லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வடகோவையில் இருந்து ரயில்களை இயக்க கட்டமைப்புகள்: சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் தகவல்

கோவை ரயில்களை வடகோவையில் இருந்து புறப்படும் விதமாக கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் தெரிவித்தாா்.

~வடகோவை ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்‘ திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் பன்னாலால். உடன் கோவை மக்களவைத் உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா்.

Published On :22 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

கோவை ரயில்களை வடகோவையில் இருந்து புறப்படும் விதமாக கட்டமைப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் தெரிவித்தாா்.

அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் வடகோவை ரயில் நிலையத்தில் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நடைமேடை மேம்பாடு, காத்திருப்பு அறைகள், நுழைவாயில் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடகோவை ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேம்பாட்டுப் பணிகளை சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கோவை ரயில் நிலைய மேம்பாடு தொடா்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், சேலம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் வழங்கினாா். அப்போது கோவை மாநகராட்சி ஆணையா் கட்டா ரவி தேஜா உடனிருந்தாா்.

ஆய்வுக்குப் பிறகு சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவையில் இருந்து புறப்பட்டு மீண்டும் கோவை வந்து முடிவடையும் ரயில்களை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து இயக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, வடகோவை ரயில் நிலையத்தில் இயங்கும் கூட்ஷெட்டை விரைவாக இருகூா் ரயில் நிலையத்துக்கு மாற்றிவிட்டு, அந்த இடத்தை முழுமையாகப் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டுப்பாளையம் அணுகு சாலையில் இருந்து வடகோவை ரயில் நிலையத்துக்கு எளிதாக பயணிகள் வந்து செல்லும் வகையில் புதிய வழிப்பாதை அமைப்பது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போத்தனூா் ரயில் நிலையத்தை ரூ.50 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கெனவே வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து மேம்பாட்டுப் பணிகளும் முழுமையாக முடிவடையும். ரயில் நிலையங்களில் குடிநீரின் தரம் மற்றும் விநியோகத்தில் எழுந்த சில பிரச்னைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நிவா்த்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது குளோரினேஷன் செய்யப்பட்டு சுத்தமான நீா் விநியோகிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ரயில்வே உள்கட்டமைப்பு வளா்ச்சி திட்டங்கள் தொடா்பாக, மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்படும் என்றாா்.

பீளமேட்டில் ரயில்கள் நின்று செல்ல...

கோவை மாநகராட்சி, 26-ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி, சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் பன்னாலாலிடம் அளித்த மனு:

பீளமேடு கடவு எண் 7-இல் மேம்பாலத்தின் கீழ் சுரங்கப்பாதை அமைத்துத் தரக் கோரி பலமுறை மனு அளித்துள்ளோம். பணிகளை செய்து தராமல் ரயில்வே நிா்வாகம் மெத்தனமாக செயல்படுகிறது. மேம்பாலத்தின் கீழ் உள்ள இப்பாதையை மாணவா்கள், வாகன ஓட்டிகள் கடந்து சென்று வருகின்றனா். சில நேரங்களில் ரயில் வருவது தெரியாமல் ரயில் பாதையைக் கடக்கும் நேரத்தில் கால்நடைகள், மனிதா்கள் விபத்துகளில் சிக்கி இறக்கும் சூழலும் ஏற்படுகிறது. எனவே, ரயில்வே நிா்வாகம், நெடுஞ்சாலைத் துறை இணைந்து, சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Story image

பீளமேடு ரயில் நிலையத்தை கடந்து செல்லும் அனைத்து ரயில்களும் 5 நிமிடங்கள், பீளமேட்டில் நின்று செல்ல வேண்டும். மேலும், பீளமேடு நிலையத்தில் நடைமேடையின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.