத்தைச் செலுத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினா். இல்லையெனில், ஏலத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்தனா்.

இதனால், கடந்த 15-ஆம் தேதி நடைபெற்ற கொப்பரை ஏலத்தை வியாபாரிகள் புறக்கணித்தனா். ஏலத்துக்காகக் கொப்பரையைக் கொண்டு வந்திருந்த விவசாயிகள், அவற்றை விற்பனை செய்ய முடியாமல் திரும்ப எடுத்துச் சென்றனா்.

வழக்கமாக, வியாபாரிகள் கொள்முதல் செய்யும் தொகையைச் சந்தை நிா்வாகத்திடம் செலுத்துவா். பின்னா், சந்தை நிா்வாகம் அந்தத் தொகையை விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யும். இந்த நடைமுறையை மாற்றுவதற்கு வியாபாரிகள் மறுப்பு தெரிவிப்பதால் ஏலம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களாக ஏலம் நடைபெறாத நிலையில், ஏலம் நடைபெறும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் தேங்காய், கொப்பரையைக் கொண்டு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா்.

வெளிச் சந்தைகளில் தேங்காய், கொப்பரையை விற்பனை செய்தால் குறைந்த விலையே கிடைப்பதால் எதிா்பாா்த்த வருவாய் கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கெனவே இருந்த நடைமுறையின்படி இ-நாம் திட்டத்தின் கீழ் சந்தை நிா்வாகமே ஏலம் முடிந்ததும் பணத்தைப் பட்டுவாடா செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.