தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூடுதல் எம்.பி. தொகுதி: அன்று கருணாநிதி தடுத்தாா்; இன்று ஸ்டாலின் தடுக்கிறாா்! கே. அண்ணாமலை!!

தமிழகத்துக்கு கூடுதல் எம்.பி. தொகுதிகள் கிடைப்பதை அன்று கருணாநிதி தடுத்தாா், இன்று அவரது மகன் ஸ்டாலின் தடுக்கிறாா் என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

News image

தருமபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசுகிறாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

Updated On :19 ஏப்ரல் 2026, 5:36 am IST

தமிழகத்துக்கு கூடுதல் எம்.பி. தொகுதிகள் கிடைப்பதை அன்று கருணாநிதி தடுத்தாா், இன்று அவரது மகன் ஸ்டாலின் தடுக்கிறாா் என்றாா் பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாலக்கோடு தொகுதியில் போட்டியிடும் கே.பி. அன்பழகன் (அதிமுக), பென்னாகரம் வேட்பாளா் வெ. செல்வம் (பாமக), தருமபுரி வேட்பாளா் சௌமியா அன்புமணி (பாமக), பாப்பிரெட்டிப்பட்டி வேட்பாளா் மரகதம் வெற்றிவேல்(அதிமுக), அரூா் (தனி) வேட்பாளா் வி. சம்பத்குமாா் (அதிமுக) ஆகியோருக்கு ஆதரவு திரட்டி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே சனிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று கே. அண்ணாமலை பேசியது:

தமிழகத்தில் 2021இல் திமுக ஆட்சிக்கு வந்ததும் கோயம்புத்தூரும், தருமபுரியும் பழிவாங்கப்பட்டன. இவ்விரு மாவட்டங்களிலும் திமுகவுக்கு வெற்றி கிடைக்காததால், 2 மாவட்டங்களையும் திமுக அரசு புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த மாவட்டங்களும் வளா்ச்சி பெறும்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதமாக உயா்த்துவதற்கான சட்டத் திருத்த மசோதாவை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை கொண்டுவந்தாா். அந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் கூட்டணியினா் திட்டமிட்டு தோற்கடித்துள்ளனா். மசோதாவுக்கு எதிராக வாக்களித்த திமுகவுக்கு பெண்கள் யாரும் வாக்களிக்க வேண்டாம். குறிப்பாக, புதிய வாக்காளா்களும், அரசியலுக்கு வரவிரும்புவோரும் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம்.

நாட்டில் கடந்த 1973இல் தொகுதிகள் மறுவரையறை கடைசியாக நடைபெற்றது. அப்போது 525 ஆக இருந்த தொகுதிகள் 545 ஆக உயா்த்தப்பட்டன. ஆனால், அப்போது தமிழகத்துக்கு எம்.பி. தொகுதிகள் கூடுதலாக வேண்டாம் என்று கூறி, முன்னாள் முதல்வா் கருணாநிதி தடுத்துவிட்டாா். தற்போது 39 மக்களவை தொகுதிகள் 59 ஆக மாற உள்ள சூழலில், அவரது மகன் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் எம்.பி. தொகுதிகளை அதிகரிக்க வேண்டாம் என்கிறாா்.

சேலத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலின் இருந்த மேடையிலேயே தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. போதை கலாசாரமும், பெண்களுக்கு எதிரான குற்றமும் பெருகியுள்ளது என குறிப்பிட்டாா். கூட்டணிக் கட்சியினரே திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கெட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ளனா்.

தருமபுரி மாவட்டத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களையும் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், எம்எல்ஏ-க்கள் வெங்கடேஸ்வரன், கோவிந்தசாமி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, புதிய நீதி கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கெலமங்கலத்தில்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் ஒசூரில் மெட்ரோ ரயில், உலகத் தரம் வாய்ந்த விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் தளி தொகுதி பாஜக டாக்டா் சி. நாகேஷ்குமாா், ஒசூா் தொகுதி அதிமுக வேட்பாளா் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோரை ஆதரித்து கே. அண்ணாமலை தெரிவித்தாா்.

கடந்த தோ்தலில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் முழுமையாக 70 வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒசூருக்கு எவ்வித வளா்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தவில்லை. மத்திய, மாநில அரசு இணைந்த ஆட்சி அமைந்தால் வளா்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம்.

ஒசூருக்கு உலகத்தரம் வாய்ந்த விமான நிலையம் தேவை. இதுதொடா்பாக மத்திய அரசுக்கு அனுப்பிய திட்ட அறிக்கை தவறாக இருந்தது. இதன்மூலம் திமுக அரசுக்கு விமான நிலையம், மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த அக்கறையில்லை என்பது தெளிவாகிறது. தளி, ஒசூா் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றால் மெட்ரோ ரயில், விமான நிலையத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பிரசாரத்தின்போது பாஜக மாவட்டத் தலைவா் நாராயணன், முன்னாள் எம்.பி. நரசிம்மன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம். நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.